இலங்கை

22 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்துக்கு சர்வஜன வாக்கெடுப்பு தேவை ஜனாதிபதிக்கு அவசர கடிதம்; கூட்டு எதிர்க்கட்சி அனுப்பியது

நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் நோக்கில் அரசால் கொண்டு வரப்படவுள்ள 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் குறித்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ள நிலையில்,மக்களின் இறையாண்மையை மீறும் வகையில் அதிகாரத்தை மக்களிடமிருந்து பறிக்க முடியாது என்பதால், அரசியலமைப்பின் 107(5) ஆம் பிரிவைத் திருத்துவது தொடர்பில் அரசாங்கத்தின் தீர்மானம் குறித்து மக்களின் விருப்பத்தை வெளிப்படையாக அறிந்து கொள்வதற்காக சர்வஜன வாக்கெடுப்பு அத்தியாவசியமானது என கூட்டு எதிர்க்கட்சி வலியுறுத்தியுள்ளது.

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிப்பதற்கு அரசாங்கம் எடுத்திருக்கும் தீர்மானம் குறித்து கூட்டு எதிர்க்கட்சி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே இவ்வாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்துள்ள அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

நாட்டின் அரசியலமைப்பின் 3 ஆம் பிரிவின்படி, இலங்கைக் குடியரசின் இறையாண்மை மக்களிடம் உரித்தாயிருப்பதுடன் அது கைவிடப்பட முடியாததுமாகும். மேலும், மக்களின் நீதித்துறை அதிகாரமானது அரசியலமைப்பினால் அங்கீகரிக்கப்பட்ட நீதிமன்றங்கள் மற்றும் நிறுவனங்கள் மூலம் மாத்திரமே செயற்படுத்தப்பட வேண்டும் என அரசியலமைப்பின் 4(இ) பிரிவில் கூறப்பட்டுள்ளது.

3 ஆம் பிரிவானது திருத்தம் செய்யப்படுவதற்கோ அல்லது ரத்து செய்யப்படுவதற்கோ பாராளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு மேலதிகமாக சர்வஜன வாக்கெடுப்பு (83 ஆம் பிரிவின்படி) கட்டாயம். 3 மற்றும் 4 ஆம் பிரிவுகள் ஒன்றோடொன்று பிரிக்க முடியாதவாறு பிணைந்துள்ளதால், 4 ஆம் பிரிவுக்கும் அதேபோன்ற பாதுகாப்புரிமை உண்டு என உயர்நீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பளித்துள்ளது.

ஏ .வி.என். பெரேரா – சட்டமா அதிபர் (A.V.N. Perera v. Attorney-General (SC (SD) No. 30/2022)) வழக்கின் தீர்ப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளவாறு, நிறைவேற்றுத்துறை மற்றும் சட்டவாக்கத்துறையின் தலையீடுகளிலிருந்து பாதுகாப்பதற்கு சுயாதீனமான நீதித்துறை இல்லையெனில், மக்கள் உரிமைகளுக்கோ அல்லது நீதி அதிகாரத்திற்கோ அரசியலமைப்பு அங்கீகாரம் வழங்குவதில் எவ்வித பயனுமில்லை.

மேலும், 2022 உள்நாட்டு இறைவரி (திருத்த) சட்டமூலத்தின் அரசியலமைப்பு அமைவுடைமை தொடர்பான உயர்நீதிமன்றத் தீர்ப்பில் , பதவிக் காலத்திற்கோ அல்லது ஓய்வுபெறும் வயதிற்கோ பாதிப்பு ஏற்படும் வகையில் மேற்கொள்ளப்படும் எந்தவொரு அரசியலமைப்புத் திருத்தமும் நேரடியாகவோ மறைமுகவோ பதவியிலிருக்கும் நீதிபதிகளைப் பாதிக்குமாயின், அது நீதித்துறையின் சுயாதீனத்தைப் பாதிப்பதுடன் சர்வஜன வாக்கெடுப்புத் தேவைப்படும் 3 ஆம் பிரிவை மீறும் செயலாகும் எனத் தெளிவாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சட்டத்தரணிகள் சங்கம், புத்திஜீவிகள் மற்றும் சிவில் சமூகம் போன்ற தரப்பினருடன் நீண்டகாலக் கலந்தாலோசனைகளுக்குப் பின்னரே இவ்வாறான மாற்றங்களை மேற்கொண்ட ஏனைய நாடுகளின் அனுபவங்களுக்கு மாறாக, இங்கு எவ்வித உரையாடலோ அல்லது வினவலோ இன்றி அவசரமாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் கடுமையான சந்தேகத்திற்கும் கவலைக்கும் வழியமைத்துள்ளன. இது ஐரோப்பிய ஆணைக்குழுவினால் (வெனிஸ் ஆணைக்குழு) விதிக்கப்பட்டுள்ள நல்லாட்சி மற்றும் அர்த்தமுள்ள உரையாடல் என்ற முன்நிபந்தனைகளுக்கு முரணானதாகும்.

நீதிமன்ற நடத்தை பற்றிய பெங்களூர் கோட்பாடுகள் (2002) மற்றும் சர்வதேச நீதித்துறை சுயாதீனத் தரநிலைகளின்படி, உண்மையான பக்கச்சார்பு நிலை நிரூபிக்கப்படாவிட்டாலும், பக்கச்சார்புடையது என்ற நியாயமான சந்தேகமும் தீர்ப்பொன்றைச் செல்லுபடியற்றதாக்குவதற்குப் போதுமானது. குற்றம்சாட்டப்பட்டுள்ள இந்நடவடிக்கையின் பயனாளிகளாகப் பாதிக்கப்படக்கூடிய உயர்மட்ட நீதித்துறை சார்ந்த விடயங்கள் கையாளப்படும் விதம் குறித்து நியாயமான கேள்விகள் எழுகின்றன.

எனவே மக்களின் இறையாண்மையை மீறும் வகையில் அதிகாரத்தை மக்களிடமிருந்து பறிக்க முடியாது என்பதால், அரசியலமைப்பின் 107(5) ஆம் பிரிவைத் திருத்துவதற்கு முன்மொழியப்பட்டுள்ள சட்டமூலத்தை சர்வஜன வாக்கெடுப்பு மூலம் மக்களிடம் சமர்ப்பிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாக அரசியலமைப்பின் 85(1) ஆம் பிரிவின் பிரகாரம் சான்றளிக்குமாறு அமைச்சரவைக்கு உத்தரவிடுமாறு உங்களை கேட்டுக்கொள்கிறோம்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button