கவிதைகள்
“மாநில வாழ்வு வளமாய் மலரும்” ….கவிதை …. மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா.

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ் மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் ——- அவுஸ்திரேலியா 

காலங்கள் மாறலாம் காட்சிகள் மாறலாம்
கோலங்கள் மாறலாம் கொள்கைகள் மாறலாம்
சீலங்கள் மாறினால் சிதைந்திடும் அனைத்தும்
ஞாலத்தில் வாழ்பவர் உணர்ந்த்திடல் வேண்டும்

வாழ்வினில் பற்பல மாற்றங்கள் வந்திடும்
வந்திடும் மாற்றங்கள் தந்திடும் திருப்பம்
தந்திடும் திருப்பம் தடுமாறச் செய்தால்
தடுமாறி வீழாமல் நிற்பதே முக்கியம்
சாதனை படைத்தோர் சந்திந்தார் இடர்பல
இடர்பல பார்த்து ஒதுங்கிடா நின்றார்
ஒதுங்கிடா நின்றவர் ஒருநிலை நின்றார்
ஒருநிலை நின்றார் உயரத்தைத் தொட்டார்
ஒதுங்கியே நின்றவர் உணர்வினை இழந்தால்
வருவது அனைத்தும் நழுவியே போய்விடும்
நழுவியே போனால் நட்டமே பெருகும்
நட்டம் பெருகினால் நாளெலாம் துன்பம்
மாற்றம் என்பது வந்திடல் வேண்டும்
வந்திடும் மாற்றம் மருந்தாக வேண்டும்
மாசெனும் நோயை அகற்றியே நின்றால்
மாநில வாழ்வு வளமாய் மலரும் !
![]()