அரசியல் பத்தித்தொடர்…. சொல்-54 … சொல்லித்தான் ஆகவேண்டும்…. தம்பியப்பா கோபாலகிருஸ்ணன்

இலங்கை தமிழர்களின் எதிர்கால அரசியல் பாதை
இலங்கை சுதந்திரமடைந்த காலத்திலிருந்து இதுகால வரையிலான கடந்த எண்பது ஆண்டுகால அரசியல் வரலாற்றில் தமிழர்களின் நேர்மறையான அரசியல் அறுவடையொன்று உண்டெனில் அது இந்திய -இலங்கை சமாதான ஒப்பந்தம் மட்டுமே.
ஆனால், அவ்வொப்பந்தத்தினூடான அனுகூலங்களைப் பெற்று அதிகாரப் பகிர்வு இலக்கை எய்துவதற்கு இலங்கைத் தமிழர்கள் தவறிவிட்டனர். காரணம் தமிழீழ விடுதலை புலிகள் இயக்கமே.
தமிழீழ விடுதலைப் புலிகள் அவ்வப்போது அடைந்த இராணுவ மற்றும் அரசியல் வெற்றிகளெல்லாம் வெறும் தற்காலிக சாகசங்கள் மட்டுமே தவிர அவை நீண்ட கால நோக்கில் தமிழ் மக்களுக்கு எந்தவிதமான சமூக – பொருளாதார – அரசியல் மேம்பாட்டையும் பெற்றுத்தரவில்லை.
கடந்த காலங்களில் புலிகளின் சரிபிழைகளுக்கு அப்பால் தாய் நிலத்திலும் சரி புலம்பெயர் நாடுகளிலும் சரி தமிழர்கள் பெருவாரியாகப் புலிகளையே ஆதரித்து நின்றதாலும் புலிகளின் இராணுவ பலம் மேலோங்கி இருந்தமையாலும் இலங்கைத் தமிழர்களுடைய அரசியல் பொது வெளியில் முற்போக்கான-புரட்சிகரமான-முழுக்க முழுக்க மக்கள் நலன் சார்ந்த அரசியல் பாதையில் பயணிப்பதற்கான அரசியல் செல்நெறியை வகுத்து தமிழ் மக்களால் அதில் வினைத்திறனுடன் பயணிக்க முடியவில்லை.
புலிகளின் ஆயுதபலம் அதற்குத் தடையாக இருந்தது.
இலங்கைத் தமிழர்களின் உரிமைப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதற்கு வரலாற்று ரீதியாகவும்-பூகோள அரசியல் நலன்கள் ரீதியாகவும்-உணர்வுபூர்வமாகவும் உதவக்கூடிய நடைமுறைச் சாத்தியமான வெளிச்சக்தி இந்திய மத்திய அரசாங்கம் மட்டுமே. இந்தியா மட்டுமே இலங்கைத் தமிழர்களின் நேச சக்தியாக விளங்க முடியும். இதனைத் தத்துவார்த்தரீதியாகத் தெளிவாகப் புரிந்து கொண்டு அதற்காக உழைத்தவர்களில் மிதவாதத் தமிழ்த்தலைவர்களில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னாள் செயலாளர் நாயகம். அமிர்தலிங்கத்தையும் ஆயுதப் போராட்ட இயக்கத் தலைவர்களுள் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் முன்னாள் செயலாளர் நாயகம் தோழர் பத்மநாபாவையுமே அடையாளப்படுத்த முடியும்.

அமிர்தலிங்கம் அவர்களின் 1983க்கு முந்திய அரசியல் செயற்பாடுகள் பலவிதமான வாதப்பிரதிவாதங்கள் மற்றும் விமர்சனங்களுக்கு உட்பட்டதாயினும் ‘கறுப்பு ஜூலை’ என வர்ணிக்கப்படும் 1983 ஜூலைக் கலவரத்தின்போது மன்னாரில் நடைபெற்ற தமிழர் விடுதலைக் கூட்டணியின் தேசிய மாநாட்டை முடித்துக் கொண்டு கத்தோலிக்க மதகுருவின் மாறுவேடத்தில் கொழும்பு வந்து அப்போது ஜனாதிபதி ஜே. ஆர். ஜெயவர்த்தன அரசாங்கத்தில் அமைச்சராயிருந்த தொண்டமான் அவர்களின் உதவியுடன் கொழும்பு விமான நிலையம் சென்று பயணித்து சென்னையை அடைந்து தமிழ்நாடு மாநில மற்றும் இந்திய மத்திய அரசியல் தலைவர்களையும் குறிப்பாக இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியைச் சந்தித்து அவரின் ஆதரவுடன் அமிர்தலிங்கம் அவர்கள் மேற்கொண்ட அர்ப்பணிப்புடன் கூடிய அரசியல் செயல்பாடுகளின் ஊடாகவே இந்திரா காந்தியின் மரணத்தின் பின் பிரதமராகப் பதவியேற்ற ராஜீவ்காந்தி அவர்களின் காலத்தில் 1987 ஜூலை 29 அன்று ‘இந்திய-இலங்கை சமாதான ஒப்பந்தம்’ கொழும்பில் கைச்சாத்தானது.
இந்திய-இலங்கை சமாதான ஒப்பந்த உருவாக்கத்தில் அமிர்தலிங்கம் அவர்கள் எவ்வாறு பங்களித்தாரோ அதற்குச் சற்றும் குறைவில்லாமல் அவ்வொப்பந்தத்தை அரசியல் தீர்க்க தரிசனத்துடன் அனுசரித்துப்போய்த் தமிழீழ விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் ஒப்பந்தத்தை அமுல் செய்வதில் அர்ப்பணிப்புடன் உழைத்தவராகத் தோழர் பத்மநாபா உயர்ந்து நிற்கிறார்.
இந்திய-இலங்கை சமாதான ஒப்பந்தத்தின் விளைவான பதின்மூன்றாவது அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தினால் உருவான வடக்கு கிழக்கு மாகாணங்கள் (தற்காலிகமாக) இணைந்த ஒற்றை வடக்கு கிழக்கு மாகாண அரசை நிறுவுவதற்கான மாகாண சபைத் தேர்தலில் வாக்களிக்காதிருக்கும்படி-தேர்தலைப் பகிஷ்கரிக்கும்படி-புலிகள் மக்களை அச்சுறுத்தியபோது, ‘துப்பாக்கியால் பூட்டப்பெற்ற ஜனநாயகத்தின் கதவுகள் துப்பாக்கியாலேதான் திறக்கப்பட வேண்டும்’ என்று ஊடக அறிக்கை மூலம் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்ததன் மூலம் அமிர்தலிங்கம் அவர்கள் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி முன்வந்து போட்டியிட்ட மாகாண சபைத் தேர்தலில் வாக்களிப்பதற்கு மக்களைத் தூண்டித் தோழர் பத்மநாபா அவர்களுக்கு ஆதரவு கொடுத்தார்.
இந்தியாவைத் தமிழ்மக்களின் நேசசக்தியாக ஏற்று சரியானதும் அறிவுபூர்வமானதுமான அரசியல் நிலைப்பாட்டை மக்கள் நலன் சார்ந்து இவ்வளவு ஓர்மத்துடன் எடுத்த துணிச்சலான மிதவாத அரசியல் தலைவரொருவரை அமிர்தலிங்கத்தின் மரணத்தின் பின் தமிழ் மக்களின் அரசியல் பொதுவெளியில் அடையாளம் காணமுடியவில்லை. அதேபோல்தான் ஆயுதப்போராட்ட இயக்க தலைவர்களுள் தன்னலமறுப்பும் தத்துவார்த்தத் தெளிவும் முழுக்க முழுக்க மக்களின் நலன்களுக்கு முன்னுரிமை வழங்கிச் செயற்பட்ட தலைவனாகத் தோழர் பத்மநாபாவைத் தவிர வேறொருவரையும் அடையாளம் காணமுடியவில்லை.
ஆனால், தமிழீழ விடுதலைப் புலிகளின்-பிரபாகரனின் ஆயுத முனையை மேவி இரு தலைவர்களும் விசுவாசித்த அரசியல் பாதையில் அவர்கள் நேசித்த மக்களைக் கொண்டு செல்ல முடியவில்லை. ஈற்றில் இருவருமே புலிகளின் துப்பாக்கிக்கிரையானார்கள் என்பது ஒரு துன்பியல் வரலாறு.
புலிகளின் துப்பாக்கிக்கு இரையான இந்த இரு தலைவர்களும் இந்திய – இலங்கை சமாதான ஒப்பந்தத்தை அனுசரித்துச் செயற்பட்டவர்கள் மட்டுமல்ல இவ்வாறானதொரு ஒப்பந்தம் கைசாத்திடப் பெறுவதற்கும் கைச்சாத்திடப்பெற்ற அவ்வொப்பந்தம் முழுமையாக அமுல் செய்யப்படுவதற்கும் புலிகளின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் துணிச்சலுடன் உயிருக்குப் பயப்படாது பாடுபட்டவர்களுமாவர்.
இந்த இரு தலைவர்களும் மரணத்தைத் தழுவி முப்பத்தாறு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் அண்மைக்காலமாக இரு தலைவர்களினதும் (குறிப்பாகத் தோழர் பத்மநாபாவின்) அரசியல் தீர்க்கதரிசனமும்-அர்ப்பணிப்புடன் கூடிய அரசியல் செயற்பாடுகளும் தமிழர்களுடைய அரசியல் பொதுவெளியில் படிப்படியாக உணரப்படுவதைக் காணமுடிகிறது.
இது ஒரு நல்ல காலமாற்றமாகும். இது முழுமையாகவும் அகரீதியாகவும் தமிழ் மக்களால் உணரப்படும்போது இது காலவரையும் போதையூட்டப்பட்ட ‘புலிசார்’ உளவியலிலிருந்து விடுபடுவதற்கான அகத்தூண்டல் ஏற்படும். இந்த அகத்தூண்டல்தான் இலங்கைத் தமிழர்களின் அடுத்த கட்ட அரசியல் பாதைக்கான ஆரம்பப் புள்ளியாகும்.
ஆகவே, முதலில் இலங்கைத் தமிழர்களிடையே உள்ள தமிழ் அரசியல்வாதிகளும்-கல்விமான்களும்-அரசியல் ஆர்வலர்களும்-அரசியல் ஆய்வாளர்களும்-எழுத்தாளர், கலைஞர், ஊடகவியலாளர்களும் ‘புலி சார்’உளவியலில் இருந்து தம்மை முற்றாக விடுவித்துக் கொண்டு தமிழ் மக்களுக்கு ஓர் அறிவுபூர்வமான-முற்போக்கான-புரட்சிகர-யதார்த்த பூர்வமான-தனி நபர் நலன்களையோ கட்சி நலன்களையோ முதன்மைப்படுத்தாது மக்கள் நலனை மட்டுமே முதன்மைப்படுத்தும் ஓர் அரசியல் பாதையை திசை காட்ட அர்ப்பணிப்புடனும் அரசியல் சித்தாந்தத் தெளிவுடனும் பகிரங்கமாக வெளிவர வேண்டும்.
மிக அண்மைக் காலமாகத், தோழர் பத்மநாபா வகுத்த அரசியல் பாதையே நீண்ட கால நோக்கில் இலங்கைத் தமிழர்களுக்கு நன்மையளிக்கக்கூடியது என்ற உண்மை வரலாற்று ரீதியாகவும் அனுபவங்களினூடாகவும் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்களாலும்கூட அரை மனதோடாயினும் உணரப்பெற்று அதற்கான அடையாளங்கள் ஆங்காங்கே தமிழர்களுடைய அரசியல் பொதுவெளியில் அரும்ப ஆரம்பித்துள்ளமை நல்லதோர் அறிகுறியாகும்.
![]()