இந்தியா

இலங்கைச் சிறையிலுள்ள மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுங்கள்: ஜெய்சங்கருக்கு முதல்வர் விஜய் கடிதம்

இலங்கைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அனைத்துத் தமிழக மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் விடுவிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என இந்திய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்குத் தமிழக முதல்வர் விஜய் கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 11 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, படகும் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ள அவர், இயந்திரக் கோளாறு காரணமாகப் படகு நெடுந்தீவு அருகே தரைதட்டிய நிலையிலேயே கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை கடற்படையினரின் தொடர் கைது நடவடிக்கைகள் மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பெரிதும் பாதித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள முதல்வர் விஜய், தூதரக வழிகளில் பேச்சுவார்த்தை நடத்தி மீனவர்களையும் படகுகளையும் விரைவாக விடுவிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், இருநாட்டு கூட்டுச் செயல்பாட்டுக் குழு மூலம் பேச்சுவார்த்தைகளை விரைவாக நடத்தி, இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண மத்திய அமைச்சர் தனிப்பட்ட முறையில் தலையிட வேண்டும் என்றும் அக்கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button