இலங்கை

நீதியரசர்களின் பதவிக்காலத்தை நீடித்து ராஜபக்ச குடும்பத்தை பிடிக்க அரசு முயல்கிறதா?

நீதியரசர்களின் ஓய்வு பெறும் வயதெல்லையை அதிகரிப்பது தொடர்பில் அரசாங்கத்தின் வாதம் ஏற்புடையதல்ல என முன்னிலை சோசலிச கட்சியின் அரசியல் பீட உறுப்பினர் புபுது ஜாகொட சுட்டிக்காட்டியுள்ளார்.

ராஜபக்ச குடும்பத்திற்கு எதிராக உயர் நீதிமன்றில் எவ்வித வழக்குகளும் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கள்வர்களை பிடிப்பதற்காக இந்த சட்டத்தை சட்ட திருத்தத்தை கொண்டு வருவதாக அரசாங்க தரப்பு கூறி வருகின்றது என்ற போதிலும் உண்மையில் ராஜபக்சர்களுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் எவ்வித வழக்குகளும் கிடையாது எனவும் எனவே அரசாங்கத்தின் வாதம் பிழையானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நீதியரசர்களின் ஓய்வு பெறும் வயதெல்லையை அதிகரிப்பது தொடர்பில் அரசாங்கத்தினால் முன்வைக்கப்படும் காரணிகள் முன்னுக்குப் பின் முரணானவை என அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

நீதிமன்ற வழக்குகளின் நிலுவை எண்ணிக்கையை குறைப்பதற்காக ஓய்வு பெறும் வயதெல்லை அதிகரிக்கப்படுவதாக கூறும் அரசாங்கத்தின் வாதமும் பிழையானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வழக்கு நிலுவை எண்ணிக்கையை குறைக்க வேண்டுமானால் நீதிமன்றங்களில் நீதிபதிகளுக்கு நிலவும் பதவி வெற்றிடங்களை நிரப்ப வேண்டுமே தவிர ஓய்வு பெறும் வயதெல்லையை அதிகரிக்க வேண்டிய அவசியமில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

தற்பொழுது நீதவான் மற்றும் மேல் நீதிமன்றங்களில் கடமையாற்றும் நீதவான்கள் மற்றும் நீதிபதிகள் 80 வீதமானவர்கள் 30 முதல் 50 வயதுக்கு உட்பட்டவர்கள் என அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.எனவே வயதெல்லையை நீடிக்க வேண்டிய அவசரமான அவசியம் கிடையாது என சுட்டிக்காட்டி உள்ளார்.

மோசடிகள் ஊழல்கள் தொடர்பில் வழக்கு விசாரணை நடத்தப்பட்டு வரும் நீதவான் நீதிமன்றங்களின் நீதவான்களது ஓய்வு பெறும் வயது தொடர்பில் எவ்வித சிக்கல்களும் கிடையாது என அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

வெற்றிடங்களை நிரப்புவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க தவறியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றம் என்பனவற்றில் தலா நான்கு வெற்றிடங்கள் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

உயர் நீதிமன்றத்தில் காணப்படும் வெற்றிடங்களை நிரப்புவதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரம் இருந்த போதும் இதுவரையில் அந்த வெற்றிடங்கள் நிரப்பப்படவில்லை என சுட்டிக்காட்டி உள்ளார்.

சட்டமா அதிபர் திணைக்களத்திலும் சுமார் 200 பதவி வெற்றிடங்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

நீதவான் நீதிமன்றங்களில் சுமார் 100க்கும் மேற்பட்ட நீதவான்களுக்கான வெற்றிடங்கள் காணப்படுவதாகவும் இவற்றை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே அரசாங்கம் பதவி வெற்றிடங்களை நிரப்புவதற்கு போதிய அளவு நிதி ஒதுக்கீடு செய்து பதவி வெற்றிகளை நிரப்ப வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

மாறாக நீதி அரசர்களின் ஓய்வு பெறும் வயது எல்லையை அதிகரிக்க அரசியல் அமைப்பில் திருத்தங்கள் செய்வது பயனற்றது எனவும் புபுது ஜாகொட சுட்டிக்காட்டி உள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button