இலங்கை

22 ஆவது திருத்தச் சட்டமூலம் 18 இல் சபைக்கு வருகிறது

நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதற்கான 22 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் எதிர்வரும் 18 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்காரவினால் இந்த சட்டமூலத்தை குறித்த தினத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்பட்டு வருகின்றது.

இந்த புதிய திருத்தத்தின்படி, உயர் நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை 65இல் இருந்து 67 ஆகவும், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை 63இல் இருந்து 65 ஆகவும் உயர்த்த முன்மொழியப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் அண்மையில் அரசாங்கத்தால் வெளியிடப்பட்டது.

இருப்பினும், இந்த சட்டமூலத்திற்கு எதிர்க்கட்சிக்கட்சிகள், நீதித்துறை சேவை சங்கம், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் மற்றும் சிவில் அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் அமைப்புகளும் தமது எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர். அத்துடன் மகாநாயக்க தேரர்களும் இந்த சட்டமூலம் தொடர்பில் தமது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.

இதேவேளை இந்த சட்டமூலத்திற்கு எதிர்ப்பு வெளியிடும் பல்வேறு தரப்பினர் இதனை நிறைவேற்ற வேண்டுமாயின் சர்வஜன வாக்கெடுப்புக்கும் செல்ல வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.

இவ்வாறான எதிர்ப்புகளுக்கு மத்தியிலேயே எதிர்வரும் 18ஆம் திகதி அதனை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது.

அரசியலமைப்பின் 121 ஆவது பிரிவின்படி, சட்டமூலமொன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு முதல் வாசிப்பிற்குப் பிறகு 14 நாட்களுக்குள் எந்தவொரு தரப்பினரும் அதை உயர் நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்த முடியும். அத்தகைய மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டால், 3 முதல் 21 நாட்களுக்குள் உயர் நீதிமன்றம் தனது தீர்மானத்தை பாராளுமன்றத்திற்கு அறிவிக்க வேண்டும்.

இந்நிலையில் இந்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர், அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு சிவில் அமைப்புகள் இந்த சட்டமூலத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்ய தயாராகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button