இலக்கியச்சோலை

மகுடம் வி.மைக்கல் கொலினின் ‘அன்பின் முத்தங்கள்’ கவிதைத் தொகுப்பு நூல், ஒரு பார்வை…. சோலையூர் குருபரன்

ஒருவரின் ஆழ்மனதில் தோன்றும் உணர்வுகள், வெளிப்படுத்தும் விதம், மொழி வளம், கற்பனைத் திறன், கருத்துச் செறிவு, அழகியல், கலை நயம், ஓசைநயம், உவமை அணிகளுடன் பாடப்படும் இலக்கிய வடிவமே கவிதை எனப்படும்.
“கவிதை எழுதுபவன் கவியன்று, கவிதையே வாழ்க்கையாக உடையோன், வாழ்க்கையே கவிதையாகச் செய்தோன், அவனே கவி” என்றார் மகாகவி பாரதியார். (கவிதைத் கோட்பாடுகள்,1910).

காலம் காலமாகத் தமிழில் பின்பற்றப்பட்டு வரும் யாப்பிலக்கண விதிகளுக்கு உட்பட்டு (எதுகை, மோனை, இயைபு, அளவு, ஓசை நயம், பாவகைகள் கொண்டு) எழுதப்படும் கவிதைகள் மரபுக் கவிதைகள் எனப்படும். வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா, மருட்பா ஆகிய பாவகைகளைக் கொண்டது இது.
தமிழின் மிகத் தொன்மையான இலக்கண நூலான தொல்காப்பியம் (பொ.ஆ.மு. 4 ஆம் நூற்றாண்டு), செய்யுளியல் பகுதியில் கவிதைக்கான (செய்யுள்) உறுப்புகளாக எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை என்பவற்றை வகுத்துள்ளது. இதன் வழித்தோன்றலே மரபுக் கவிதையாகும்.

மயிலை சீனிவேங்கடசாமி “தமிழ் மரபுக் கவிதைகள் மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட தொன்மை வாய்ந்தவை என்றும், பழந்தமிழர்களின் வாழ்வியலைச் செவ்வனே பதிவு செய்தவை” எனத் தனது ‘மறைந்துபோன தமிழ் நூல்கள்’ என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார்.

மு. வரதராசன் ”மரபுக் கவிதைகள் தமிழ் மொழியின் தனித்துவமான ஓசை நயத்தையும், காதுக்கினிய இசைத்தன்மையையும் காத்து நிற்பவை” எனத் தனது ‘இலக்கிய வரலாறு’ நூலில் குறிப்பிடுகிறார்.

பாரதிதாசன் மரபு வழியமைந்த சந்த நயங்களை வைத்துப் பல புரட்சிகரமான சிந்தனைகளையும் சமுதாயச் சீர்திருத்தக் கருத்துக்களையும் பாடியவர். அவரது ‘குடும்ப விளக்கு’, ‘பாண்டியன் பரிசு’ போன்ற காப்பியங்கள் மரபுக் கவிதையின் உச்சமாகக் கருதப்படுகின்றன.

யாப்பிலக்கண வரம்புகளான அடி வரையறை, சீர் தளை, எதுகை, மோனை போன்ற இறுக்கமான கட்டுகளிலிருந்து விடுபட்டு, அக எழுச்சிக்கும் கவித்துவ வெளிப்பாட்டிற்கு மட்டுமே முன்னுரிமை அளித்து எழுதப்படும் கவிதை வடிவம் புதுக்கவிதை எனப்படும். இது ஆங்கிலத்தின் Free Verse, தமிழில் வசன கவிதை வடிவங்களின் தாக்கத்தினால் உருவானது.

மகாகவி பாரதியார் (வசன கவிதை முன்னோடி) தமிழுக்கு முதன் முதலில் ஆங்கிலக் கவிஞர் வால்ட் விட்மனின் (Walt Whitman) தாக்கத்தால் உரைநடைக் (வசன கவிதை) கவிதை வடிவத்தைத் தந்தார். இவர் ‘காட்சிகள்’ என்ற தலைப்பில் வசன கவிதைகளை ஆக்கித் தந்தார்.

ந. பிச்சமூர்த்தி (தமிழ்ப் புதுக்கவிதையின் தந்தை) “உள்ளத்தின் சீரே கவிதையின் சீர், யாப்பின் அடிமைத்தனத்திலிருந்து கவிதைக்கு விடுதலை வாங்கித் தந்ததே புதுக்கவிதை.” எனக் ‘கவிதைப் படைப்புகள்’ என்ற கட்டுரையின் முன்னுரையில் (மணிக்கொடி இதழ், 1930) குறிப்பிட்டிருக்கின்றார்.

