இலங்கை

நீதிபதிகளின் பதவிக்கால நீடிப்பு தொடர்பான வாதத்தை ஏற்க முடியாது; ஐக்கிய தேசியக் கட்சி

நீதித்துறையின் சுயாதீனத்தை மேலும் வலுப்படுத்துவதற்கும், தேங்கிக் கிடக்கும் வழக்குகளை விரைவாக நிறைவு செய்வதற்கும் அரசியலமைப்பு மற்றும் நீதித்துறை அமைப்பு சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளும் சட்டமூலம் ஒன்றை முன்வைக்கவுள்ளதாக அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு நிறைவேற்றியுள்ள தீர்மானத்தில், நீதிமன்றங்களில் தேங்கியுள்ள வழக்குகளின் எண்ணிக்கையை குறைப்பது அனைவரினதும் எதிர்பார்ப்பாகும் எனவும், இதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) தொழில்நுட்ப குழுவுடன் கலந்துரையாடி “நிர்வாக மதிப்பீட்டு அறிக்கை” ஒன்றை பெற்றதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில், நீதித்துறை எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சினை தீர்க்கப்படாமல் நிலுவையில் உள்ள அதிகளவான வழக்குகள் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

குறிப்பாக கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் சுமார் 45,000 பண மீட்பு தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், நீதிபதிகளின் பணிச்சுமை அதிகரித்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நிலுவை வழக்குகளைத் தீர்ப்பதற்காக விசேட நீதிமன்றங்களை அமைத்தல், நீதிமன்ற நிர்வாக நடைமுறைகளை மேம்படுத்தல் மற்றும் மாற்று தகராறு தீர்வு முறைகளை வலுப்படுத்தல் போன்ற நடவடிக்கைகள் அவசியம் எனவும் கட்சி தெரிவித்துள்ளது.

எனினும், நீதிபதிகளின் சேவைக்காலத்தை நீடிக்க வேண்டும் என IMF அறிக்கையில் எங்கும் குறிப்பிடப்படவில்லை என ஐக்கிய தேசியக் கட்சி வலியுறுத்தியுள்ளது.

அதனால், நீதிபதிகளின் பதவிக்கால நீடிப்பை நியாயப்படுத்த அரசாங்கம் முன்வைக்கும் காரணங்களை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், முன்மொழியப்பட்ட அரசியலமைப்பு திருத்தத்தை தற்காலிகமாக நிறுத்தி, சட்டத்தரணி சங்கம், நீதித்துறை மற்றும் சட்டமா அதிபர் உள்ளிட்ட தரப்புகளுடன் கலந்துரையாடி புதிய நடைமுறையை உருவாக்க வேண்டும் எனவும் ஐக்கிய தேசியக் கட்சி கோரியுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button