22க்கு அதிகளவில் மக்கள் ஆதரவு!; வாசுதேவா கூறுகிறார்

அரசாங்கத்தின் தற்போதைய மக்கள் செல்வாக்கை விட 22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு அதிகமாகவே மக்கள் ஆதரவும் இருக்கின்றது என்றும், இதனால் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட்டால் மக்கள் அதற்கு தமது விருப்பத்தை தெரிவிப்பார்கள் என்றும் முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பொன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
நீதிமன்ற அமைப்பில் நிலவும் வழக்குத் தாமதங்கள் குறித்து நாட்டின் பொதுமக்கள் கடும் விரக்தியில் இருக்கின்றனர். நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை தீர்க்கும் முன்மொழிவின் மூலம் அந்த வழக்குகளை விரைவுபடுத்த வழிவகுக்குமாக இருக்கும்.
தற்போதைய நிலைமையில் வழக்குகளை விரைவாக முடித்துக்கொள்வதையே பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள். அதற்கு நீதிபதிகளின் சேவைக் காலத்தை நீடிப்பது ஒரு தீர்வாக அமையும் என்றால், மக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார்கள்.
வெரிட்டே ஆய்வு நிறுவனம் நடத்திய ஆய்வறிக்கையில் அரசாங்கம் மற்றும் ஜனாதிபதி மீது குறிப்பிட்டளவு மக்கள் செல்வாக்கு நிலவினாலும், அமைச்சர்கள் மற்றும் அரசாங்கத்தின் பொதுவான செயல்பாடுகள் குறித்து மக்களின் ஆதரவு படிப்படியாகக் குறைந்து வருகின்றது. இருப்பினும், 22ஆவது திருத்தம் போன்ற அரசியலமைப்பு மாற்றங்களுக்கு மக்கள் மத்தியில் உள்ள விருப்பம் உயர் மட்டத்தில் காணப்படுகின்றது. இதன்படி 22ஆவது திருத்தம் தொடர்பில் மக்கள் சர்வஜன வாக்கெடுப்பை நடத்துவதற்கு உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தால், மக்கள் நிச்சயமாக அந்த வாக்கெடுப்பில் தங்களின் விருப்பத்தைத் தெரிவிப்பார்கள் என தெரிவித்துள்ளார்.
![]()