வசன கவிதையில் இருந்து அடிப்படையில் சில மாற்றங்களுடன் புதுக்கவிதை தோற்றம் பெற்றது. புதுக்கவிதை பற்றி வல்லிக்கண்ணன் “யாப்புக் கட்டுகளுக்குள் அடங்காமல், சுதந்திரமான நடையில் உணர்வுகளை வெளிப்படுத்தும் கவிதைகளே புதுக்கவிதைகள் ஆகும்.” எனப் ‘புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்’ (1977) என்னும் நூலில் குறிப்பிட்டிருக்கின்றார்.

ஈரோடு தமிழன்பன் “புதுக்கவிதை என்பது வெறும் உரைநடை அல்ல, அது அடர்த்தியான கற்பனையும், நவீன வடிவமும் கொண்ட கவிதை வெளிப்பாடு” என்று தனது திறனாய்வுக் கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டிருக்கின்றார்.
புதுக்கவிதையின் முன்னோடிகளாகப் பாரதியார், பாரதிதாசன், கவிமணி, கண்ணதாசன். ந. பிச்சமூர்த்தி, கு. ப. ராஜகோபாலன், நா. காமராசன், மு. மேத்தா, மஹாகவி ருத்திரமூர்த்தி, முருகையன், நீலாவணன் போன்ரைக் குறிப்பிடலாம்.
இதனை இவ்விடத்தில் நிறுத்திக் கொண்டு கவிதைத் தொகுப்பொன்றில் காணப்பட வேண்டிய பிரதான வடயங்கள் சிலவற்றை நோக்குவோம். இவை தொடர்பான பல விடயங்கள் ஏலவே எனது சில கட்டுரைகளிலும் வெளிவந்திருக்கின்றன.

ஒரு கவிதை அல்லது கவிதைத் தொகுப்பின் ஆன்மா அதன் உள்ளடக்கமாகும். உள்ளடக்கம் என்பது கவிஞர் வாசகருக்குக் கடத்த நினைக்கும் உணர்வு, சிந்தனை அல்லது செய்தி ஆகும். அரசியல், சமூகப் பிரச்சினைகள், தனிமனித உணர்வுகள், பெண்ணியம் சார்ந்த பிரச்சினைகள், மூடநம்பிக்கை, இயற்கை, காதல், தத்துவம் எனத் தெளிவான கருப்பொருளைக் கொண்டிருக்க வேண்டும். கவிதைகள் வாசகனைச் சென்றடையக் கவிதையின் உள்ளடக்கம் போலியானதாக இல்லாமல், கவிஞனின் உண்மையான அனுபவத்திலிருந்து அல்லது ஆழமான பார்வையிலிருந்து உருவாகியிருக்க வேண்டும். கவிதைத் தொகுப்பு முழுவதும் ஏதேனும் ஒரு அடிநாதம் (Central Theme) அல்லது சிந்தனைத் தொடர்பு இழையோட வேண்டும்.

ஒரு கவிதை அல்லது கவிதைத் தொகுப்பின் உருவமும் உள்ளடக்கமும் கவிதையின் உடலும் உயிரும் போன்றது. உருவம் என்பது கவிதை வாசகரின் பார்வைக்கும் வாசிப்பிற்கும் எப்படிக் காட்சிப் படுகிறது என்பதைக் குறிக்கும். அந்த வகையில் மரபுக்கவிதை (யாப்பிலக்கணம் சார்ந்தது) அல்லது புதுக்கவிதை (கட்டுப்பாடற்ற சுதந்திர வடிவம்) என எதுவாக இருந்தாலும், அது கவிதையின் கருவுக்குப் பொருத்தமாக இருக்க வேண்டும். கவிதை எதுவாக இருந்தாலும் வரி அமைப்பு (Lineation) மிகப் பிரதானமானதாகும். சொற்களை எவ்வாறு பிரிக்கிறோம், வரிகளை எங்கு முடிக்கிறோம் என்பது கவிதையின் வேகத்தையும் (Rhythm) வாசகரின் கவனத்தையும் தீர்மானிக்கிறது. ஒரு தொகுப்பில் உள்ள கவிதைகள் சீரான வரிசையில் அடுப்பப்பட்டிருக்க வேண்டும். தொடக்கம், உச்சம், நிறைவு என்ற ஒரு இயல்பான ஓட்டம் (கட்டமைப்பு) தொகுப்பிற்கு அமைவது சிறப்பாக அமையும்.

உத்தி (Technique) என்பது கவிதையின் ஆடை, அலங்காரமாகும். சொல்ல வந்த செய்தியை எப்படிக் கலை நயத்துடன் சொல்கிறோம் என்பதாகும். உருவகம், உவமை (Metaphor, Simile) ஆகியவற்றை பொருத்தமான இடத்தில், பொருத்தமான சந்தர்ப்பத்தில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நேரடிச் சொற்களைத் தவிர்த்து, படிமங்கள் (Imagery), குறியீடுகள் (Symbols) மூலம் ஆழமான அர்த்தங்களை உருவாக்க வேண்டும். சொற்களின் தேர்வு மிகச் துல்லியமாக இருக்க வேண்டும். தேவையற்ற சொற்களைத் தவிர்த்து, குறைந்த சொற்களில் அதிக பொருளை உணர்த்துவது கவித்துவ உத்தியாகும். இதற்கு மொழித் தர்ச்சி, புலமை, மொழிப் பயன்பாடு, தமிழ் இலக்கிய ஈடுபாடு ஆகியன அவசியமாகும். சொற்களின் சேர்க்கையால் உருவாகும் ஓசை நயமும், கவிதையின் தொனியும் (சோகம், கோபம், அமைதி) உள்ளடக்கத்திற்கு வலு சேர்க்க வேண்டும். எத்தகைய கவிதையிலும் ஓசை அமைந்திருப்பது அவசியமாகும்.

ஒரு நல்ல கவிதைத் தொகுப்பில் உள்ளடக்கம், அத்தொகுப்பு என்ன சொல்கிறது என்பதைத் தீர்மானிக்கிறது. உருவம் அதைத் தாங்கிப் பிடிக்கும் சட்டகமாகச் செயல்படுகிறது. உத்தி அதை வாசகரின் மனதிற்குள் ஆழமாகப் பதிய வைக்கிறது. இவை மூன்றும் தனித்தனியாகத் தெரியாமல் ஒரே படைப்பாக ஒன்றிணையும்போதே ஒரு கவிதைத் தொகுப்பு முழுமை பெறுகிறது.

அத்தோடு, கவிதைத் தொகுப்பானது ஒரே பாணியில் அமையாத பன்முகத் தன்மை கொண்ட கருப்பொருள்களை (Diverse Themes) உள்ளடக்கியதாகவும் வலுவான மொழிநடை மற்றும் உத்திகள் (Language & Style) கொண்டதாகவும் வடிவங்களின் கலவையாகவும் (Structural Variety), கவிதைத் தொகுப்பானது சிறப்பான கட்டமைப்பு (Curation & Layout) உடையதாகவும் இன்னோரன்ன பிற பிரதான அம்சங்களையும் உள்ளடக்கியதாக அமைய வேண்டும். இந்த வகையில் வி.மைக்கல் கொலினின் ‘அன்பின் முத்தங்கள்’ கவிதைத் தொகுப்பினை அணுக வேண்டி உள்ளது.

ஈழத்து இலக்கியத் தளத்தில் தவிர்க்க முடியாத ஒருவராக மைக்கல் கோலின் காணப்படுகிறார். கவிஞர், நிறுகதை ஆசிரியர், நாவலாசிரியர், பதிப்பாசிரியர், இதழாசிரியர், குறும்பட இயக்குனர், பத்திரிகையாளர், விமர்சகர், பத்தி எழுத்தாளர் எனப் பன்முக ஆளுமை கொண்ட ஒருவர். மகுடம் பதிப்பக ஆசிரியராக இருந்து நூற்றுக்கு மேற்பட்ட நூல்களைப் பதிப்பித்திருக்கின்றார். என் பிரியமான ராஜகுமாரிக்கு (புதுக்கவிதைத் தொகுப்பு, 1992), பரசுராம பூமி (சிறுகதைத் தொகுப்பு, 2018), சிலுவைகளே சிறகுகளாய் (புதுக்கவிதைத் தொகுப்பு, 2019), வீணையடி நீ எனக்கு.. (நாவல், 2020), இவனைச் சிலுவையில் அறையுங்கள் (கவிதைத் தொகுப்பு, 2021), எழுத்தீரா பிரியங்கள் கவிதைத் தொகுப்பு, 2021), என் இனிய பட்டாம்பூச்சிக்கு (கவிதைத் தொகுப்பு, 2022), அன்பின் முத்தங்கள் கவிதைத் தொகுப்பு 2024, 2025) ஆகிய கவிதை, சிறுகதை, நாவல் என எட்டு நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார்.

