சுறுசுறுப்பாக இயங்கிய ஜப்பான்!… விறுவிறுப்பாக தொடர்ந்த பயணம்!!… தொடர்- 11…. சங்கர சுப்பிரமணியன்


இந்த அரண்மனையைச் சுற்றி இருக்கும் அகழி, பசுமையான பூங்கா என்று பரந்து விரிந்து கிடக்கும் மற்ற இடங்களைப் பார்க்க நுழைவுக்கட்டணம் இல்லை. இந்த அரண்மனையைச் சுற்று பெரிய பெரிய கற்களைக் கொண்டு கோட்டை கட்டியுள்ளார்கள். ஒவ்வொரு கற்களும் கோட்டைச் சுவர் உயரத்தில் இருப்பது நம்மை வியப்படைய வைக்கிறது.
இந்த அரண்மனை வளாகம் இரண்டாம் உலகப் போரின்போது பெரிய ஆயுதக் கிடங்குகளில் ஒன்றாகத் திகழ்ந்தது. மேலும் அச்சமயம் அங்கு 60,000 பேர் பணி புரிந்தார்கள். இந்த ஆயுதக் கிடங்கை குறிவைத்து ஆகஸ்ட்14, 1945ல் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் தொன்னூறு சதவிதம் ஆயதக்கிடங்கு அழிந்ததோடு மட்டுமின்றி அங்கு பணிபரிந்த மக்களில் 282பேர் கொல்லப்பட்டார்கள்.
1997ல் முதன்மையான கோட்டை மீண்டும் காங்கிரிட்டால் பழைய கோட்டையைப் போன்றே கட்டப்பட்டது. நவீனமாக மாற்றப்பட்டுள்ள உட்பகுதி தற்போது அருங்காட்சியகமாக உள்ளது.
ஒசாகா அரண்மனை வளாகம், பூங்கா மற்றும் அகழி போன்றவற்றை பார்வையிட்டோம். அரண்மனையைச் சுற்றிலும் நிறைய செர்ரி மரங்கள் இருந்தன. அப்போது தான் பூக்கத் தொடங்கியிருந்தன. அதனால் செர்ரி ப்ளாசம் என்று சொல்லப்படும் மலர்ச்செரிவை ஒஸாகாவில் பார்க்க முடியவில்லை. ஒவ்வொரு இடத்திலும் பார்க்க வேண்டிய சிறப்பு வாய்ந்தவை என்று இருக்கும்.
அதேபோல் ஜப்பானில் செர்ரி ப்ளாசம் என்று செர்ரி மரங்கள் பூத்துக் குலுங்குவதை பார்ப்பதும் சிறப்பானது. இப்படிப் பூக்கும் காலங்கள் ஒன்றிரண்டு வாரங்கள் முன்பின் நிகழலாம். இந்த செர்ரி மரங்கள் ஜப்பான் முழுவதும் ஒரே நேரத்தில் பூப்பதில்லை. ஆனால் ஒருமாத காலத்தில் பூத்து முடிந்து விடும்.
பூ பூக்கும் பருவகாலத்தில் நன்றாக திட்டமிட்டு சென்றால் ஒசாகாவில் தவறவிட்டால் டோக்கியோ, கியோட்டா, ஹிரோஷிமா என்று ஏதாவது ஒரு இடத்தில் பார்த்துவிடலாம். அதை அடுத்து மவுண்ட் ப்யூஜி என்ற எரிமலையும் பார்க்க வேண்டும்.
இந்த எரிமலை சுவாமி தரிசனம் மாதிரி. திருப்பதியில் ஏழுமலையானை பார்க்கவிடாமல் சருகண்டி சருகண்டி என்று சொல்வதப்போல் இங்கும் ஒன்று நடவாதிருக்க வேண்டும்.
அதாவது மேக மூட்டங்கள் மலையை மூடாதிருக்க வேண்டும். மழை பெய்யாதிருக்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே இத் ப்யூஜி என்ற எரிமலையைப் பார்க்கலாம்.
இந்த மலையைப் பார்க்க சில வழிகள் உண்டு. அதில் ஒன்று புல்லட் ரயிலில் போனால் பார்க்கலாம். ஒசாகாவில் இருந்து டோக்கியோ போகும்போதும் அல்லது டோக்கியோவிலிருந்து கியோட்டோ வரும்போதும் இந்த வாய்ப்பு கிடைக்கும்.
இன்னொரு வழி லேக் அஷி என்ற ஏரி. டோக்கியோவுக்கு தென்மேற்கில் நூறு கிலோமீட்டர் தொலைவில் உள்ள மவுண்ட் ப்யூஜியை லேக் அஷி செல்வதன் மூலம் பார்க்கலாம். ஹஹோன் என்ற இடத்திற்கு செல்வதன் மூலம் லேக் அஷி மற்றும் மவுண்ட் ப்யூஜி இரண்டையும் கண்டு களிக்கலாம். ஹஹோன் செல்வதால் இன்னும் ஒரு அனுபவத்தையும் பெறலாம்.
ஹஹோனில் உள்ள ஒவாகுடனில் கொதிக்கும் வெந்நீர் ஊற்றுகளையும் சல்பர்
கறைபடிந்த மஞ்சள் பாறைகளையும் பார்க்கலாம். கொதிக்கும் சூடான சல்பர் கலந்த நீரில் நேரடியாக முட்டைகளை வேகவைத்து கொடுக்கிறார்கள். அப்படி வேகவைக்கும் போது ஏற்படும் இரசாயண மாற்றத்தால் முட்டைகள் முட்டைகள் மிகவும் கருப்பாக மாறி விடுகின்றன.
இந்த முட்டை சம்பந்தமாக அங்குள்ளோரிடம் ஒரு நம்பிக்கை உள்ளது. ஒரு முட்டையை சாப்பிட்டால் நம் வாழ்நாளில் ஏழு ஆண்டுகள் கூடுமாம். ஒரு முட்டையாக கிடைப்பதில்லை. நான்கு முட்டைகள் கொண்ட பெட்டிகளில் மட்டுமே கிடைக்கும். அதற்காக நான்கு முட்டைகளை சாப்பிட்டால் வாழ்நாள் 28 ஆண்டுகள் நீடிக்குமா என்பது சந்தேகமே.
இதுவெல்லாம் கட்டுக்கதைகளாக இருக்கலாம். மற்றபடி விஞ்ஞான பூர்வீகமாக நிரூபிக்கப் படவில்லை. காசியில் கங்கை நீராடினால் புண்ணியம் என்பதைப்போல்தான். ஊர்முழுக்க பாவங்களை செய்துவிட்டு கங்கையில் குளித்தல் பாவங்கள் போய்விடுமா? அதுபோல் வென்னீர் ஊற்றில் வேகவைத்த முட்டையை சாப்பிடுவதால் ஏழாண்டு கூடும் என்பதை ஏற்கமுடியாது.
எனது முட்டைபற்றிய சந்தேகம் சரியாகவே இருந்தது. அந்தப்பகுதி மக்கள் மூன்றாவது முட்டையை சாப்பிடும் முன் எச்சரிக்கை விடுத்திருப்பதும் தெரிய வந்தது. அதுஎன்ன தெரியுமா? பேராசைப்பட்டு மூன்று நான்கு முட்டைகளை சாப்பிட்டால் உங்களுக்கு நல்லது நடக்காமல் போவதுடன் ஒன்றிரண்டு முட்டை சாப்பிட்ட பலனான ஏழு ஆண்டு ஆயுள் நீடிப்பும் நடக்காமல் போய்விடும் என்பதே அந்த எச்சரிக்கை.

