காணிகளை விடுவிக்கக் கோரி 20 ஆவது வாரமாக நில மீட்புப் போராட்டம்

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு மயிலிட்டிப் பகுதியில் இராணுவத்தினரின் ஆக்கிரமிப்பிலுள்ள தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்கக் கோரி நிலம் எங்களின் உரிமை, அதை விட்டுக் கொடுக்க முடியாது என்ற உறுதியுடன் காணி உரிமையாளர்களால் வாரம் தோறும் வெள்ளிக்கிழமைகளில் முன்னெடுக்கப்பட்டு வரும் நில மீட்புப் போராட்டம் 20 ஆவது வாரமாக மயிலிட்டி காணிக்கை மாதா தேவாலயத்துக்கு முன்பாக நடாத்தப்பட்டது.
“எங்கள் மயிலிட்டி காணிகளை விடுவிக்க இன்னும் நாம் எத்தனை வாரங்கள் போராட வேண்டும்? எத்தனை வருடங்கள் காத்திருக்க வேண்டும்? அரச உயர் அதிகாரிகளே, அரசாங்கமே பதில் சொல்! ” என்ற உருக்கமான கோஷங்களுடன் மக்கள் தமது காணி உரிமைக்கான போராட்டத்தை தொடர்ந்தனர்.
பல வருடங்களாகத் தம் சொந்த மண்ணுக்குத் திரும்ப முடியாமல் காத்திருக்கும் தங்களின் நிலை குறித்துப் போராட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் மனம் தளர்ந்த நிலையில் கருத்து வெளியிட்டனர். எங்களுடைய காணிகளைக் கேட்பதற்காகத் தான் இத்தனை வாரங்களாக வீதியில் நிற்கிறோம். எங்களுடைய நிலம் எங்களுடையது தானே? அதை மீண்டும் பெறுவதற்கு எத்தனை வாரங்கள் நாம் போராட வேண்டும்? எத்தனை வருடங்கள் காத்திருக்க வேண்டும்? எனவும் அவர்கள் கேள்வி எழுப்பினர்.
அரசாங்கம் மாறினாலும் தங்களது வாழ்க்கையில் மாற்றம் ஏற்படவில்லை எனக் கவலை தெரிவித்த பாதிக்கப்பட்ட மக்கள் தேர்தல் காலங்களில் வழங்கப்படும் வாக்குறுதிகளைத் தாண்டி எமது காணிகளை நடைமுறையில் விடுவிப்பதற்கான நடவடிக்கையே எங்களுக்கு அவசியம் எனவும் தெரிவித்தனர். எங்களுடைய பிள்ளைகள் தங்கள் சொந்தக் காணியில் வாழ வேண்டும். எங்கள் முன்னோர்கள் வாழ்ந்த நிலத்தில் நாங்களும் மீண்டும் வாழ்ந்து மடிய வேண்டும். அதற்காகத் தான் 20 ஆவது வாரமாகவும் தொடர்ந்து போராடுகின்றோம். எங்கள் போராட்டத்தை அரசாங்கம் இனியும் புறக்கணிக்கக் கூடாது எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
எமது காணிகள் தொடர்பில் அரச உயர் அதிகாரிகளும், அரசாங்கமும் தெளிவான பதிலை வழங்க வேண்டும் என வலியுறுத்திய பாதிக்கப்பட்ட மக்கள் போராட்டம் எத்தனை வாரங்கள் தொடர வேண்டும் என்பதை நாங்கள் தீர்மானிக்கவில்லை, எங்கள் காணிகளை எப்போது விடுவிக்கிறீர்கள்! என்பது தான் அதனைத் தீர்மானிக்கும் எனவும் உறுதிபடத் தெரிவித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
![]()