எனக்குப் படிக்கக் கிடைத்த ‘அன்பின் முத்தங்கள்’ இரண்டாம் பதிப்பு நூலையும் தனது ‘மகுடம்’ பதிப்பாக வெளியிட்டிருக்கின்றார். 100 பக்கங்களைக் கொண்ட இக்கவிதைத் தொகுப்பு நூல் பல வர்ணத்திலான முன்னட்டையும், பின்னட்டையில் ஆசிரியரின் புகைப்படமும், அவரால் புனையப்பட்ட ‘முத்தங்கள் பல..’ கவிதையும் இடம் பெற்றிருக்கிறது. உள்ளே தலைப்புப் பக்கம், நூல் விபரம் என்பவற்றுடன் கவிஞர் அ.ச.பாய்வாவின் அணிந்துரை போன்றதொரு மிக ஆணித்தரமான, ஆழமான, நீண்டதொரு பதிப்புரையும், ஆகவே ஜவ்பாரின் பின் பின் நவீனத்துவ சிந்தனை அடிப்படையிலான ‘சிறு துளிகளால் சிறைப்படுத்தப்படும் பெரும் சூரியன்கள் மைக்கல் கொலினின் கவிதைகள்’ என்ற தலைப்பிலான நீண்டதொரு அணிந்துரையும், ‘காலத்தின் குரலாக ஒலிக்கும் கவிதைகள்’ என்ற தலைப்பில் பதியப்பட்டிருக்கும் ஆசிரியரின் முன்னுரையுடன் சமர்ப்பணம் என்று 30 பக்கங்கள் போக, மிகுதி 69 பக்கங்களில் 30 கவிதைகளும், இறுதிப் பக்கத்தில் ஆசிரியரின் நூல்கள் பற்றிய விபரங்களும் அடங்கி இருக்கின்றன.

வி.மைக்கல் கொலின் பிரதேசம், மாவட்டம், தேசியம், சர்வதசம் என்ற அடிப்படையில் பல விருதுகளுக்கும், பாராட்டுக்கள், கௌரவங்களுக்கும் சொந்தக்காரர். தமிழ் இலக்கிய வளர்ச்சிக்காக ஓயாது, சுறுசுறுப்புடன் இயங்கிக் கொண்டிருக்கும் அசுர படைப்பாளி. இவரின் படைப்புக்களில் அரசியல், பொருளாதாரம், போர்க்கால அவலங்கள், யதார்த்தங்கள், துன்ப துயரங்கள், அடக்குமுறைகள், பெண்ணிய அவலங்கள், இடப்பெயர்வுகள், அகதி வாழ்க்கை ஆகியவற்றைச் சமூக ஊடாட்டத்துன் பிரக்ஞைபூர்வமாகப் பதிவு செய்திருப்பார். இவரின் ஆக்கங்களில் சொல் புதிது, பொருள் புதிது, வளம் புதிது கொண்டு புதுமை செய்திருப்பார். இதிகாச, புராணக் கதைகளையும் வரலாற்றுச் சம்பவங்களையும் சமகாலக் கண்ணோட்டத்தில் உணர்வு கலந்து உயிரோட்டமாகப் பதிவு செய்திருப்பார. அத்தகைய போக்கினை ‘அன்பின் முத்தங்கள்’ கவிதைத் தொகுப்பிலும் பதிவு செய்திருக்கின்றார். முத்தங்கள் என்பதற்குப் புதிய வடிவமும் உள்ளடக்கமும் கொடுத்திருக்கின்றார்.

கவிதைத் தொகுப்பினதும் கவிதைகளினதும் கருப்பொருள், குறிப்பிட்ட சில கவிதை தவிர ஏனையவற்றில் ஏற்ற வடிவம் பின்பற்றப்பட்டிருக்கிறது. பழைய பாடுபொருளைப் புதிய வடிவில் சமகால யதார்த்த விடயங்களோடு தொடர்புபடுத்தி முற்போக்குச் சிந்தனைகளை மையப்படுத்தியதாக 20க்கு மேற்பட்ட கவிதைகளின் கருவும் வடிவமும் அமைந்திருக்கின்றன. அன்பின் முத்தங்கள், தேவமைந்தக் பேசினால், சாத்தானின் வேதங்கள், ஆட்டாமா ரொட்டியும் ஆட்டிறைச்சிக் கறியும் கவிதைகள் சில உதாரணங்களாகும். இத்தொகுப்பு 30 கவிதைகள் சேர்ந்து ‘அன்பின் முத்தங்கள்’ என்ற தலைப்பில் முழுவடிவம். பெற்றிருக்கிறது.

ஒரு கவிதைத் தொகுப்புக்குக் கருவும் வடிவமும் முக்கித்துவம் பெறுவது போல் அதன் உருவமும் கள்ளடக்கமும் பிரதான இடம் பெறுகின்றன. இவை இரண்டும் கவிதைத் தொகுப்புக்கு உடலும் உயிரும் போன்றவை. இவை ஒன்றில் ஒன்று தங்கி இருக்கும். இதில் ஏதாவது ஒன்றில் ஏற்படும் சறுக்கல் கவிதையின் முழுமையைப் பாதித்துவிடும். அதனால் இக்கவிதைத் தொகுப்பில் ஆசரியர் கூடுதல் கவனம் எடுத்தியிருப்பதைப் பல கவிதைகளை வாசிக்கும்போது அவதானிக்க முடிகிறது. இடையியே சில கவிதைகளில் முரண், முரண்நிலை, முரண்நகை ஆகியவற்றை ஆங்காங்கே காணலாம். யுத்தத்தைத் தின்றவர்கள், காய்க்காத திராட்சைத் தோட்டம், பின்னோக்கிப் பாயும் நதிகள்-1, மூன்றாம் கண், நியூட்டனின் மூன்றாம் விதி போன்ற கவிதைகள் தக்க உதாரணம்.
‘…….. அன்பெனும் பெரு வெளியில் காதல்மலை நீ உனைச் செதுக்கும் நேசஉளி நான்…..’ என்பது ‘இரவின் யுத்தத்தை முன்னிறுத்தி’ என்ற கவிதையின் வரிகள்.

மைக்கல் கொலின் இக்தொகுப்பில் உள்ளடக்கத்தில் அடங்கும் கவிதைகளில் ஒருசில தவிர மற்றையவை யாவும் ஒரே பாணியில் அமையாமல், மனித வாழ்க்கையின் வெவ்வேறு பக்கங்களைக் கவிதைகள் பேசுகின்றன. காதல், பிரிவு, தனிமை, அகத்தேடல், உறவுகளின் மேன்மை போன்ற அகப் பொருள் சார்ந்த விடயங்களையும், போர், அதனால் ஏற்படத்தக்க இழப்புக்கள், சமூக அவலங்கள், அரசியல் விழிப்புணர்வு, இயற்கை எழில், பெண்ணியம், சமத்துவம் போன்ற புறபொருள் சார்ந்த விடயங்களையும் உள்ளடக்கிப் பேசி இருக்கின்றன.

இத்தொகுப்பில் ஆசிரியர் தமக்கானதோர் மிக எளிமையான மொழி நடையினையும் பொருத்தமான உத்திகளையும் நயமாகப் கையாண்டிருக்கிறார். சொல்ல வந்த கருத்தை நேரடியாகச் சொல்லாமல், ஒரு காட்சியைப் புரான, இதிகாச, சமய வரலாற்றுக் கதைகளைக் கண்முன் நிறுத்துவது போல் பல கவிதைகளை நுட்பமாக எழுதி இருக்கின்றார். இன்னும் பல கவிதைகள் படிமங்கள், குறியீடுகளாகவும் அமைந்திருப்பது கவிதைக்கு அழகு சேர்க்கின்றன. அதேபோல, ஆழமான கருத்துகளை உணர்த்த எளிய குறியீடுகளைப பயன்படுத்தி இருப்பது வாசகனைக் கவிதையின்பால் ஈர்க்கச் செய்யும் நூட்பமாகும். கவிதைகளில் தேவையற்ற வார்த்தைகளைத் தவிர்த்து, “சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல்” கவிதைக்கு மேலும் அழகு சேர்க்கும். இத்தொகுப்பில் அன்பின் முத்தங்கள், காய்க்காத திராட்சைத் தோட்டம், முத்தமிட்டோ காட்டிக் கொடுத்தாய், இரத்தம் ஒரே நிறம், பசுக்களை வதைக்காதீர், அலாவுதினின் அற்புத விளக்கு, இங்கே இதயங்கள் விற்கப்படும் போன்ற கவிதைகளை உதாரணமாகக் குறிப்பிடலாம்.

இன்று பல கவிஞர்கள் நவினத்துவம், பின்நவினத்துவம், பின் பின் நவீன்ததுவம் என வலிந்து கட்டிக் கொண்டு டாபீகமாக செருக்குடன் கவிதை, புனைகதைகள், கட்டுரைகள், விமர்சனங்களைப் புரியாத நடையில் எழுதி வருகின்றனர். அவர்கள் எழுதுவது அவர்களுக்கும் விளங்குமோ தெரியவில்லை. தமது படைப்புகள் அவ்வக் காலத்துக்குரிய வாசகனுக்கு தெளிவாக விளங்கவில்லை எனில் அது இலக்கியமாக இருக்கமுடியாது. நவினத்துவம், பின்நவினத்துவம், பின் பின் நவீன்ததுவம் ஆகியன அவை தோன்றிய நாடுகளில் காலாவதியாகிப்போக, இலங்கையில் சில எழுத்தாளர்கள் இறுமாப்புக்கு விடாப்பிடியாகத் தூக்கிக் கொண்டு எழுதி வருகின்றனர். அவர்களில் ஒருசிலர் இலக்கிய ஒன்று கூடல்களில் சபையில் உள்ளவர்களுக்கு விளங்காத மாதிரிச் செருக்குடன் பேசவும் ஆரம்பித்துவிட்டனர். இத்தகைய போக்கினை மைக்கல் கொலின் கவிதைகளி, சிறுகதைகள், நாவல் போன்றவற்றில் காணமுடிவதில்லை. அவரின் படைப்புக்களில் பெரும்பாலானவை இலகு தமிழில் எளிய மொழி நடையில் அமைந்திருப்பது பாராட்டுக்குரியது. அந்தச் சிறப்பினை இத்தொகுப்பிலும் காணலாம்.

‘இந்த வாழ்க்கை பேரன்பின் பெரு வெளி ஒவ்வொரு வினாடியும் வரங்களாய்க் கிடைத்த அதீதத்தின ஆசீர்வாதம். வலிக்க வலிக்க இதயம் கனக்கக் கனக்க காதல் செய்யுங்கள் வாழ்க்கை உங்களுக்காகவும் உங்களை நம்பி இருப்பவர்களுக்காகவும் மட்டுமேயானது என்றும் நேசத்தின் திறவுகோல் உங்கள் கரங்களில் இருக்கட்டும். நேசியுங்கள் நேசிக்கப்படுவீர்கள். அன்பாய் இருங்கள் அதுவே இந்தப் பிரபஞ்சத்தின் ஆதார சுருதி. தினம் தினம் பூக்கும் பூக்களைப் போலவே நாளை என்ற பூவும் உங்களுக்காய்ப் பூக்கும்’ (வாழ்க்கை வரம், பக்.99) மிக எளிமையான மொழி நடையில் அமைந்த கவிதை.

வாசகருக்குச் சலிப்பை ஏற்படுத்தாத வகையில் இலக்கணக் கட்டுப்பாடு இல்லாத, எளிய நடையில் அமைந்த புதுக்கவிதை அமைப்பில் சகல கவிதைகளும் அமைந்திருக்கின்றன. கவிதைகளைத் தேர்ந்தெடுத்துத் தொகுக்கும் போது ஆரம்பத்தில் வாசகரை ஈர்க்கக்கூடிய எளிய, சுவாரசியமான கவிதைகளையும், நடுவில் ஆழமான தத்துவக் கவிதைகளையும், இறுதியில் மனதில் நிற்கும்படியான கவிதைகளையும் சேர்த்துக் கொள்வது சிறந்தது. இந்நடைமுறை தொகுப்பில் சில கவிதைகளின் சேர்க்கையில் பின்பற்றப்படவில்லை.

ஒரு கவிதைத் தொகுப்பின் தலைப்பு ஒட்டுமொத்த கவிதைகளின் ஆன்மாவைப் பிரதிபலிக்கும் வகையில் அமைந்திருக்க வேண்டும். அன்பின் முத்தங்கள் கவிதைத் தொகுப்பிலுள்ள கவிதைகளில் 16 கவிதைகள் மாத்திரமே நூலின் தலைப்புடன் இசைந்து செல்கின்றன. பல தலைப்புகள் சிந்திக்கத் தூண்டுவதாக அமைந்திருப்பது பாராட்டுக்குரியது. ஒரு கவிதை தலைப்பில்லாமல் சேர்க்கப்பட்டிருக்கிறது. அக்கவிதையும் தொகுப்புக்கு பெறுமதி சேர்க்கின்றது.

இத்தொகுப்பில் பின்னட்டையிலுள்ள கவிதையையும் சேர்த்தால் 31 அடங்கும். அதில் 17 கவிதைகள் சிறப்பாக அமைந்திருக்கின்றன். எத்தொகுப்பிலும் எல்லாம் சிறப்பாக அமைவதுமில்லை. புதுக்கவிதை மன்னன் ந.பிச்சமூர்த்தி பாடிய கவிதைகளில் 55 வீதமானவையே சிறப்பானதாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. அதேபோல், சிறுகதை மன்னன் புதுமைப்பித்தன் 300 க்கு மேற்பட்ட சிறுகதைகள் எழுதியிருக்கிறார். அவற்றுள் 30 கதைகள் மாத்திரமே சிறப்பாக உள்ளதாக க.சுப்ரமணியன் போன்ற ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

உலகின் இயக்கங்கள் யாவற்றிலும் நாதம் (ஒலி, ஓசை) இருக்கின்றன. இயற்கையின் இயக்கத்தில் இதனைக் காணலாம். நாம் கதைக்கும்போதும் பேசும்போதும், உரையாடலின்போதும் அதற்கு ஓர் ஓசை இருப்பது பொல் எவ்வகைப்பட்ட கவிதையாக இருந்தாலும் அதற்கும் ஓசை அவசியம். இவ்வோசை மொழியைக் கையாளும்போது சரளமான சொல் அடுக்குகளினால் தீர்மானிக்கப்படுவது. இது குறைந்தால் ஓசைநயம் பாதிக்கப்பட்டுக் கவிதையின் அழகு கெட்டுவிடும்.

கவிதையின் ஓசை (Prosody and Rhythm) என்பது கவிதைக்குரிய இசை நயத்தையும், வாசிக்கும் போது கிடைக்கும் லயத்தையும் குறிக்கும். இது வெறும் சத்தமல்ல, உணர்வுகளின் அலைவரிசைக்கு ஏற்ப கவிதையை உயிர்ப்பிக்கும் உத்வேகம். ஓசையானது கவிதையின் பொருளுக்கும் மனநிலைக்கும் (இன்பம், துயரம், கோபம்,வெறுப்பு போன்றவை) ஏற்றவாறு அமைதல் வேண்டும். செயற்கையான திணிப்பு இல்லாமல், சொற்கள் தாமாகவே ஓடிவரும் வண்ணம் இசைநயம் இயல்பாக இருக்க வேண்டும். தமிழ் இலக்கிய மரபுக் கவிதையில் வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, விருத்தப்பா போன்ற பா வகைகளுக்குரிய சீர், தளை விதிகளைப் பின்பற்றி ஓசை சீராக அமைக்கப்பட்டிருக்கும. ஓசை நயம் மிக்க கவிதைகள் எளிதில் மனப்பாடமாகும். நீண்ட காலம் நினைவில் நிற்கும். கவிஞன் சொல்லவரும் நுட்பமான உணர்வுகளை, ஓசையின் ஏற்ற இறக்கங்கள் மூலமாகவே வாசகனின் மனத்திற்குள் ஆழமாகப் பதியவைக்க முடியும். சொற்களுக்கு இசையூட்டி, கவிதையை வெறும் எழுத்துக்களாக இல்லாமல் ஒரு பாட்டாகவோ அல்லது முழக்கமாகவோ ஒலிக்கச் செய்கிறது.

ஒரு சொல்லின் இறுதி எழுத்தொலி அ, ஆ, இ, உ, ஐ என்ற குறில், நெடில் ஒலிகளில் குறுகும்போது அடுத்த சொல் வல்லினத்தில் ஆரம்பித்தால் முன்னைய வொல்லின் இறுதி எழுத்துடன் அடுத்து ஆரம்பிக்கும் சொல்லின் வல்லின எழுத்துக்கு ஒத்த வல்லெழுத்து மிகுந்து வரும். ஆரம்ப(க்) கல்வி, பாப்பா(ப்) பாட்டு, கல்வி(க்) கல்லூரி, உனக்கு(த்) தேவை, பேரீட்சை(ப்) பெறுபேறு இதேபோல் சில ஒலிகள் குறுகி (Silent) ஒலிக்கும்போதும் (போர்(க்) காலம்) வல்லெழுத்துக்கள் சேர்ந்தும் மிகுந்தும் வரலாம். இந்த அடிப்படை இலக்கண விதிகளைப் பின்பற்றுவதில் நாவல், சிறுகதை, கட்டுரை ஆகியவற்றில் சிறு தவறு காணப்பட்டாலும் கவிதைகளில் இவ்விதியனைப் பின்பற்றாதிருப்பது குற்றமாகும். இதனால் கவிதையின் நயமும், அதன் அழகும் கெட்டுவிடும். கவிதைகளில் இத்தவறு இடம்பெறும்போது சொற்களுக்கிடையில் ஓசை முறிவு ஏற்படும். இன்று இத்தகைய தவறுகள் ஆக்கங்களில் மலிந்து காணப்படுகின்றன. கவிதை எதுவோர் எழுத்து, சொற்களை அதன் ஒலி, ஓசை அறிந்து பயன்படுத்துவது சிறப்பானதாகும். இதற்கு இலக்கண, இலக்கிய அறிவும் கலைச் சொல் பரிச்சமும் இருத்தல் அவசியமாகும். இத்தவறுகள் இக்கவிதைத் தொகுப்பில் சில கவிதைகளில் காணப்படுகின்றன. இதனைத் தவிர்பதற்குக் கவிதையை ஓசை கூட்டி இசையுடன் பலமுறை படித்துத் திருத்திக் கொண்டிருக்கலாம்.

இன்று பெரும்பாலானோர் அட்டைப்பட வடிவமைப்பில் கவனம் செலுத்துவதில்லை. அழகாக இருக்க வேண்டும் என்பதற்காகப் பல வர்ணக் கலவையாக அட்டைப்படத்தை அமைத்துக் கொள்கின்றனர். அட்டைப்படம் எப்போதும் தெளிவு, நேர்த்தி, கவர்ச்சி, கருத்துச் செறிவு, உள்ளடக்கப் பிரதிபலிப்புக் கொண்டதாகக் காணப்பட வேண்டும். இத்தொகுப்பின் ஆசிரியர் இதில் சற்றுக் கவனமெடுத்திருக்கலாம். அதேபோல் பக்க வடிவமைப்பு, கவிதைகளின் தலைப்பு ஒழுங்கமைப்பு, எழுத்து அளவு, எழுத்துக்களின் கருமை (Dark) ஆகியவற்றிலும் கவனம் எடுத்திருக்கலாம்.

சிக்கலான விடயமொன்றை ஆணித்தரமாக வாகரிடம் கொண்டு செல்வதற்கு உவமை, உருவகம், தற்குறிப்பேற்றம், உயர்வு நவிற்சி, படிமம், குறியீடு, முரண், முரண்நகை, முரண்நிலை போன்ற அழகியல் அம்சங்களை இணைத்துக் கவிதைகளை எழுதுவது கவிதைக்கு மேலும் அழகு சேர்க்கும்..
‘அன்பின் முத்தங்கள்’ கவிதைத் தொகுப்பில் சிறு சிறு தவறுகள் காணப்பட்ட போதிலும் ஒட்டுமொத்தத்தில் தரமான கவிதைகளையும் வாசித்தேன் என்ற திருப்தியும் மகிழ்ச்சியும் ஏற்பட்டது. இதற்காக நூலாசியர் மைக்கல் கொலிக்கு எனது பாராட்டுக்கள். இது பொன்ற காத்திரமான படைப்புக்களை தமில் இலக்கிய உலகு அவரிடமிருந்து எதிர்பார்க்கிறது. ‘பரசுராமர் பூமி’ பொல் பல தொகுப்புக்களை அவரிடமிருந்து எதிர்பார்க்கிறோம். அரச பணிப் பொறுப்புக்களுக்கு மத்தியில் மகுடம் பதிப்புப் பணிகளையும். ஆக்க இலக்கியப் படைப்புக்களையும் ஓய்வு, ஒழிச்சலின்ற முன்கொண்டு வருவது பாராட்டுக்குரியது. அவரின் பணி மேலும் மேலும் தொடர வேண்டுமென வாழ்த்துகின்றேன்.

 

 

 

 

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button