FIFA உலகக்கோப்பை யார் வென்றாலும் சுவிற்சர்லாந்திற்கே திரும்பும் வரலாற்று ரகசியம்… ஐங்கரன் விக்கினேஸ்வரா


(பலருக்குத் தெரியாத ஒரு சுவாரசியமான உண்மை உள்ளது. உலகக்கோப்பையை எந்த நாடு வென்றாலும், அசல் தங்கக் கோப்பை அந்த நாட்டில் நிரந்தரமாக இருக்காது. அது மீண்டும் சுவிற்சர்லாந்திற்கே திரும்பிவிடும். இதற்குப் பின்னால் வரலாறும், பாதுகாப்பு காரணங்களும், தனித்துவமான விதிமுறைகளும் உள்ளன)
உலகின் மிகப் பிரபலமான விளையாட்டு கால்பந்து தான். மொழி, இனம், நாடு, அரசியல் எல்லைகளைத் தாண்டி மக்களை ஒன்றிணைக்கும் இந்த விளையாட்டின் உச்சமாக FIFA உலகக்கோப்பை விளங்குகிறது. நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்தப் போட்டி, கோடிக்கணக்கான ரசிகர்களின் கனவையும், நாடுகளின் பெருமையையும் ஒரே மேடையில் கொண்டு வருகிறது.
உலகக்கோப்பை தொடக்கம்:
ஆனால் பலருக்குத் தெரியாத ஒரு சுவாரசியமான உண்மை உள்ளது. உலகக்கோப்பையை எந்த நாடு வென்றாலும், அசல் தங்கக் கோப்பை அந்த நாட்டில் நிரந்தரமாக இருக்காது. அது மீண்டும் சுவிற்சர்லாந்திற்கே திரும்பிவிடும். இதற்குப் பின்னால் வரலாறும், பாதுகாப்பு காரணங்களும், தனித்துவமான விதிமுறைகளும் உள்ளன. அந்தப் பின்னணியைப் புரிந்துகொள்ள, முதலில் உலகக்கோப்பையின் தொடக்க வரலாற்றை அறிய வேண்டியது அவசியமாகும்.
1930 ஆம் ஆண்டு உருகுவேயில் நடைபெற்ற முதல் FIFA உலகக்கோப்பையில் “ஜூல்ஸ் ரிமெட் கோப்பை” பயன்படுத்தப்பட்டது. FIFA முன்னாள் தலைவர் ஜூல்ஸ் ரிமெட்டின் பெயரில் உருவாக்கப்பட்ட இந்தக் கோப்பைக்கு ஒரு சிறப்பு விதி இருந்தது. ஒரு நாடு மூன்று முறை உலகக்கோப்பையை வென்றால், அந்தக் கோப்பை நிரந்தரமாக வைத்துக் கொள்ளலாம்.
இந்த விதியின் அடிப்படையில் பிரேசில் 1958, 1962, 1970 ஆகிய ஆண்டுகளில் வென்று கோப்பையை தன் வசமாக்கியது. ஆனால் 1983 ஆம் ஆண்டு அந்தக் கோப்பை திருடப்பட்டது. அது இன்றுவரை மீட்கப்படவில்லை. இந்தச் சம்பவம் FIFA-வை புதிய பாதுகாப்பு முறைகளை உருவாக்கத் தூண்டியது. அதனால்தான் அடுத்த கட்டமாக புதிய உலகக்கோப்பை உருவாக்கப்பட்டது.
புதிய உலகக்கோப்பையின் பிறப்பு
1974 ஆம் ஆண்டு தற்போதைய உலகக்கோப்பை அறிமுகப்படுத்தப்பட்டது. உலகின் பல பகுதிகளில் இருந்து வந்த 53 வடிவமைப்புகளில் இருந்து இத்தாலியச் சிற்பி சில்வியோ கசானிகாவின் வடிவமைப்பு தேர்ந்தெடுக்கப்பட்டது.

இந்தக் கோப்பையில் இரண்டு மனித உருவங்கள் உலக உருண்டையை உயர்த்திப் பிடிப்பது போல வடிவமைக்கப்பட்டுள்ளது. இது வெற்றியை மட்டும் அல்ல, மனித முயற்சி, ஒற்றுமை மற்றும் சாதனையையும் பிரதிபலிக்கிறது. இவ்வாறு கலைநயமும் கருத்தாழமும் இணைந்த இந்த வடிவமைப்பு, உலகக்கோப்பையை வெறும் விளையாட்டு விருதாக அல்லாமல் ஒரு சிற்பக் கலைப் படைப்பாகவும் உயர்த்தியது.
இன்றைய FIFA உலகக்கோப்பை கலைநயமும் நுட்பமும் சேர்ந்த ஒரு சிற்பமாகக் கருதப்படுகிறது. அதன் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு.
உயரம்: 36.5 சென்டிமீட்டர், எடை: 6.175 கிலோகிராம், பயன்படுத்தப்பட்ட தங்கம்: 18 கேரட் தங்கம், தங்கத்தின் அளவு: சுமார் 4.9 கிலோகிராம் கொண்டதாகும். கோப்பையின் உட்பகுதி வெற்றாக வடிவமைக்கப்பட்டுள்ளது. முழுவதும் தங்கமாக இருந்தால் அதன் எடை மிக அதிகமாகி, வீரர்கள் அதை தூக்கிக் கொண்டாட முடியாது. அடிப்பகுதியில் மலாக்கிட் (Malachite) கற்களும் பொருத்தப்பட்டுள்ளன. இந்த அமைப்பு கோப்பையின் அழகையும் மதிப்பையும் மேலும் உயர்த்துகிறது.
சுவிசில் பாதுகாக்கப்படுகிறது
FIFA தலைமையகம் சுவிற்சர்லாந்தின் சூரிச் நகரில் உள்ளது. அங்குள்ள FIFA அருங்காட்சியகத்தில் அசல் உலகக்கோப்பை மிகுந்த பாதுகாப்புடன் வைக்கப்படுகிறது. போட்டி நடைபெறும் காலத்திலும், வெற்றிக் கொண்டாட்டத்திலும் மட்டும் அசல் கோப்பை வெளியே கொண்டு செல்லப்படுகிறது. அதன் பிறகு அது மீண்டும் சூரிச்சிற்குத் திரும்புகிறது. வெற்றி பெறும் அணிகளுக்கு வழங்கப்படுவது அசல் கோப்பை அல்ல, தங்க முலாம் பூசப்பட்ட பிரதியே.
இதன் மூலம் உலகின் மிக மதிப்புமிக்க விளையாட்டு சின்னம் பாதுகாக்கப்படுகிறது. மேலும், ஜூல்ஸ் ரிமெட் கோப்பை திருடப்பட்ட அனுபவம் FIFA-வுக்கு பாதுகாப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தியதால், தற்போதைய கோப்பை மிகுந்த கவனத்துடன் பராமரிக்கப்படுகிறது.
உலகக்கோப்பையின் அடிப்பகுதியில் வெற்றி பெற்ற நாடுகளின் பெயர்களும் ஆண்டுகளும் செதுக்கப்பட்டுள்ளன. சிறப்பு என்னவென்றால், அந்தப் பெயர்கள் அந்தந்த நாட்டின் மொழியிலேயே எழுதப்படுகின்றன.
உதாரணமாக 1974 – Deutschland, 2010 – España, 2022 – Argentina
இவை உலகக் கால்பந்து வரலாற்றின் நிரந்தர பதிவுகளாக உள்ளன. தற்போதைய அடிப்பகுதியில் 2038 ஆம் ஆண்டு வரை மட்டுமே இடம் இருப்பதாகக் கூறப்படுகிறது. அதற்குப் பிறகு புதிய அடிப்பகுதி தேவைப்படலாம். இதுவும் உலகக்கோப்பையின் தொடர்ச்சியான வளர்ச்சியையும், அதன் வரலாற்றுப் பதிவுகளின் முக்கியத்துவத்தையும் காட்டுகிறது.
FIFA உலகக்கோப்பை வெறும் தங்கக் கோப்பை அல்ல. அது கால்பந்தின் வரலாறு, வீரர்களின் அர்ப்பணிப்பு, ரசிகர்களின் உணர்ச்சி, நாடுகளின் பெருமை ஆகிய அனைத்தையும் ஒருங்கே பிரதிபலிக்கும் சின்னம்.
இத்தாலிய கலைநயத்தில் உருவாகி, சுவிற்சர்லாந்தில் பாதுகாக்கப்படும் இந்தக் கோப்பை, ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கும் ஒருமுறை உலகம் முழுவதும் பயணித்து, புதிய சாம்பியனின் கைகளில் சில நொடிகள் ஜொலித்து, பின்னர் மீண்டும் தனது நிரந்தர இல்லத்திற்குத் திரும்புகிறது.
அதனால்தான், யார் வென்றாலும் உலகக்கோப்பை இறுதியில் சுவிற்சர்லாந்திற்கே திரும்புகிறது என்று சொல்லப்படுகிறது.
உலக கால்பந்து வெற்றி வரலாறு:
1930 ஆம் ஆண்டு உருகுவேயில் முதல் FIFA உலகக்கோப்பை நடத்தப்பட்டது. அப்போது 13 நாடுகள் மட்டுமே பங்கேற்றன. இறுதிப் போட்டியில் அர்ஜென்டினாவை 4–2 என்ற கோல் கணக்கில் தோற்கடித்த உருகுவே, உலகின் முதல் உலகக்கோப்பை சாம்பியனாக வரலாற்றில் இடம்பிடித்தது.
1934 ஆம் ஆண்டு இத்தாலியில் நடைபெற்ற இரண்டாவது உலகக்கோப்பையையும், 1938 ஆம் ஆண்டு பிரான்சில் நடைபெற்ற மூன்றாவது உலகக்கோப்பையையும் இத்தாலி வென்றது. இதன் மூலம் தொடர்ந்து இரண்டு முறை உலகக்கோப்பையை வென்ற முதல் நாடாக இத்தாலி அமைந்தது. எனினும், 1939 இல் தொடங்கிய இரண்டாம் உலகப் போரின் காரணமாக 1942 மற்றும் 1946 உலகக்கோப்பைப் போட்டிகள் ரத்து செய்யப்பட்டன. உலகம் மீண்டும் அமைதிக்குத் திரும்பிய பின்னர், 1950 ஆம் ஆண்டு பிரேசிலில் உலகக்கோப்பை மீண்டும் நடத்தப்பட்டது. அந்தத் தொடரில் உருகுவே, பிரேசிலை அதன் சொந்த மண்ணில் தோற்கடித்து இரண்டாவது முறையாக உலகச் சாம்பியனானது. “மரகனாசோ” (Maracanazo) என அழைக்கப்படும் அந்தப் போட்டி, கால்பந்து வரலாற்றின் மிகப் பெரிய அதிர்ச்சிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
1954 ஆம் ஆண்டு மேற்கு ஜெர்மனி, அப்போது உலகின் சக்திவாய்ந்த அணியாக விளங்கிய ஹங்கேரியை வீழ்த்தி உலகக்கோப்பையை வென்றது. இது “The Miracle of Bern” என உலக விளையாட்டு வரலாற்றில் குறிப்பிடப்படுகிறது. அதன் பின்னர் உலக கால்பந்தின் வரலாற்றில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்திய நாடு பிரேசிலாகும். 1958 உலகக்கோப்பையில் வெறும் 17 வயதான பெலே உலக அரங்கில் அறிமுகமானார். அவரது அபாரமான ஆட்டத்தால் பிரேசில் தனது முதல் உலகக்கோப்பையை வென்றது. 1962 இல் மீண்டும் சாம்பியனான பிரேசில், 1970 இல் மூன்றாவது முறையாக உலகக்கோப்பையை வென்று நிரந்தரமாக ஜூல்ஸ் ரிமே கோப்பையைத் தக்க வைத்துக் கொண்டது. பெலே உலகக்கோப்பையை மூன்று முறை வென்ற ஒரே வீரராக இன்றளவும் வரலாற்றில் திகழ்கிறார்.
1966 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பையில், போட்டியை நடத்திய இங்கிலாந்து தனது ஒரே உலகக்கோப்பையை வென்றது. ஜெஃப் ஹர்ஸ்ட் இறுதிப் போட்டியில் அடித்த ஹாட்ரிக் சாதனை இன்றளவும் உலகக்கோப்பை இறுதிப் போட்டிகளில் தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளது.
1974 உலகக்கோப்பையில் மேற்கு ஜெர்மனி மீண்டும் சாம்பியனானது. 1978 இல் அர்ஜென்டினா தனது சொந்த நாட்டில் உலகக்கோப்பையை வென்றது. ஆனால் அந்தத் தொடர், இராணுவ ஆட்சியின் அரசியல் பின்னணியால் பெரும் சர்ச்சைகளையும் ஏற்படுத்தியது. விளையாட்டும் அரசியலும் பிரிக்க முடியாதவை என்பதை உலகம் மீண்டும் உணர்ந்தது.
