இலங்கை

ஐ.தே. க.வின் 80 ஆவது ஆண்டு நிறைவு விழா அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பலரும் பங்கேற்பு; சஜித் பங்கேற்கவில்லை

ஐக்கிய தேசிய கட்சியின் 80 ஆவது ஆண்டு நிறைவு விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை கட்சி தலைமையகமான சிறிகொத்தவில்கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் எளிமையான முறையில் இடம்பெற்றது.

ஆண்டு நிறைவு விழாவில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டிருந்த ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச தவிர்க்க முடியாத காரணத்தினால் பங்குகொள்ளவில்லை என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் எதிர்க்கட்சியை பிரதி நிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சி தலைவர்கள் ,கூட்டு எதிர்க்கட்சி தலைவர்கள் பலர் கலந்துகொண்டனர்.

நிமல் சிறிபாலடி சில்வா தலைமையிலான சிறிலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள், சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி அதன் செயலாளரும் எம்.பி.யுமான ஜீவன் தொண்டமான், தமிழ் முற்போக்கு கூட்டணியை பிரதிநித்துவப்படுத்தி அதன் தலைவரும் எம்.பி.யுமான மனோகணேசன், ஜனநாயக குடியரசு முன்னணியின் தலைவர் சம்பிக்க ரணவக்க மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் உள்ளூராட்சி உறுப்பினர்கள் மற்றும் அமைப்பாளர்கள் என கலந்துகொண்டனர்.

நிகழ்வில் ஆரம்பமாக சர்வ மதத் தலைவர்களின் ஆசீர்வாதம் இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து நாட்டின் உன்னத நிலைக்கு செயற்பட்டு மரணித்த அரசியல் கட்சி தலைவர்களின் உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டது. இதன்போது நாட்டின் முதலாவது பிரதமரான டி,எஸ். சேனாநாயக்கவின் உருவப்படத்துக்கு ரணில் விக்ரமசிங்க மலர் மாலை அணிவித்தார். அதேபோன்று பாராளுமன்ற உறுப்பினர்களான மனோகணேசன், ஜீவன் தொண்டமான முறையே அங்கு வைக்கப்பட்டிருந்த இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் ஆர், சம்பந்தன் மற்றும் செளமிய மூர்த்தி தொண்டமான் ஆகியோரின் உருவப்படங்களுக்கு மலர் மாலை அணிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து ஐக்கிய தேசிய கட்சியின் 80ஆவது ஆண்டு நிறைவு விழாவுக்கு சீன கம்யூனிஸ்ட் கட்சியின் வாழ்த்துரை கட்சியின் தேசிய அமைப்பாளர் சாகல ரத்நாயக்கவினால் வாசிக்கப்பட்டது.அதனைத் தொடர்ந்து மதத்தலைவர்களுக்கு அன்பளிப்புகள் கையளிக்கப்பட்டதனைத் தொடர்ந்து நன்றி உரையுடன் ஐக்கிய தேசிய கட்சியின் 80ஆவது ஆண்டு நிறைவு விழா 10 ,15 மணியளவில் நிறைவுக்கு வந்தது. இங்கு யாரும் உரை நிகழ்த்தவில்லை

அதேநேரம் ஐக்கிய தேசிய கட்சியின் 80ஆவது ஆண்டு நிறைவு விழா மிகவும் எளிமையாக மேற்கொள்ளப்பட்டாலும் எதிர்வரும் நவம்பர் முதல் வாரத்தில் அதனை விமரிசையாக கொண்டாட இருப்பதாக அறிவிப்பு செய்யப்பட்டது. அத்துடன் நேற்று சிறிலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் நிமல் சிறிபால டிசில்வாவின் பிறந்த தினம் என்பதால், அவரை கெளரவிக்கும் வகையில் ரணில் விக்ரமசிங்கவின் அழைப்பின் பேரில் அங்கு கலந்துகொண்டிருந்த கட்சி உறுப்பினர்கள் அனைவரின் பங்குபற்றலுடன் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *