சாகா வரம் அளிக்கும் ’தேவதைகளின் பாலம்’

பைன் மரங்கள் நடுவே அமைந்துள்ள ஒரு சாதாரண குறுகிய பாலம் நம்மை வேறொரு மாய உலகத்திற்கு அழைத்துச் செல்லும் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? அது குறித்துப் பார்க்கலாம்.
பிரம்மாண்டமான கிரானைட் பாறைகள், பாதங்களுக்குக் கீழே மிதக்கும் மேகக்கூட்டங்கள் மற்றும் பாறைகளின் உச்சியில் படர்ந்துள்ள பழமையான பைன் மரங்கள் இவற்றுக்கு நடுவே அமைந்துள்ள ‘அமரர் பாலம்’ (Bridge of Immortals), சாதாரண பாலமாக இல்லாமல் நம்மை வேறொரு மாய உலகத்திற்கு அழைத்துச் செல்லும் பாதையைப் போலக் காட்சியளிக்கிறது. கிழக்கு சீனாவின் அன்ஹுய் (Anhui) மாகாணத்தில் உள்ள புகழ்பெற்ற ‘ஹுவாங்ஷான்’ (Mount Huangshan – மஞ்சள் மலைகள்) பகுதியில் இந்த அற்புத இடம் அமைந்துள்ளது.
எங்கு அமைந்துள்ளது இந்த ‘தேவதைகளின் பாலம்’?
‘பூக்சியன் பாலம்’ (Buxian Bridge) மற்றும் ‘தேவதைகளின் பாலம்’ (Fairy Bridge) என்றும் அழைக்கப்படும் இந்தப் பாலம், தெற்கு அன்ஹுய்யில் உள்ள ஹுவாங்ஷான் இயற்கை எழில் கொஞ்சும் பகுதியில் அமைந்துள்ளது. இயற்கை மற்றும் கலாச்சாரச் சிறப்புகளுக்காக 1990ஆம் ஆண்டில் யுனெஸ்கோவால் உலகப் பாரம்பரிய தலமாக அறிவிக்கப்பட்ட இந்த மலையின் இரு செங்குத்தான பாறை இடுக்குகளுக்கு இடையே இந்தப் பாலம் கட்டப்பட்டுள்ளது.
‘அமரர் பாலம்’ எனப் பெயர் வரக் காரணம் என்ன?
ஹுவாங்ஷான் மலையைப் பற்றிப் பல சாகா வரம் சார்ந்த கதைகள் உள்ளன. யுனெஸ்கோ கூற்றுப்படி, கி.பி. 747இல் டாங் வம்சத்தின் (Tang Dynasty) ஆட்சியின் போது, சாகா வரமளிக்கும் ‘அமிர்தம்’ இந்த மலையில்தான் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. மிகவும் உயரமான பாறை இடுக்குகளுக்கு நடுவே, மேகங்களைத் தொடும் உயரத்தில் அமைந்துள்ளதால், இது ‘அமரர் பாலம்’ (Bridge of Immortals) என்று அழைக்கப்படுகிறது.
சீன ஓவியங்களுக்கு உயிர் கொடுத்த இயற்கை எழில்
மேகக் கூட்டங்களுக்கு இடையே கம்பீரமாக நிமிர்ந்து நிற்கும் கிரானைட் பாறை உச்சிகள், பாறைகளில் விசித்திரமாக வளரும் பைன் மரங்கள், அருவிகள் மற்றும் மேகக் கூட்டங்கள் ஆகியவை ஹுவாங்ஷான் மலையின் தனிச்சிறப்புகளாகும். சீனாவின் பாரம்பரிய ‘ஷான்ஷுய்’ (Shanshui – மலை மற்றும் நீர்) பாணி இயற்கை ஓவியங்கள் மற்றும் கவிதைகளின் வளர்ச்சிக்கு இந்த மலையின் இயற்கை அழகே பல நூற்றாண்டுகளாக முதன்மைத் தூண்டுதலாக இருந்துள்ளது.
சவாலான மலைப் பயணம்
இந்தப் பாலத்தை அடைய வாகனங்களில் செல்ல முடியாது. செங்குத்தான பாறைப் பாதைகள் மற்றும் ஆயிரக்கணக்கான படிக்கட்டுகள் வழியே ஆபத்தான மலைப்பயணம் மேற்கொண்டே ஆக வேண்டும். மேலும், இங்கு நிலவும் தட்பவெப்பநிலை நிமிடத்திற்கு நிமிடம் மாறும் இயல்புடையது. தெளிவான வானிலை இருக்கும்போது கிரானைட் பாறை உச்சிகள் பிரம்மாண்டமாகத் தெரியும். அதுவே மேகமூட்டம் இருந்தால், நீங்கள் மேகங்களுக்கு நடுவே மிதப்பது போன்ற ஒரு மாய உலக அனுபவத்தைப் பெற முடியும்.
![]()