இலங்கை

ஆசியக் குற்றக் கும்பல்களின் புதிய சொர்க்கமாக இலங்கை; துறைமுக நகரத்தை மையமாக்கி பெரிய அளவில் சூதாட்டமும் நிதி மோசடியும்

பிலிப்பைன்ஸ் மற்றும் கம்போடியா போன்ற நாடுகளில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட ஆசியக் குற்றக் கும்பல்களுக்கும் சட்டவிரோத இணையவழி சூதாட்ட வணிகங்களுக்கும் இலங்கையும் அதன் துறைமுக நகரமான கொழும்பும் சமீபத்திய புகலிடமாக மாறி வருவதாக ‘ஞாயிறு ஐலன்ட்’ விசேட செய்தியொன்றில் தெரிவித்துள்ளது.

விரிவான அந்தச் செய்தியின் சுருக்கமான தகவலின் படி,

சீனா, பிலிப்பைன்ஸ், வியட்நாம் மற்றும் கம்போடியா போன்ற நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானவர்கள், செல்லுபடியாகும் விசாக்களுடனும் விசாக்கள் இல்லாமலும் நாட்டில் தங்கியிருந்து , இந்த மோசடிகளில் ஈடுபட்டுள்ளனர்.

டிக்டொக், ரெலிகிராம் மற்றும் ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடகங்கள் மூலம் அவர்கள் ஆட்சேர்ப்பு செய்யப்படுகிறார்கள். மேலும், 1,200 முதல் 2,000 அமெரிக்க டொலர்கள் வரையிலான அதிக சம்பளம், ஆடம்பரமான தங்குமிடம், உணவு மற்றும் குடி பானங்கள் ஆகியவற்றை வழங்குவதாக வாக்குறுதியளித்து இந்த மோசடிக் கும்பல்கள் நடத்தப்படுகின்றன.

இந்தச் செயல்பாடுகளில் பல, பிலிப்பைன்ஸில் தடைசெய்யப்பட்ட ‘POGO’ (பிலிப்பைன் ஒப்ஷோர் கேமிங் ஒப்பரேட்டர்ஸ்) வணிகங்களைப் போலவே உள்ளன. அவை அந்நாட்டில் தகவல் தொழில்நுட்பம் அல்லது வணிகச் செயல்முறை அவுட்சோர்சிங் (BPO) நிறுவனங்களாக மாறுவேடமிட்டுள்ளன.

சூதாட்டத்துடன், நிதி மோசடி, ஹக்கிங்(ஊடுருவல்) தாக்குதல்கள், பணமோசடி மற்றும் ஆட்கடத்தல் போன்றவையும் இந்தக் குற்றக் கும்பல்கள் மூலம் மேற்கொள்ளப்படுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், பணம் செலுத்தும் நோக்கங்களுக்காக கிரிப்டோகரன்சிகள் பரவலாகப் பயன்படுத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது.

துறைமுக நகரத்தில் சமீபத்தில் ஒரு சீன நாட்டவர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதும், இந்தக் குற்றக் கும்பல்களின் செயல்பாடுகள் குறித்து பெருமளவு சந்தேகங்களை எழுப்புகிறது. இந்த வெளிநாட்டினரின் வருகையால், கொள்ளுப்பிட்டி மற்றும் பம்பலப்பிட்டி போன்ற பகுதிகளில் உள்ள ஆடம்பர வீடுகளின் வாடகைக் கட்டணங்களும் அசாதாரணமாக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், இந்தக் கடத்தல்காரர்கள் தற்போது தங்கள் நடவடிக்கைகளுக்காக இலங்கையர்களைச் சேர்க்கத் தொடங்கியுள்ளனர், இது உள்ளூர் இளைஞர்கள் இணையக் குற்றச்செயல்களில் ஈடுபடும் அபாயத்தை ஏற்படுத்துகிறது.

அரசாங்கம் இந்த விடயத்தில் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது, மேலும் கடந்த ஒரு வாரத்தில் மட்டும், நாட்டைக் குறிவைக்கும் 122 சட்டவிரோத இணையத் தளங்களை முடக்க டிஜிட்டல் பொருளாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

சூதாட்டத்தை ஒழுங்குபடுத்துவதற்கும், எல்லை தாண்டிய குற்றங்களை எதிர்த்துப் போராடவும் தாய்லாந்து மற்றும் கம்போடியா போன்ற நாடுகளுடன் இணைந்து செயல்படுவதற்கும் ஒரு புதிய நிறுவனத்தை நிறுவுவது குறித்து அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்கா வீரரத்ன தெரிவித்தார்.

கம்போடியாவில் இதுபோன்ற சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டு, நாட்டிற்குத் திரும்பிய இலங்கையர்கள் இந்தக் குற்றக் கும்பல்களுக்குத் தொழில்நுட்ப ஆதரவை வழங்கி வருவதாக அறிக்கைகள் வந்துள்ளதாகவும், இது தேசியப் பாதுகாப்புக்கும் நாட்டின் நிதி அமைப்புக்கும் கடுமையான அச்சுறுத்தலாக அமைகிறது என்றும் ‘ஐலன்ட்’ செய்தித் தாள் மேலும் சுட்டிக்காட்டுகிறது.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button