கவிதைகள்
“ஆவணிச் சதுர்த்தியை அகத்தில் இருத்துவோம்” … கவிதை …

ஆனை முகத்தான் ஆறுமுகத்தான் அண்ணன்
பானை வயிற்றோன் பரமனின் புதல்வன்
ஞான முதல்வன் நம்பினால்க் கைவிடான்
ஆவணிச் சதிர்த்தியில் அவதாரம் செய்திட்டான்
சதுர்த்தி பலவந்தாலும் ஆவணியின் சதுர்த்தியே
அனைவரும் போற்றும் அருள்நிறைந்த சதுர்த்தி
எம்பெருமான் விநாயகன் இடர்களைய அவதாரம்
எடுத்த திருநாளாக எல்லோரும் நினைக்கின்றார்
காணா பத்தியத்தின் கருப்பொருளே கணபதியே
காணும் இடமெல்லாம் இருப்பவரும் கணபதியே
இலகுவாய் எல்லோரும் வழிபடும் வண்ணம்
ஆவணிச் சதுர்த்தியிலே அவதாரம் செய்தார்
ஜப்பானில் சீனாவில் கம்போடி தாய்லாந்தில்
இப்போதும் கணபதியை வழிபாடு செய்கின்றார்
நேபாளம் தொடக்கம் நீலாங்கரை வரைநீண்டு
ஈழத்திரு நாட்டினிலும் தொடர்கிறது வழிபாடு
கொளுக்கட்டை படைத்துக் கொண்டாடி மகிழ்வர்
கூடியே எல்லோரும் ஊர்வலமாய் செல்வர்
எம்பெருமான் கணபதியைக் களியாலே செய்து
எல்லோரும் ஏந்தி நீர்நிலையில் கரைப்பார்
ஆலயங்கள் தோறும் அபிஷேகம் நடக்கும்
அடியார்கள் விநாயகனின் சதுர்த்தியைப் பிடிப்பார்
பக்தியுடன் விநாயகர் ஊர்கோலம் நடக்கும்
பார்த்திருப்பார் பக்தியிலே மூழ்கியே நிற்பார்
சாணத்தில் இருப்பார் சந்தணத்தில் இருப்பார்
மஞ்சளில் இருப்பார் மரத்தடியிலும் இருப்பார்
விரும்பிடும் வகையில் இருப்பார் விநாயகர்
ஆவணிச் சதுர்த்தியை அகத்தில் இருத்துவோம் !
மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ் மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் ….. அவுஸ்திரேலியா
![]()