முச்சந்தி

சிறைச்சாலைகளில் தொடரும் மோதல்கள் தேசிய பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தல்; எதிர்க்கட்சித் தலைவர் சஜித்

நாட்டிலுள்ள சிறைச்சாலைகளில் தொடர்ந்து இடம்பெற்றுவரும் பாதுகாப்பற்ற நிலைமை தேசிய பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில்  சிறைச்சாலைகள் மோதல் தொடர்பில் விசேட கூற்றை முன்வைத்தே இவ்வாறு தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் கூறுகையில்,

வியாழக்கிழமை இரவு மகஸின் சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவத்தினால் ஒரு மரணமும், அதனைத்தொடர்ந்து குருவிட்ட சிறைச்சாலையில் இரண்டு மரணங்களும் நிகழ்ந்துள்ளன. தற்போது பள்ளன்சேனை கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள முகாமிலும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளதால், இது தொடர்பில் நீதி அமைச்சர் இந்த சபைக்கு நிலைமைகளை தெளிவுபடுத்த வேண்டும்.

அமைச்சல் என்னதான் விளக்கமளித்தாலும் யார் என்ன தெரிவித்தாலும் சிறைச்சாலைகளில் ஏற்பட்டுள்ள இந்த பாதுகாப்பற்ற நிலைமை தேசிய பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது.

சிறைச்சாலைகளில் இடம்பெற்றுவரும் இவ்வாறான சம்பவங்களை அடிப்படையாகக்கொண்டு, நாங்கள் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷ நாணயக்காரவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை கொண்டுவந்தோம். அதில் அமைச்சருக்கு ஆதரவாக 152 வாக்குகளும் எதிராக 36 வாக்குகளும் அளிக்கப்பட்டன . இதனை அரசாங்கம் துள்ளிக்குதித்து கொண்டாடியது.

ஆனால் நாங்கள் அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவந்து அது தோற்கடிக்கப்பட்ட பின்னர், மஹர சிறைச்சாலையில் பிரச்சினை ஏற்பட்டது, கொழும்பு மகசினில் பிரச்சினை ஏற்பட்டது, தற்போது குருவிட்ட மற்றும் பள்ளன்சேனையில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. எனவே இதனை தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் எனக் கருதி இந்த விடயம் தொடர்பில் அரசாங்கம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button