1982 உலகக்கோப்பையில் இத்தாலி தனது மூன்றாவது பட்டத்தை வென்றது. ஆனால் 1986 மெக்சிகோ உலகக்கோப்பை என்றாலே நினைவிற்கு வருவது டியாகோ மரடோனா. இங்கிலாந்துக்கு எதிரான “கடவுளின் கை” (Hand of God) கோலும், அதனைத் தொடர்ந்து அவர் தனியாக அடித்த “நூற்றாண்டின் கோல்” (Goal of the Century) உலக கால்பந்து வரலாற்றில் அழியாத இடத்தைப் பெற்றன. மரடோனாவின் தலைமையில் அர்ஜென்டினா இரண்டாவது உலகக்கோப்பையை வென்றது.
1990 இல் மேற்கு ஜெர்மனி மூன்றாவது முறையாக உலகக்கோப்பையை வென்றது. பின்னர் ஜெர்மனி ஒன்றுபட்டதன் பிறகு 2014 ஆம் ஆண்டு நான்காவது முறையாக உலகச் சாம்பியனானது. 1994 உலகக்கோப்பையில் பிரேசில் நான்காவது பட்டத்தை வென்றது. பெனால்டி முறையில் முடிவடைந்த முதல் உலகக்கோப்பை இறுதிப் போட்டி அதுவாகும்.

1998 ஆம் ஆண்டு பிரான்ஸ் தனது சொந்த மண்ணில் முதல் உலகக்கோப்பையை வென்றது. ஜினெடின் சிடான் தலைமையிலான அந்த அணி உலக கால்பந்தில் புதிய சக்தியாக உருவெடுத்தது. 2002 உலகக்கோப்பை முதன்முறையாக ஆசியாவில், ஜப்பான் மற்றும் தென் கொரியா இணைந்து நடத்தியது. அந்தப் போட்டியில் ரொனால்டோவின் அசத்தலான ஆட்டத்தால் பிரேசில் தனது ஐந்தாவது உலகக்கோப்பையை வென்றது. இதுவரை எந்த நாடும் ஐந்து உலகக்கோப்பைகளை வெல்லவில்லை என்பதால், பிரேசில் உலக கால்பந்தின் வெற்றிகரமான நாடாகத் திகழ்கிறது.
2006 உலகக்கோப்பையில் இத்தாலி நான்காவது பட்டத்தை வென்றது. இறுதிப் போட்டியில் ஜினெடின் சிடான் மார்கோ மாதெராச்சிக்கு தலையால் முட்டிய சம்பவம் உலகம் முழுவதும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. 2010 இல் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற உலகக்கோப்பை, ஆப்பிரிக்கக் கண்டத்தில் நடைபெற்ற முதல் உலகக்கோப்பையாக வரலாற்றில் இடம்பிடித்தது. அந்தத் தொடரில் ஸ்பெயின் தனது வரலாற்றின் முதல் உலகக்கோப்பையை வென்றது. டிக்கி-டாக்கா (Tiki-Taka) என்ற பந்துப் பரிமாற்ற பாணி உலக கால்பந்தில் புதிய யுகத்தை உருவாக்கியது.
2014 இல் ஜெர்மனி, பிரேசிலுக்கு எதிராக அரையிறுதியில் 7–1 என்ற அதிர்ச்சி வெற்றியைப் பதிவு செய்தது. பின்னர் இறுதிப் போட்டியில் அர்ஜென்டினாவை வீழ்த்தி நான்காவது உலகக்கோப்பையை வென்றது. 2018 இல் பிரான்ஸ் தனது இரண்டாவது உலகக்கோப்பையை வென்றது. இளம் நட்சத்திரமான கிலியன் எம்பாப்பே உலக கால்பந்தின் எதிர்கால முகமாக உருவெடுத்தார்.
2022 ஆம் ஆண்டு கத்தாரில் நடைபெற்ற உலகக்கோப்பை வரலாற்றில் மிகவும் பரபரப்பான தொடராக அமைந்தது. அர்ஜென்டினா மற்றும் பிரான்ஸ் மோதிய இறுதிப் போட்டி உலகக்கோப்பை வரலாற்றின் மிகச் சிறந்த இறுதிப் போட்டிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. லியோனல் மெஸ்ஸியின் கனவு நிறைவேறிய அந்த இரவு, அர்ஜென்டினா மூன்றாவது உலகக்கோப்பையை வென்றது. இந்த ஆண்டு கால்பந்து உலகக்கோப்பை தொடரில் ஸபெயின் வென்றது அறிந்ததே.

![]()