தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி ஒன்பதாவது வாரமாகப் பலாலியில் போராட்டம்

தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்குமாறு கோரி அமைதி வழியில் போராடிவரும் யாழ் பலாலி மக்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை தமது போராட்ட வடிவை மாற்றி வீதிக்கிறங்கிப் பேரணியிலும், போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
உயர் பாதுகாப்பு வலயம் என்ற பெயரில் இராணுவத்தால் நீண்டகாலம் அபகரிக்கப்பட்டு இன்றுவரை மீளளிக்கப்படாத நிலையில் அந்தப் பகுதி மக்கள் நேற்றைய தினம் ஒன்பதாவது வாரமாகத் தமது போராட்டத்தை மேற்கொண்டனர்.
இந் நிலையில் நேற்றைய தினம் காலை வழமையான தமது போராட்ட வடிவை மாற்றிப் பலாலி செபஸ்ரியார் ஆலயம் இருந்த இடத்திலிருந்து கறுப்பு உடை அணிந்து கறுப்புக் கொடி ஏந்தியவாறு பேரணியாகப் பலாலிச் சந்திவரை போராட்டத்தை முன்னெடுத்தனர். பலாலிச் சந்தியில் அமைந்துள்ள வீதிச் சோதனைச் சாவடி முன்பாகவும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி மக்கள் பொலிஸாருடன் சிறிது நேரம் வாக்குவாதத்திலும் ஈடுபட்ட நிலையில் போராட்டக் களத்தில் சற்றுப் பதற்றமான நிலை ஏற்பட்டது.
எனினும், போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் நண்பகல் 12.30 மணி வரை தமது அமைதிவழிப் போராட்டத்தைத் தொடர்ந்தும் முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
![]()