ஜனநாயகத்திற்கு பெரும் சவால் ஐ.தே.க.- ஐ.ம.ச.இணைய வேண்டும்

ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் இந்த நேரத்தில் ஒன்றிணைய வேண்டும் என்று தாம் எதிர்பார்ப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளரான பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் 80ஆவது ஆண்டு நிறைவையொட்டி அந்தக் கட்சிக்கு வாழ்த்து தெரிவித்து ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளரினால் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இன்று நாட்டின் ஜனநாயகத்திற்கு பெரும் சவால் ஏற்பட்டுள்ளது.. சட்டத்துறை, நிறைவேற்றுத்துறை மற்றும், நீதித்துறையின் அதிகாரச் சமநிலை இழக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. நிறைவேற்றுத்துறை மற்றும் சட்டத்துறையின் அதிகாரம் ஒரு கட்சிக்குச் செல்லும் போது ஜனநாயகத்தை பாதுகாப்பது நீதித்துறையாகும்.
22 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் நீதித்துறையின் சுயாதீனம், நாட்டின் ஜனநாயகம் இல்லாமல் செய்யப்படுகின்றது. ஆயுத பலத்தால் அதிகாரத்தைக் கைப்பற்ற சென்ற கட்சியொன்று இன்று தற்செயலாகத் தேர்தலில் வந்து ஜனநாயகத்தை அழிக்கிறது.
இந்த நேரத்தில் அனைவரும் ஒன்றிணைந்து அன்று ஐக்கிய தேசியக் கட்சி சுதந்திரத்தைப் பெறச் செயற்பட்ட விதத்தில் செயற்பட வேண்டும்.
ஐக்கிய மக்கள் சக்தி என்ற ரீதியில் நாம் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்தே அரசியல் இயக்கத்தை ஆரம்பித்தோம். ஐக்கிய தேசியக் கட்சியின் பெரும்பாலான கொள்கைகள் நமது கொள்கைகளே. நானும் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்தே அரசியலை ஆரம்பித்து இன்று ஐக்கிய மக்கள் சக்தியில் செயற்படுகிறேன்.
இந்த முக்கியமான சந்தர்ப்பத்தில் மீண்டும் ஐக்கிய தேசியக்கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் ஒன்றிணைய வேண்டும் என்றே நான் கூறுகிறேன். இந்த நேரத்தில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு எமது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
![]()