தமிழருக்கு எவ்வாறான தீர்வு?; சபையில் மோதிய தமிழ் எம்.பி.க்கள்

தமிழ் மக்களின் பிரச்சினைக்கு உள்ளக பொறிமுறையிலா சர்வதேச பொறிமுறையிலா தீர்வு என்பது தொடர்பில் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்றக் குழுத்தலைவர் இரா.சாணக்கியனுக்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்குமிடையில் சபையில் தர்க்கம் ஏற்பட்டது.
பாராளுமன்றத்தில் கூற்று ஒன்றை முன்வைத்த தமிழரசுக்கட்சியின் பாராளுமன்றக் குழுத்தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி.யுமான இரா.சாணக்கியன்,
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் குழுத் தலைவர் பதவியில் மாற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து உள்ளக பொறிமுறை நிலைப்பாட்டில் தமிழரசுக் கட்சி உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குறிப்பிட்டுள்ளமை முற்றிலும் தவறானதொரு கருத்தாகும்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியானது உள்ளக பொறிமுறையை ஒருபோதும் ஏற்கவில்லை. அரசாங்கம் அவ்வாறான நடவடிக்கைகளை எடுக்கும் போது அதில் காணப்படும் குறை பாடுகளை சுட்டிக்காட்டி வருகிறோம். பாதிக்கப்பட்ட மக்கள் உள்ளக பொறிமுறையை முற்றாக நிராகரித்துள்ளார்கள். சர்வதேச பொறிமுறை ஊடாகவே நீதி கோருகிறோம் என்றார்.
இதனையடுத்து ஒழுங்குப் பிரச்சினை எழுப்பிய தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ் மாவட்ட எம்.பி.யுமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம்,
சாணக்கியன் எம்.பி எனது பெயரை குறிப்பிட்டு தமிழரசுக் கட்சி உள்ளக விசாரணையை வலியுறுத்துவதாக நான் குறிப்பிட்டதாகவும், தமிழரசுக் கட்சி அப்படி எந்தவொரு இடத்திலும் வலியுறுத்தவில்லை என்றும் தமது நிலைப்பாடு சர்வதேச விசாரணையே என்றும் ஆனால் நான் சபையிலும் வெளியிலும் தவறாக கருத்து கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த சபையிலேயே செம்மணி மனிதப் புதை குழி தொடர்பாக 27/2இல் கேள்வியின் போது அரசாங்கத்தின் விசாரணையை நடத்துகின்ற போது சர்வதேச கண்காணிப்பு அவசியம் என்ற கருத்தை சாணக்கியன் கூறியுள்ளார். உள்ளக விசாரணைக்கு எதிர்ப்பு என்றால் அதைப் பற்றி கதைக்கவே முடியாது. உள்ளக விசாரணைக்கு தாம் தயாரில்லை என்றால் சர்வதேச விசாரணையையே வலியுறுத்த வேண்டும் என்றார்.
இதனையடுத்து எழுந்த தமிழரசுக்கட்சியின் பாராளுமன்றக் குழுத்தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி.யுமான இரா.சாணக்கியன்,
இலங்கைத் தமிழரசுக் கட்சி அப்படி சொல்கிறது, இப்படி சொல்கிறது என்று கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குறிப்பிட வேண்டியதில்லை. அவர் குறிப்பிடுவதை போன்று இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லலாம். அதனை விடுத்து போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கக் கூடாது. செம்மணி மனிதப் புதைகுழி மற்றும் தீர்வு திட்ட நடவடிக்கைகள் தொடர்பில் அரசாங்கத்தின் செயற்பாடுகளை நாங்களும் எதிர்த்துள்ளோம் என்றார்.
![]()