இலங்கை

எதிர்கட்சிகளை அழிக்கும் முயற்சியில் அரசாங்கம்; இறையாண்மையை பாதுகாக்க ஒன்றுபடுமாறு ரணில் அழைப்பு

நாட்டின் ஜனநாயக முறைமையையும் எதிர்கட்சிகளையும் அழிக்கும் செயற்பாடுகளில் தற்போதைய அரசாங்கம் ஈடுபட்டு வருவதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குற்றம்சாட்டியுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் 80ஆவது ஆண்டு நிறைவையொட்டி நேற்று ஞாயிற்றுக்கிழமை முன்னாள் ஜனாதிபதி வெளியிட்ட விசேட வீடியோ பதிவொன்றிலேயே இவ்வாறு குற்றம்சாட்டியுள்ளார்

அந்த வீடியோ பதிவில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்துள்ளதாவது,

நாங்கள் 22ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை எதிர்த்தோம். அதற்கு சர்வஜன வாக்கெடுப்பு அவசியமென்று குறிப்பிடப்படாத காரணத்தினாலேயே நாங்கள் அதனை எதிர்த்தோம். இதனால் நீதிமன்றத்தின் மூலம் சர்வஜன வாக்கெடுப்பைக் கோரினோம், அதன் மூலம் அதன் சட்டபூர்வ தன்மையை ஏற்படுத்த முடியும்.

ஆனால் இன்று முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் மூலம் ஒவ்வொரு குழுக்கள், அரசியல் கட்சிகளுக்கான கட்டுப்பாடுகள், இடையூறுகள் மற்றும் அரசியல்வாதிகளை காரணமின்றி கைது செய்வதை காண முடிகிறது. இவற்றின் மூலம் நாட்டின் ஜனநாயக முறைமையையும் எதிர்க்கட்சிகளையும் அழிக்கவே பார்க்கிறார்கள். அதேபோல் சுயாதீன தொழிற்சங்கங்களையும் அழிக்கப் பார்க்கிறார்கள்.

இப்போது சட்டத்தரணிகள் சங்கத்திற்கு எதிராகவும், பௌத்த பிக்குகளுக்கு எதிராகவும் பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன . இது பெரிய பிரச்சினையாக மாறியுள்ளது. இவை அனைத்தின் மூலமும் நாட்டின் அரசியலமைப்பும், மக்களின் இறையாண்மையும் அழிக்கப்படுகின்றது.

அதேபோன்று பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிக்கு பேசுவதற்காக இடமளிக்கப்படுவதில்லை. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ரஜீவ் அமரசூரியவை பாராளுமன்றத்திற்கு அழைத்த போது, அவர் பாராளுமன்றத்திற்கு வருவதற்கு அனுமதிக்கப்படவில்லை. இவ்வாறான நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன. இவற்றை பார்க்கும் போது, இந்நாடு எங்கிருந்து ஆட்சி செய்யப்படுகிறது? பாராளுமன்றத்திலிருந்தா அல்லது பெலவத்தையிலிருந்தா? என்ற கேள்வி எழுகிறது.

இவ்வாறான சூழ்நிலையில் மக்களின் இறையாண்மையைப் பாதுகாக்க வேண்டும். அரசியலமைப்பின் 3ஆவது சரத்தைப் பாதுகாக்க வேண்டும், 9ஆவது சரத்தின் படி பௌத்த மதத்தைப் பாதுகாக்க வேண்டும்.நாம் அனைவரும் ஒன்றுபடுவோம். 1946 இல் அனைவரும் ஒன்றுபட்டு சுதந்திர இலங்கையை உருவாக்கினோம். அதேபோன்று இப்போது அனைவரும் ஒன்றாகச் செயல்பட்டு நாட்டின் இறையாண்மையைப் பாதுகாப்போம்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *