இலங்கை

பருத்தித்துறை அஞ்சல் அலுவலக காணி விடுவிப்பில் ஏமாற்றும் படைத்தரப்பு!

பருத்தித்துறை அஞ்சல் அலுவலகத்திற்கு சொந்தமான காணி விடுவிப்பு விடயத்தில் படைத்தரப்பு ஏமாற்று நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அம்பலப்படுத்தி உள்ளார்.

பருத்தித்துறை நகரபிதா வின்சென் டீ போல் டக்ளஸ் போலின் அழைப்பில் பருத்தித்துறைக்கு விஜயம் மேற்கொண்ட கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பருத்தித்துறை அஞ்சல் அலுவலகம் தற்காலிகமாக இயங்கும் இடத்திற்கு சென்று அதிகாரிகளுடன் கலந்துரையாடி நிலமைகளை கேட்டறிந்து கொண்டார்.

அத்துடன் இராணுவ கட்டுப்பாட்டி உள்ள பழைய கட்டிடம் மற்றும் விடுவிக்கப்பட தீர்மானிக்கப்பட்ட இடம் என்பவற்றை நேரில் சென்று பார்வையிட்டிருந்தார்.

காணி விடுவிப்பு

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், பருத்தித்துறை அஞ்சல் அலுவலகத்திற்கு சொந்தமான காணி கட்டடத்தினை இராணுவ கட்டுப்பாட்டில் இருந்து விடுவிப்பதற்கு விரைவில் நடவடிக்கை எடுப்பதாக அண்மையில் யாழ்பாணத்திற்கு விஜயம் செய்திருந்த வெகுஜன ஊடக பிரதியமைச்சர் கௌசல்யா ஆரியரத்ன யாழ் மாவட்ட அஞ்சல் திணைக்கள தரப்பினரிடம் உறுதியளித்திருந்தார்.

இது தொடர்பில் பிரதி அமைச்சர் நாடாளுமன்றத்தில் வைத்து நேரில் சந்தித்து கதைக்கும் போது குறித்த காணி விடுவிப்பு தொடர்பில் யாழ் விஜயத்தின் போது முன்வைக்கப்பட்டதாக தெரிவித்திருந்ததுடன் அதனை நிறைவேற்றுவது தொடர்பில் சாதகமான நிலையினையும் வெளிப்படுத்தி இருந்தார்.

படைத்தரப்பின் இருப்பை காரணம் காட்டி பருத்தித்துறை தபால் நிலைய காணி விடுவிக்கப்படாமையை ஒருபோதும் நியாயப்படுத்தி விட முடியாது. அதற்கான அழுத்தங்களை வழங்கி உரிய காணியை விடுவிக்க நடவடிக்கை எடுக்க உள்ளோம்.

காணி விடுவிப்பு இடம்பெற்று வரும் மேற்குறித்த நிலைவரங்கள் தொடர்பில் அண்மையில் கனேடிய தூதர் மற்றும் இந்திய தூதருடனான சந்திப்பில் தெளிவுபடுத்தியதுடன், காணி விடுவிப்பு தொடர்பில் வலியுறுத்தி உள்ளோம் எனக் குறிப்பிட்டார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button