உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலை முஸ்லிம்கள் நடத்தவில்லை சிங்களவர்களே நடத்தினர்

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலை முஸ்லிம் அடிப்படைவாதிகள் மேற்கொண்டதாவே நாங்கள் நினைத்திருந்தோம். ஆனால் அதனை சிங்கள அடிப்படைவாதிகளே நடத்தியுள்ளார்கள் என்பது நீதிமன்ற தீர்ப்பின் மூலம் தெரியவந்துள்ளது.இந்த தாக்குதல் தொடர்பில் உள்ளே இருக்கவேண்டியவர்கள் வெளியில் இருக்கிறார்கள். வெளியில் இருக்கவேண்டியவர்கள் உள்ளே இருக்கிறார்கள் என புதிய ஜனநாயக முன்னணி எம்.பி.யான சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இடம்பெற்ற விலங்குகள் திருத்தச் சட்டமூலம் மற்றும் தேசிய நீர்வழங்கல் வடிகால் சேவைகள் சபை திருத்தச் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றிய போதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,
நீதிமன்றத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர மற்றும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ ஆகிய இரண்டுபேருமே உயிர்த்த ஞாயிறு தாக்குதலை மேற்கொண்டு 300 பேரை கொலை செய்திருக்கிறார்கள். அப்படியானால் மரணித்த பிள்ளைகள் இருவர்களால் இப்ராஹிமுக்கு பிரச்சினை இல்லை. சம்பவத்துடன் தொடர்புடைய வேறு யாருக்கும் பிரச்சினை இல்லை. தற்போது சிறையில் இருக்கும் பூஜித மற்றும் ஹேமசிறி ஆகிய இருவருக்கும் 1600 வருட வழக்கு தீர்ப்பாென்று வழங்கப்பட்டிருக்கிறது. ஜனாதிபதி கைச்சாத்திட்டால், அவர்கள் இருவரையும் தூக்கிலிட முடியும்.
ஆனால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்றபோது கிழக்கு மாகாண இராணுவ கட்டளைத் தளபதியாக இருந்தவர் இன்று அரசாங்கத்தில் பாதுகாப்பு பிரதி அமைச்சராக உள்ளார் அதேபோன்று இந்த சம்பத்துடன் சம்பந்தப்பட்ட ஷானி அபேசேகர இன்று குற்றப்புலனாய்வு பிரிவின் பணிப்பாளராகவுள்ளார் . ரவி செனவிரத்ன பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக உள்ளார் . எனவே உள்ளே இருக்கவேண்டியவர்கள் வெளியில் இருக்கிறார்கள். வெளியில் இருக்கவேண்டியவர்கள் உள்ளே இருக்கிறார்கள். கரம்போட்டுக்கு பிரேரணை கொண்டுவந்தவர் இன்று அமெரிக்காவில் இருக்கிறார். கரம்போட் பகிர்ந்தவர் சிறையில் இருக்கிறார்.
அதேபோன்று சஹ்ரானின் ஆட்கள் மாவனெல்லையில் புத்தர் சிலையை சேதப்படுத்த முற்பட்டபோது, அதனை காட்டிக்கொடுத்தது, முஸ்லிம் நபர் ஒருவர். ஆனால் அந்த நபருக்கு சஹ்ரானின் குழு துப்பாக்கி பிரயோகம் செய்ததில், அவர் இன்று சுயமாக இயங்க முடியாமல் இருக்கிறார்.ஆனால் அவருக்கு எந்த நஷ்டஈடும் வழங்கப்படவில்லை. அவருக்கு நீதியை பெற்றுக்கொடுக்கவில்லை. என்றாலும் இப்ராஹிமுக்கு நியாயம் கிடைத்திருக்கிறது.
அத்துடன் குருநாகலில் கூட்டமொன்றில் நான் உரையாற்றுகையில், முன்னாள் இராணுவ தளபதி தனது காலத்தை நீடித்துக்கொள்ள கர்தினாலிடம் மலர் தட்டுடன் சென்றார் என தெரிவித்திருந்தேன். அதற்கு எதிராக வழக்கு தொடுப்பதாக கர்தினால் தெரிவித்திருந்தார். பரவாயில்லை. ஏனெனில் நான் அன்று அவ்வாறு தெரிவித்ததால்தான் தற்போது சிங்கள பெளத்த இராணுவ தளபதி ஒருவர் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
அதேநேரம் அரசாங்கம் தற்போது நீதிபதிகளின் வயதெல்லையை நீடிப்பதற்கு நடவடிக்கை எடுத்திருக்கிறது. அதற்கு எதிர்ப்பு வரும்போது, தற்போது அனைத்து நீதிமன்றங்களின் நீதிபதிகளின் வயதெல்லையை நீடிப்பதற்கு தீர்மானித்திருக்கிறது. வயது அதிகரிக்கும்போது அவர்களின் அனுவபம் செயல்திறமை அதிகமாகுவதாக தெரிவித்தே அரசாங்கம் இதனை மேற்கொள்ள முயற்சிக்கிறது. அப்படியானால் அரசாங்கம் நீதிபதிகளின் வயதெல்லையை நீடிக்காமல், பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேனவை அரசாங்கம் தேசியப்பட்டியலில் பாராளுமன்றத்துக்கு கொண்டுவந்து, அவருக்கு நீதி அமைச்சை வழங்கட்டும். ஏனெனில் தற்போதுள்ள நீதி அமைச்சருக்கு இந்த அமைச்சை கொண்டுசெல்ல அனுபவம் இல்லை என்றார்.
![]()