உலகம்

மத்திய கிழக்கில் அமெரிக்கா காவலராகச் செயற்படத் தேவையில்லை ; ஈரான் ஜனாதிபதி

மத்திய கிழக்குப் பிராந்தியத்திற்கு அமெரிக்கா காவலராகச் செயற்படத் தேவையில்லை என ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் நடைபெறும் பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக 11 முக்கிய பொருளாதார நாடுகளின் தலைவர்கள் இந்தியா சென்றுள்ள நிலையில், ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன் பிரதமர் நரேந்திர மோடியை நேற்று சந்தித்துப் பேசினார்.

தொடர்ந்து இன்று மலேசியப் பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இதன்போது கருத்து தெரிவித்த ஈரான் ஜனாதிபதி, ஈரான் மற்றும் அதன் பிராந்திய நாடுகளின் ஒருமைப்பாடு மற்றும் பாதுகாப்பை பிராந்தியத்தில் உள்ள முக்கிய சக்திகளும் அந்நாடுகளும் இணைந்தே உறுதி செய்ய முடியும் எனத் தெரிவித்தார்.

மேலும், மத்திய கிழக்குப் பிராந்தியத்திற்கு அமெரிக்கா காவலராகச் செயற்படத் தேவையில்லை என்றும், ஈரான் மக்கள் பல்வேறு அநீதிகளை எதிர்கொண்ட போதிலும், தாம் போரைத் தொடர விரும்பவில்லை என்றும், அமைதிக்கே முன்னுரிமை அளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் ஈரானின் உச்சத் தலைவர் அயத்துல்லா அலி கொமெய்னி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, பெப்ரவரி 28ஆம் திகதி முதல் இரு தரப்புக்கும் இடையிலான மோதல் தொடர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்குப் பதிலடியாக ஈரானும் அமெரிக்க ஆதரவு நாடுகள் மீது தாக்குதல்களை நடத்தி ஹோர்முஸ் நீரிணையை மூடியுள்ளது.

உலகின் முக்கிய எரிபொருள் வர்த்தகப் பாதைகளில் ஒன்றான ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டுள்ளதால் பல்வேறு நாடுகளில் எரிபொருள் விநியோக பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

இந்நிலையில், ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கான முயற்சிகளில் அமெரிக்கா ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஆறு மாதங்களுக்கும் மேலாக நீடித்து வரும் மோதல் காரணமாக மசகு எண்ணெய் விலையும் அதிகரித்து வருவதுடன், இந்த வாரம் ஒரு கொள்கலன் மசகு எண்ணெயின் விலை 100 அமெரிக்க டொலருக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *