பீர் பாட்டில்களின் நிறத்திற்குப் பின்னால் இப்படி ஒரு காரணமா!

இளைஞர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் பீர், வெளிநாடுகளில் பல இடங்களில் சாதாரண பானமாகவே பார்க்கப்படுகிறது. ஆனால் இந்தியாவில் வயது வரம்புக்கு உட்பட்டவர்கள் மட்டுமே இதை அருந்த அனுமதிக்கப்படுகிறார்கள்.
பீரில் மற்ற சில மதுபானங்களைக் காட்டிலும் ஆல்கஹால் அளவு குறைவாக இருப்பதும், அதன் சுவையும் பலரைக் கவரும் காரணங்களில் ஒன்றாக இருக்கிறது.
ஆனால் பீர் குடிப்பது உடல் நலத்துக்கு தீங்கு என்பதையும் தாண்டி, அதை அடைத்து வைக்கும் பாட்டில்களின் நிறத்தை நீங்கள் எப்போதாவது கவனித்திருக்கிறீர்களா?இதற்குப் பின்னால் சுவாரஸ்யமான ஒரு வரலாறு இருக்கிறது.இது குறித்த விரிவான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.
ஏன் பழுப்பு அல்லது பச்சை நிறத்தில் இருக்கின்றன?
தானியங்களில் உள்ள மாவுச்சத்தை நொதிக்கச் செய்வதன் மூலமாகவே பீர் தயாரிக்கப்படுகிறது. பொதுவாக இதற்குத் தேவையான மாவுச்சத்து பார்லி முளைக்கூழிலிருந்து பெறப்படுகிறது. அதேவேளை கோதுமை, சோளம், அரிசி உள்ளிட்ட தானியங்களும் சில வகை பீர்களில் பயன்படுத்தப்படுகின்றன.
பல பீர் வகைகளில் ஹாப்ஸ் (Hops) எனப்படும் தாவரத்தின் பூக்கள் சுவையூட்டியாகப் பயன்படுத்தப்படுகின்றன. இவை பீருக்கு தனித்துவமான கசப்புச் சுவையை வழங்குவதோடு, இயற்கையான பாதுகாப்புப் பொருளாகவும் செயல்படுகின்றன.
சில பீர்களில் ஹாப்ஸுக்குப் பதிலாக மூலிகைகள், பழங்கள் உள்ளிட்டவையும் சுவையூட்டிகளாகப் பயன்படுத்தப்படுகின்றன.

அப்படி பீர் தயாரிப்பின் ஆரம்பகாலங்களில், அது பெரும்பாலும் வெளிப்படையான கண்ணாடிப் பாட்டில்களில் அடைத்து விற்கப்பட்டது. ஆனால் அதில் ஒரு பெரிய பிரச்சினை இருந்தது. சூரிய ஒளியில் உள்ள புற ஊதாக் கதிர்கள் (UV rays) வெளிப்படையான கண்ணாடி வழியாக பீருக்குள் ஊடுருவும்போது, பீரில் உள்ள சில வேதிப்பொருட்களுடன் வினைபுரிகின்றன. இதனால் பீரின் சுவையும் மணமும் மாறக்கூடும்.
இந்தப் பிரச்சினைக்கு தீர்வாகக் கண்டுபிடிக்கப்பட்டது தான் பழுப்பு நிற கண்ணாடிப் பாட்டில்கள். அடர்த்தியான பழுப்பு நிறக் கண்ணாடி சூரியனின் புற ஊதாக் கதிர்களை அதிகளவில் தடுத்து நிறுத்தியது. இதனால் பீரின் தரமும் சுவையும் நீண்ட நேரம் பாதுகாக்கப்பட்டது.

பீர் உற்பத்தியாளர்களுக்கும் இது பெரிய நிம்மதியைக் கொடுத்தது. ஆனால் வரலாறு மீண்டும் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தியது. இரண்டாம் உலகப் போரின்போது பழுப்பு நிறக் கண்ணாடிப் பாட்டில்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது.
இதனால் சில உற்பத்தியாளர்கள் மீண்டும் வெளிப்படையான பாட்டில்களைப் பயன்படுத்த வேண்டிய சூழல் உருவானது. ஆனால் அவற்றில் விற்கப்பட்ட பீரை வாடிக்கையாளர்கள் அவ்வளவாக விரும்பவில்லை. இதற்கு ஒரு வித்தியாசமான தீர்வை உற்பத்தியாளர்கள் கண்டுபிடித்தனர்.
பச்சை நிறக் கண்ணாடிப் பாட்டில்களை பயன்படுத்தத் தொடங்கி, அவற்றில் விற்கப்படும் பீரை பிரீமியம் வகை பீர் என்ற தோற்றத்தில் சந்தைப்படுத்தினர். இதன் மூலம் பச்சை பாட்டில்களுக்கும் தனி அடையாளம் உருவானது. அதன் பிறகு தான் பீர் உலகில் இரண்டு நிறங்கள் மிகவும் பிரபலமாகியதாக வரலாற்று சான்றுகள் காணப்படுகின்றன.
![]()