இலங்கை

நீதிமன்றத் தீர்ப்பின் பின் ஞானசார தேரர் தலைமறைவு!

பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு 2019 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட ஜனாதிபதி மன்னிப்பை உயர் நீதிமன்றம் இரத்து செய்ததைத் தொடர்ந்து, அவர் தற்போது தலைமறைவாகியுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அவருக்கு விதிக்கப்பட்ட ஆறு ஆண்டு சிறைத்தண்டனையில் எஞ்சிய காலத்தை அனுபவிப்பதற்காக அவரை மீண்டும் சிறையில் அடைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக சிறைச்சாலை அதிகாரிகள் இராஜகிரிய நாவல பகுதியில் அமைந்துள்ள அவரது விகாரைக்குச் சென்றுள்ளதாகவும், எனினும் அங்கு அவர் இருக்கவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

ஞானசார தேரர் தற்போது தங்கியிருக்கும் இடம் குறித்து தமக்குத் தெரியாது என விகாரையில் உள்ள ஏனைய தேரர்கள் சிறைச்சாலை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளதாக அந்த ஊடக செய்தி தெரிவிக்கின்றது.

2019 ஆம் ஆண்டு ஞானசார தேரருக்கு அன்றைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வழங்கப்பட்ட விசேட ஜனாதிபதி மன்னிப்பு செல்லுபடியற்றது மற்றும் தன்னிச்சையான தீர்மானம் எனத் தீர்ப்பளித்த உயர் நீதிமன்றம், இதன் மூலம் பொதுநம்பிக்கை மீறப்பட்டுள்ளதாக அண்மையில் தீர்ப்பளித்தது.

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் கீழ் ஆறு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த அவர், சுமார் ஒன்பது மாதங்கள் சிறைவாசம் அனுபவித்த நிலையில் 2019 மே மாதத்தில் இந்த ஜனாதிபதி மன்னிப்பைப் பெற்று விடுதலையானார். உயர் நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து, உரிய சட்ட மற்றும் சிறைச்சாலை விதிமுறைகளுக்கு அமைவாக அவர் தனது சிறைத்தண்டனையின் எஞ்சிய காலத்தை அனுபவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *