இலங்கை

எதிர்கட்சியினரை கூண்டோடு சிறைகளில் அடைக்கத் திட்டம்;  2029 ஜனாதிபதி தேர்தலில் அநுர மட்டுமே போட்டி

எதிர்க்கட்சிகளில் உள்ள அனைவரையும் சிறையில் அடைத்து, ஒற்றைக் குதிரைப் பந்தயம் போல அடுத்த ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கே அரசாங்கம் முயற்சிக்கின்றது என்று பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில குற்றம்சாட்டினார்

விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷவை பார்வையிட்ட பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குற்றம்சாட்டிய அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாமல் ராஜபக்‌ஷவை சிறையில் அடைத்து வீழ்த்திவிட முடியாது. அரசியலில் சாவதற்கும் பயப்படாத, சிறைக்குச் செல்வதற்கும் பயப்படாத ஒருவரால் மட்டுமே ஆபத்துகளை எதிர்கொண்டு முன்னோக்கிச் செல்ல முடியும். துரதிர்ஷ்டவசமாக, அரசியலில் அப்படிப்பட்டவர்கள் வெகு சிலரே உள்ளனர். அவர்களில் ஒருவர் தான் நாமல் ராஜபக்ஷ. அந்தப் பாடத்தை அனுரகுமார திஸாநாயக்க இன்னும் படிக்கவில்ல. நாமல் ராஜபக்ஷவை பொய்யான குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கத் தீர்மானித்திருப்பதில் இருந்தே இது தெரிகிறது.

எயார்பஸ் நிறுவனத்திடமிருந்து 1.45 மில்லியன் யூரோ அல்லது 1.7 மில்லியன் டொலர் தரகுப் பணம் ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் முன்னாள் பிரதம நிறைவேற்றதிகாரியின் மனைவியின் கணக்கிற்கு அனுப்பப்பட்டது உண்மை. அவ்வாறு கிடைத்த 1.7 மில்லியன் டொலரில் இருந்து, அவுஸ்திரேலியாவில் உள்ள நிமல் பெரேரா என்ற வர்த்தகருக்கு 8 இலட்சம் டொலர் செலுத்தப்பட்டதும் உண்மை. ஆனால், அந்த வர்த்தகர் தன் கணக்கில் இன்னும் 8 இலட்சம் டொலர் இருப்பதாகக் கூறுகிறார். அந்தப் பணத்தை அவர் யாருக்கும் அனுப்பவில்லை.

ஆனால், அதற்கு இணையான தொகையான 100 மில்லியன் ரூபாவை நாமல் ராஜபக்ஷவுக்கு வழங்கியதாக அவர் கூறுகிறார். எப்போது கொடுத்தார்? எப்படி கொடுத்தார்? என்பது அவருக்கு நினைவில்லையாம். பணப் பையில் இருந்து 100 மில்லியன் ரூபாவை சும்மா எடுத்துக் கொடுக்க முடியாதே? அவர் எந்த வங்கியில் இருந்து எடுத்தார் என்பதற்கான ஆதாரமும் இல்லை. அந்த 100 மில்லியன் ரூபாவைக் கொடுத்தது தொடர்பாகப் பரிமாறப்பட்ட தொலைபேசிச் செய்திகளோ வேறு எந்த ஆதாரங்களோ எதுவுமே இல்லை. இது வெறும் கற்பனையான ஒரு கதையின் அடிப்படையில் செய்யப்பட்ட கைதாகும்.

உண்மையில், கேபி என்ற பத்மநாதனைக் கொண்டு வந்தது போல, அல்லது மதுஷைக் கொண்டு வந்தது போல, அவுஸ்திரேலியாவில் சொகுசாக இருக்கும் நிமல் பெரேராவை இங்கு கொண்டுவந்து, அவரிடம் வாக்குமூலம் பெற்று நாமல் ராஜபக்ஷவைச் சிறையில் அடைத்திருக்கின்றார்கள் .இதை எதற்கு ஒப்பிடலாம் என்றால், ஷானி அபேசேகர விடயத்தில் பிரான்ஸ் சென்று, அசாத் மௌலானா என்ற தேடப்படும் குற்றவாளியிடம் வாக்குமூலம் பெற்று சுரேஷ் சலேவைக் கைது செய்ய முயன்றது போலத்தான் இதுவும் உள்ளது.

இதேவேளை சமல் ராஜபக்ஷவின் மகன் ஷமீந்திர ராஜபக்ஷவுக்கும் 25 மில்லியன் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதுவும் அதேபோன்ற ஒரு கதைதான். கபிலசந்திரசேனவின் மனைவியின் கணக்கில் இருந்து மூன்றாம் தரப்பினருக்குப் பணம் சென்றுள்ளது. அவர் அந்தப் பணத்தை ஷமீந்திரவுக்குக் கொடுத்ததாகக் கூறுகிறார். இப்படி எந்தவித ஆதாரமும் இல்லாமல், வெறும் வாய் வார்த்தைகளை மட்டும் வைத்துக்கொண்டு எதிர்க்கட்சியினரைப் பழிவாங்கும் அரசியலைத்தான் எதிர்க்கட்சியைக் கண்டு பயப்படும் தற்போதைய அரசாங்கம் செய்கிறது.

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில், முன்னிலை சோஷலிசக் கட்சியின் குமார் குணரத்னம், ஜனசெத பெரமுனவின் பத்தரமுல்லே சீலரத்ன தேரர் ஆகியோருடன் அநுர திஸாநாயக்க மட்டுமே எஞ்சுவார் என்று அவர்கள் ஏற்கனவே கூறியுள்ளனர்.மற்ற அனைவரும் கைது செய்யப்பட்டு எதிர்க்கட்சியினர் சிறையில் இருக்கும்போது, ஒற்றைக் குதிரைப் பந்தயம் போல 2029 ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதே அரசாங்கத்தின் நோக்கம். இதற்கு நாட்டின் மக்கள் எந்தளவு எதிராக இருக்கிறார்கள் என்பதை, எதிர்வரும் 12 ஆம் திகதி அநுராதபுரத்தில் கட்சி பேதமின்றி திரளப்போகும் மக்கள் வெள்ளத்தின் மூலம் அரசாங்கம் புரிந்துகொள்ள முடியும் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *