தமிழ் அரசியல் கைதிகளின் பாதுகாப்பு குறித்து அச்சம்; மகசின், வெலிக்கடைச் சிறைகளுக்குச் சென்ற பெற்றோர்

சிறைச்சாலைகளில் தொடர்ந்தும் இடம்பெற்று வரும் பெரும் கலவரங்கள் காரணமாக தமிழ் அரசியல் கைதிகளின் பெற்றோர்கள் மத்தியில் மிகுந்த அச்சநிலை ஏற்பட்டுள்ளது.
இந் நிலையில் அரசியல் கைதிகளின் பெற்றோர் கொழும்பு மகசின் சிறைச்சாலை மற்றும் வெலிக்கடைச் சிறைச்சாலைகளுக்கு நேரடியாகச் சென்று தமது பிள்ளைகளைப் பார்வையிட்டனர். இதன்போது குரலற்றவர்களின் குரல் அமைப்பின் செயற்பாட்டாளரும், முன்னாள் அரசியல் கைதியுமான முருகையா கோமகனும் உடனிருந்தார்.
இதுதொடர்பாக குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முருகையா கோமகன் தெரிவிக்கையில்,
தமிழ் அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள புதிய மகசின் சிறைச்சாலையில் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டதைத் தொடர்ந்து அங்கு ஒரு மரணமும் சம்பவித்தது. அங்கு தமிழ் அரசியல் கைதிகள் நால்வர் தடுத்து வைக்கப்பட்டுள்ளளனர். அதேபோல வெலிக்கடைச் சிறைச்சாலையிலும் தமிழ் அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்தச் சிறைச்சாலைகளில் தற்போது பொலிஸ் மற்றும் இராணுவத்தினர் ஆகியோர் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் அரசியல் கைதிகளின் பாதுகாப்பு என்பது தொடர்ச்சியாகக் கேள்விக்குறியாகத் தான் உள்ளது. கடந்த காலங்களில் அரசியல் கைதிகளுக்குச் சிறைகளில் நடந்த சம்பவங்களை நினைக்கும்போது அச்சம் கொள்ளத் தோன்றுகிறது. பெற்றோரும், அங்கு உள்ள கைதிகளும் அச்சமான சூழ்நிலையில் உள்ளார்கள்.
இந்த நிலையைக் கருத்தில் கொண்டு சிறையில் நீண்ட காலமாகத் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதுடன் தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
![]()