ஒரு முட்டையை சாப்பிட்டு ஏழு ஆண்டு ஆயுளைக் கூட்ட முடியுமானால் சித்திரகுப்தன் தன் கணக்கை திருப்பி எழுதவேண்டும். எமதர்மன் தொழிலிலும் முன்னுக்குப்பின் முரண்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் இந்த முட்டைகளை சாப்பிடுவதால் சிலருக்கு வயிற்றுப் பிரச்சினைகள் வரலாம். அத்தோடு இந்த முட்டை அழுகிய முட்டையின் நாற்றமுடையதாக இருப்பதோடு அந்த இடமே ஒருவகை நாற்றமுடையதாக இருக்குமாம்.
அடுத்ததாக வென்னீர் ஊற்றிலும் பாதுகாப்பானதும் இருக்கிறது. பாதுகாப்பற்றதும் இருக்கிறது. இந்த வென்னீர் ஊற்றுக்களில் சில அமிலத்தன்மை அதிகமுடையதாக இருப்பதால் தோல் சம்பந்தமான வியாதிகள் வரவும் வாய்ப்புள்ளது என்கிறார்கள். இப்போது சாணக்குளியல் என்ற ஒன்றைப் பற்றி சொல்லியே ஆகவேண்டும்.
பசுமாட்டு சாணத்தை உடல்முழுவதும் பூசி குளிப்பதென்பது ஒரு பாரம்பரிய
ஆன்மீக வழிபாட்டு முறையாகும். ஆயுர்வேத மருத்துவ நம்பிக்கையின்படி இதில் கிருமிநாசினி தன்மைகள் உள்ளனவாம். இந்துமத கோட்பாடுகளின் படி பஞ்சகவ்யத்தில் ஒன்றான மாட்டுச் சாணம் உடலையும் ஆன்மாவும் சுத்தப்படுத்தப் படுத்துகிறதென நம்பப் படுகிறது.
ஆன்மீக சுத்தத்தில் பஞ்சகவ்யம் என்று சொல்லப்படுகிற பால், தயிர், நெய், கோமியம் மற்றும் சாணம் போன்றவை பெரும் பங்கு வகிக்கிறது. ஒன்றைக் கவனித்தீர்களா? பச்சகவயத்தில் பால், தயிர், மற்றும் நெய் போன்றவை பகவானுக்கு அபிசேகத்தில் பயன் படுத்தப்படுகிறது. பஞ்சகவ்யமே என்றாலும் கோமியமும் சாணமும் மனிதனுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அவை பகவானுக்கு கிடையாது.

திரும்பவும் சாணக்குளியலுக்கு வருவோம். சாணத்தில் உள்ள குளிர்ச்சித் தன்மை தோல் வியாதிகள் மற்றும் அரிப்புகளை குணப்படுத்தும் என்று நம்புகிறார்கள். ஆனால் அறிவியலின்படியும் மருத்துவ முறைப்படியும் மாட்டுச் சாணத்தில் மனிதர்களுக்கு பாதிப்பைத் தரக்கூடிய பாக்டிரியாக்களும் ஒட்டுண்ணிகளும் நிறைய உள்ளன. இவை குளிக்கும்போது உடலிலுள்ள சிறு காயங்கள் வழியாக உட்சென்று கடுமையான தொற்று நோயை உண்டாக்கலாம்.
(தொடரும்…)
![]()