ஜனாதிபதி அநுரவோ, நாங்களோ இல்லாவிட்டாலும் தொடர்ந்தும் எமது அரசாங்கமே ஆட்சியில் இருக்கும்; இந்த அரசை இலகுவில் கவிழ்க்க முடியாது

மக்கள் போராட்டத்துடன் ஏற்பட்ட மாற்றத்தின் பின்னர் எமது அரசாங்கம் உருவாகியுள்ளதாலும், அரசாங்கத்திற்கு எதிராக மக்களை அணிதிரட்டக்கூடிய நாட்டுக்கு பொருத்தமான எதிர்க்கட்சித் தலைவரோ, எதிர்க்கட்சியோ இல்லாத காரணத்தினாலும் இந்த அரசாங்கம் இலகுவில் கவிழாது. தற்போதைய ஜனாதிபதி அநுரகுமாரவோ, நாங்களோ அடுத்த முறை தேர்தலில் போட்டியிடாவிட்டாலும் எமது அரசாங்கமே தொடர்ந்தும் ஆட்சியில் இருக்கும் என்று கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டீ.லால்காந்த தெரிவித்துள்ளார்.
எந்த சவாலையும் எதிர்க்கொள்ளத் தயார். பதவிப் பறிபோனாலும் கவலைப்பட மாட்டேன். அதனை மனப்பூர்வமாக ஏற்று விலகிச் செல்வேன் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க சட்டத்தரணிகள் சங்கத்தினருடனான சந்திப்பின் போது தெரிவித்துள்ளமை தொடர்பில், வெள்ளிக்கிழமை ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் கே.டீ.லால்காந்த இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது லால்காந்த மேலும் தெரிவித்துள்ளதாவது,
அரசாங்கம் தொடர்ந்தும் இருக்கும் என்பதும் ஒருவர் தொடர்ந்து இருப்பது என்பது வேறு. நானும் அடுத்த முறை தேர்தலில் போட்டியிட எதிர்பார்க்கவில்லை. அரசியலில் தொடர்ந்தும் இருந்து வேலை செய்வேன். தேர்தலில் போட்டியிடுவதற்கு வேண்டியளவுக்கு ஆட்கள் இருக்கின்றார்கள். நாங்கள் சாகும் வரையில் இருக்க வேண்டிய அவசியமில்லை. நாங்கள் இல்லாவிட்டாலும் இந்த அரசாங்கம் தொடர்ந்தும் பயணிக்கும். ஜனாதிபதி கூறியதற்கும் எமது தேர்தல் அறிக்கைக்கும் இடையில் வேறுபாடு கிடையாது.
எவ்வாறாயினும் இந்த அரசாங்கம் ஒருபோதும் கவிழாது. இது சும்மா வெறும் தேர்தலில் வந்த அரசாங்கம் அல்ல. இந்த நாட்டில் மக்கள் போராட்டமொன்று செயற்படுத்தப்பட்டு அதன் பின்னர் நடைபெற்ற தேர்தலில் வந்த அரசாங்கமே இப்போது இருக்கின்றது. மற்றைய காலத்தை போன்று வழமையான வழியில் வந்த அரசாங்கம் அல்ல இது. மக்களின் ஏதோவொரு மாற்றத்தின் பின்னர் வந்த அரசாங்கமே இது. இவ்வாறான அரசாங்கம் இலகுவில் வீழ்வதில்லை.
மக்களிடம் மீண்டும் செல்ல முடியாதவர்கள் தப்பிச் சென்ற பின்னர் உருவான அரசாங்கமாகவே இது. எவ்வளவு முயற்சித்தாலும் எதிர்க்கட்சியை உயிரூட்ட முடியாத நிலைமையே இருக்கின்றது. இந்த அரசாங்கத்தை வீழ்த்தக் கூடிய எதிர்க்கட்சி இருக்கின்றதா என்பதனை கூறுங்கள். அரசாங்கத்திற்கு எதிராக ஒரு பங்கினரையாவது ஒன்றிணைக்கக்கூடிய இடம் இருக்கின்றதா என்பதனை கூறுங்கள் பார்ப்போம். பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவரான சஜித் பிரேமதாச இருந்தாலும் நாட்டுக்கு மக்களை அடிப்படையாகக் கொண்ட எதிர்க்கட்சி எதுவென்று கூறுங்கள் பார்க்கலாம். இதனால் அரசாங்கம் கவிழாது, மாறாது என்பதனை விஞ்ஞானபூர்வமான ஆய்வின் பிரகாரமே கூறுகின்றோம்.
நான் தொடர்ந்தும் இருப்பதற்காக வரவில்லை. ஜனாதிபதி அடுத்த முறை தேர்தலில் போட்டியிடாமல் இருக்கலாம்.நாங்கள் தொடர்ந்தம் இருக்கவரவில்லை. ரில்வின் சில்வா போன்றவர்கள் எப்போதும் அரசியல் செய்தாலும் அவர்கள் எம்.பி.யாகவில்லை. அரசியல் செய்கின்றோம். ஆனால் தேர்தலில் போட்டியிடுவதற்காக அரசியல் செய்யவில்லை என்றார்.
![]()