இலங்கை

சிறைகளுக்குத் தீவைப்பதால் கைதிகளுக்கே பெரும் பாதிப்பு

சில சிறைச்சாலைகளில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சில் இடம்பெற்ற விசேட உரையின்போதே, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார இவ்வாறு தெரிவித்தார்.

அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்:

“சிறைச்சாலையிலுள்ள கைதிகளின் உறவினர்கள், அன்புக்குரியவர்கள் மற்றும் நண்பர்களுக்கு ஒரு செய்தியை வழங்க வேண்டிய தேவை உள்ளது. பிரதானமாக, கடந்த ஒரு வருடமாகச் சிறைச்சாலைகளிலுள்ள நிலைமைகளைக் அவதானிக்கும் போது, இரசாயனப் பகுப்பாய்வாளர் அறிக்கைகள் தாமதமாவதால் பிணை பெற முடியாமல் இருப்பதாகக் கைதிகள் பிரதான குற்றச்சாட்ட முன்வைக்கின்றனர். இச்சுழ்நிலையை நாங்கள் கடந்த ஆண்டு இனங்கண்டு அதற்குரிய நடவடிக்கைகளை எடுத்தோம்.

இரசாயனப் பகுப்பாய்வாளர் திணைக்களத்தில் 118 வெற்றிடங்கள் காணப்பட்டன. இதனால் அறிக்கைகள் திறம்பட கிடைக்கப்பெறவில்லை. இதனால் கைதிகள் சுமார் ஒரு வருடம் விளக்கமறியலில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. தற்போது 70 வரையான பணியாளர்களைப் புதிதாக நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், இம்மாதத்திற்குள் புதிய இயந்திரங்களும் கொண்டுவரப்படவுள்ளன. இதன் மூலம் அறிக்கைகளை விரைவாகப் பெற முடியும். இனிவரும் நாட்களில் மாதமொன்றிற்கு 7,500 முதல் 9,000 வரையிலான அறிக்கைகளை வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், போதைப்பொருளின் நிகர எடை 10 கிராமிற்கு மேல் இருப்பதால் மேல்முறையீட்டு நீதிமன்றம் மூலம் பிணை பெற வேண்டியுள்ளதால் பிணை தாமதமாவதாகக் கைதிகளின் உறவினர்கள் குறிப்பிட்டுள்ளனர். இச்சட்டத்தைத் திருத்துவதற்காக அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இதன்படி, சில போதைப்பொருள் குற்றங்களுக்கு மேல்நீதிமன்றம் மூலமாகவே மீண்டும் பிணை பெறும் வாய்ப்பு உருவாக்கப்படும்.

இவ்வேளையில், சுயநல நோக்கங்களைக் கொண்ட சிலர் கைதிகளைத் தூண்டிவிட்டு அமைதியின்மையை ஏற்படுத்த முயல்கின்றனர். உங்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படும், எனவே பொறுமையுடன் செயற்படுங்கள். வசதிகள் போதியதாக இல்லாததால் சிறைச்சாலைகளில் கடும் நெரிசல் நிலவுகிறது. அவ்வசதிகளை வழங்கவும் நெரிசலைக் குறைக்கவும் தேவையான நடவடிக்கைகளை நாங்கள் எடுத்து வருகிறோம். ஒரு சிலரின் சதி நோக்கங்களினால், நாங்கள் வழங்கும் வளங்களை நீங்கள் தீயிட்டுக் கொளுத்தினால், அதனால் ஏற்படும் பாதிப்புகள் கைதிகளாகிய உங்களையே சாரும்.

அரசாங்கம் தற்போது இரசாயனப் பகுப்பாய்வாளர் அறிக்கைகளை விரைவுபடுத்தவும் வசதிகளை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளதால், அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்குங்கள். சிறைச்சாலைகளுக்குள் வன்முறையில் ஈடுபட்டு உங்கள் வளங்களை அழித்துக் கொள்ளாதீர்கள். ஒரு சிலரின் தேவைகளுக்காக உங்களைப் பயன்படுத்த அனுமதிக்காதீர்கள். மிக விரைவில் இரசாயனப் பகுப்பாய்வாளர் அறிக்கைகளை வழங்கி, சட்டத் திருத்தங்களை மேற்கொண்டு பிணை பெறுவதற்கான வாய்ப்புகள் ஏற்படுத்தித் தரப்படும்

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button