இலங்கை

மக்கள் ஆணையை மீறாதீர்: அமைச்சர்களுக்கு பேராயர் ஆலோசனை

“நீதித்துறைக்கும், நாட்டுக்கும், மக்களுக்கும் நன்மைகள் கிடைக்கக்கூடிய வகையில் நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பேராயர் ஆண்டகை எமக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். நாம் ஒருபோதும் மக்கள் ஆணைக்குப் புறம்பாகச் செயற்படமாட்டோம்” என்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிப்பது தொடர்பான அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச்சட்டமூலம் குறித்து, கொழும்பு மறைமாவட்டப் பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகைக்கு நேற்று (06) தெளிவுபடுத்தப்பட்டது.

நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார மற்றும் அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ ஆகியோர் பேராயரைச் சந்தித்து, இந்த உத்தேச சட்டமூலம் குறித்து விரிவாக விளக்கமளித்தனர்.

இச்சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்ட நீதி அமைச்சர் தெரிவித்ததாவது:

“நீதிமன்றங்களின் எண்ணிக்கையை அதிகரித்தல், நீதித்துறையை டிஜிட்டல் மயமாக்குதல் உள்ளிட்ட பல மறுசீரமைப்புப் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஓர் அங்கமாகவே அனைத்து நீதிபதிகளினதும் ஓய்வுபெறும் வயதெல்லையை இரண்டு ஆண்டுகளுக்கு நீடிப்பதற்கு உத்தேசிக்கப்பட்டு, அது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளது.

எனினும், இது குறித்துச் சமூகத்தில் தவறான பிம்பம் உருவாக்கப்பட்டுள்ளது. அந்த வகையிலேயே இந்தச் சட்டமூலத்தின் உண்மையான நோக்கம் குறித்துப் பேராயருக்குத் தெளிவுபடுத்தினோம்.

நாடு, நாட்டு மக்கள் மற்றும் நீதித்துறைக்கு நன்மை பயக்கக்கூடிய விடயங்களை மாத்திரம் முன்னெடுக்குமாறு பேராயர் எமக்கு ஆலோசனை வழங்கினார்.

இதேவேளை, இலங்கைச் சட்டத்தரணிகள் சங்கத்தினர் ஜனாதிபதியைச் சந்திப்பதற்கு நேரம் கோரியுள்ளனர். இது குறித்து நான் ஜனாதிபதியின் கவனத்திற்குக்கொண்டு சென்றுள்ளேன்; விரைவில் அச்சந்திப்பு நடைபெறும் என நம்புகிறேன்” என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button