இலங்கை

இலங்கையில் இடம்பெற்ற உரிமை மீறல்கள், மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள்; ஐ. நா. அறிக்கையை வரவேற்கிறது தமிழரசுக்கட்சி 

ஊழல் ஒழிப்பு, போதைப்பொருள் பாவனைக்கு எதிராக அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகளை பாராட்டுகிறோம்.பலர் தற்போது கைது செய்யப்படுகிறார்கள். பலரது கண்ணீருக்கு காரணமாக இருந்தவர்கள் இன்று கண்ணீர் வடிக்கிறார்கள். இதனை கர்ம வினை என்றே கூற வேண்டும். எனத்தெரிவித்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் எம்.பி.யான பத்மநாதன் சத்தியலிங்கம், இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் ஐ.நா. அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையை நாங்கள் வரவேற்கிறோம் எனவும் கூறினார்.

பாராளுமன்றத்தில் இடம்பெற்ற மோட்டார் வாகன கட்டளைச் சட்டத்தின் ஒழுங்கு விதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த
அவர் மேலும் பேசுகையில்,

ஐ.நா. சபையின் மனித உரிமைகள் பேரவையின் 63 ஆவது கூட்டத்தொடர் ஆரம்பமாகியுள்ளது. எதிர்வரும் மாதம் 7 ஆம் திகதி வரை கூட்டத்தொடர் இடம்பெறவுள்ளது. இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை நாங்கள் வரவேற்கிறோம்.

இலங்கையால் நடைமுறைப்படுத்துவதாக குறிப்பிட்ட விடயங்கள் கடந்த 17 ஆண்டுகாலமாக இலங்கையால் அமுல்படுத்தப்படவில்லை என்று ஐ.நா. அறிக்கையில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. ஆயுத போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு 17 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், காணாமல் போனோர் விவகாரம், பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கம், காணி விடுவிப்பு மற்றும் மாகாணசபைத் தேர்தல் குறித்து இன்றுவரையில் கேள்விகளே காணப்படுகின்றன. இதனை ஐ.நா. அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்து குறுகிய காலத்துக்குள் ஐ.நா. அறிக்கையில் தற்போது சுட்டிக்காட்டப்பட்டுள்ள விடயங்களை செயற்படுத்துவதாக குறிப்பிட்டது. தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்ட விடயங்களை அரசாங்கம் செயற்படுத்த வேண்டும். நிலவும் தாமதத்துக்கு அதிருப்தியை தெரிவிக்கின்றோம்.

முப்படைகளையும் ஒன்றிணைத்து செயற்படுவதற்காக 2009 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட பாதுகாப்பு பணியாட் தொகுதி தலைமை அதிகாரி சட்டத்தை நீக்கும் சட்டமூலம் நாளை ( இன்று) கொண்டு வரப்படவுள்ளது. இது நாட்டுக்கு தேவையற்றதொரு சட்டம். இதனை நாங்கள் வரவேற்கிறோம். நாட்டின் பொது பாதுகாப்பு சீராகவுள்ளது என்ற நிலைப்பாட்டில் இருந்து கொண்டு அரசாங்கம் இந்த சட்டத்தை இரத்துச் செய்ய தீர்மானித்துள்ளது.

மனித குலத்துக்கு எதிரான பயங்கரவாத தடைச்சட்டத்தை முழுமையாக நீக்குவதற்கு ஏன் இந்த இரண்டு ஆண்டுகாலமாக எந்த நடவடிக்கைகளையும் இந்த அரசாங்கம் எடுக்கவில்லை?.ஆகவே இந்த சட்டத்தை இரத்துச் செய்வதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

ஊழல் ஒழிப்பு, போதைப்பொருள் பாவனைக்கு எதிராக அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகளை பாராட்டுகிறோம்.பலர் தற்போது கைது செய்யப்படுகிறார்கள். பலரது கண்ணீருக்கு காரணமாக இருந்தவர்கள் இன்று கண்ணீர் வடிக்கின்றார்கள். இதனை கர்ம வினை என்றே கூற வேண்டும் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *