உலகம்

பசிபிக் பெருங்கடலில் ஒரே நேரத்தில் உருவான 3 சூறாவளிகள்

உலகெங்கிலும் உள்ள பல நாடுகளை எல் நினோ காரணி பாதித்துள்ள பின்னணியில், அது உருவான பசிபிக் பெருங்கடலில் 11 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே நேரத்தில் மூன்று சூறாவளிகள் தீவிரமடைந்துள்ளன.

இந்த சூறாவளி நிலைமை காரணமாக ஏற்பட்ட கனமழை மற்றும் கடல் கொந்தளிப்பு காரணமாக ஹவாய் தீவுகளுக்கு அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எல் நினோ தாக்கத்தின் மத்தியில் இந்த ஆண்டில் சீனாவைப் பாதித்த 7ஆவது சூறாவளியாகக் குறிப்பிடப்படும் ‘சௌடெல்’ (Soudelor) சூறாவளி அந்நாட்டிற்கு கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருவதாகக் தெரிவிக்கப்படுகிறது.

எல் நினோ காரணமாக கொலம்பியாவில் மழை குறைந்து வறட்சி நிலை ஏற்பட்டுள்ளதுடன், அங்குள்ள வீடுகளுக்கு பவுசர்கள் மூலம் நீர் விநியோகிக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது.

அத்துடன், கடந்த சில வாரங்களாக இந்தோனேசியா மற்றும் சுவிட்சர்லாந்தின் வனப்பகுதிகளில் நிலவிய வறட்சியான வானிலையுடன் கடுமையான காட்டுத்தீ பரவியது.

உலகிற்கு இவ்வாறு பாதிப்பை ஏற்படுத்திய எல் நினோ நிலைமை, இலங்கையின் பல மாவட்டங்களில் கடுமையான வறட்சியை ஏற்படுத்தி பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கமைய, நாட்டின் 7 மாவட்டங்களில் நிலவும் கடுமையான வறட்சியான வானிலை காரணமாக குடிநீரைப் பெற்றுக்கொள்ள முடியாமல் 35,000க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 115,534 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *