இலங்கை

22 ஆம் திருத்தம் நிச்சயமாக வரும்; நீதி அமைச்சர் கூறுகிறார்

நாங்கள் அரசாங்கத்தை பெற்றது விளையாடுவதற்காக அல்ல. எவ்வாறாயினும் 22ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை நிச்சயமாக கொண்டுவருவோம் என்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணக்கார தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டிருந்த நீதி அமைச்சரிடம் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வறு கூறினார்.

இதன்போது அமைச்சரிடம் எழுப்பப்பட்ட கேள்விகளும் அவரின் பதில்களும் வருமாறு,

கேள்வி: 22வது அரசியலமைப்பு திருத்தம் குறித்து எதிர்க்கட்சிகள் கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றன. இதனை அமுல்படுத்துவது உங்களுக்கு மிகவும் கடினமான ஒன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது. எதிர்க்கட்சிகளின் இந்த குற்றச்சாட்டுகளுக்கு பின்னணியில் என்ன காரணம்?

பதில்: உண்மையிலேயே, இது மக்களைப் பற்றி சிந்தித்து கொண்டுவரப்பட்ட அரசியலமைப்பு திருத்தம் என்பதை நாங்கள் தொடர்ந்து கூறி வருகிறோம். ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பது, நீதிமன்றங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது, நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது போன்ற அனைத்து விடயங்களும் நீதித்துறையின் முழுமையான மறுசீரமைப்பு செயன்முறையின் ஒரு பகுதியாகும் என்பதை நாங்கள் தெளிவுபடுத்தியுள்ளோம்.

எதிர்க்கட்சிகள் கிளப்பும் இந்த தேவையற்ற குழப்பங்களின் உண்மை என்ன என்பது நாளை மக்களுக்குத் தெளிவாகப் புரியும். சில பாராளுமன்ற உறுப்பினர்களின் கூற்றுகளிலிருந்து, அவர்களுக்கு தற்போதைய பிரதம நீதியரசர் மீது அதிருப்தி இருப்பது தெரிகிறது. நாங்கள் கூறுவது என்னவென்றால், ஒரு குறிப்பிட்ட நீதிபதியை மட்டும் மனதில் கொண்டு இந்தத் திருத்தங்கள் கொண்டுவரப்படவில்லை.

எதிர்க்கட்சிகள் கூறும் விடயங்களில் உண்மை இருக்குமாயின், அல்லது தவறுகள் இருப்பின், அவர்கள் உச்சநீதிமன்றத்திற்குச் சென்று அதை சவாலுக்குட்படுத்த முடியும். அவர்கள் ஏற்கனவே அதைச் செய்துள்ளார்கள் என்று நினைக்கிறேன். எனவே, அதன் தீர்ப்பு என்னவென்று பொறுத்திருந்து பார்ப்போம்.

கேள்வி: 22வது திருத்தம் நிச்சயமாகக் கொண்டுவரப்படுமா?

பதில்: அதில் என்ன சந்தேகம்? நிச்சயமாகக் கொண்டுவரப்படும். நாங்கள் அரசாங்கத்தை பெற்றது விளையாடுவதற்காக அல்ல.

கேள்வி: சர்ஜன வாக்கெடுப்புக்கு செல்ல வேண்டியிருக்குமா?

பதில்: சர்வஜன வாக்கெடுப்பு தேவையா இல்லையா என்பதை தீர்மானிக்க வேண்டியது உயர்நீதிமன்றமே தவிர, வேறு யாரும் அல்ல. உயர்நீதிமன்றம் என்ன தீர்ப்பு வழங்குகிறதோ, அதற்கேற்பவே நாங்கள் செயல்படுவோம்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button