முச்சந்தி

ஐ.எம்.எப்.பின் இலக்கையும் தாண்டி அரசால் அதிக வரி; மிகப் பெரும் பொறி என்கிறார் சஜித்

நாட்டிற்குக் காணப்படும் மிகப்பெரிய பொறி ஐ.எம்.எப்.கூறும் இலக்குகளை விட அதிகமான வரித் தொகையைச் சுமத்துவதாகும். 2.3% இலிருந்து 5.4% வரை முதன்மை மீதியை உயர்த்தி ஐ.எம்.எப். இன் அடிமைகளாக அரசாங்கம் மாறியுள்ளது. எதிர்க்கட்சியில் இருக்கும் போது பாட்டாளி வர்க்கம் பற்றிப் பேசிய போதிலும், தற்சமயம் இந்த அரசாங்கம் ஐ.எம்.எப். வரி இலக்கைத் தாண்டிச் சென்று மேலதிக வரிச்சுமையைச் சுமத்தி வருகின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற திறைசேரியால் செலுத்தப்பட்ட 2.5 மில்லியன் டொலர் மோசடி செய்யப்பட்டமை தொடர்பான சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,

வங்குரோத்தான நமது நாட்டில் வரிகளைச் சுமத்தி, வாழ்க்கைச் சுமை அதிகரித்து, வறுமை அதிகரித்து, வேலையின்மை அதிகரித்து, தொழில்துறைகள் வீழ்ச்சியடையும் இந்த வேளையில், 25 இலட்சம் டொலர்களைக் கொடுக்க முடியாத அரசாங்கமொன்றே ஆட்சியில் இருந்து வருகின்றது. கடன் மீளச் செலுத்துதல் மத்திய வங்கியைக் மையமாகக் கொண்டே இடம்பெற்ற போதிலும், புதிய சட்டத்தின் ஊடாக அது மாற்றப்பட்டு கடன் செலுத்தும் அலுவலகத்திற்கு அந்தப் பொறுப்பு பாரப்படுத்தப்பட்டுள்ளது. இந்தக் காலக்கட்டத்தில் இடைக்கால ஏற்பாடுகளைச் செய்து கொள்ள அரசாங்கத்திற்கு இயலாது போனது.

இதுவொரு சைபர் தாக்குதல் மட்டுமல்ல. இந்தப் பிரச்சினை தொடர்பில் திறைசேரியும் மத்திய வங்கியின் ஆளுநரும் ஒரே நிலைப்பாட்டில் இல்லை.இந்த இரண்டு நிறுவனங்களுக்கும் ஒரே இடத்தில் ஒரே நிலைப்பாட்டில் நின்று செயற்பட முடியாவிட்டால் நமது நாட்டின் பொருளாதாரத்திற்கு என்ன நடக்கும் என்பதை யூகித்துக் கொள்ள முடியும்.

பலவீனமான கடவுச்சொல் பயன்பாடு, பொறுப்புக்கள் தெளிவுபடுத்தப்படாமை என்பவற்றின் காரணமாக சைபர் பாதுகாப்பு ஆபத்து உருவாகியுள்ளது. போலி மின்னஞ்சல் டொமைன்களின் பயன்பாடு இதற்கு மூலக் காரணமாகவிருந்த போதிலும், இந்தக் குறைபாடுகளில் இருந்து விடுபடுவதற்கான பரிந்துரைகள் கூட சரியாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. கடன் ஒப்பந்தங்களைச் பரிசோதித்தல், தொடர்பு வழிகளை உறுதிப்படுத்தல், வங்கி கணக்குத் தகவல்களை உறுதிப்படுத்தல் என்பன இங்கு இடம்பெறவில்லை.

மேலும், 2026 ஜனவரி மாதத்தில் இந்தியாவின் எக்சிம் வங்கியுடன் தொடர்புடைய செலுத்துகையின் போது இவ்வாறான சந்தேகத்திற்கிடமான பிரச்சினை தோன்றிய சந்தர்ப்பத்தில், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அது தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவங்கள் காரணமாக நமது நாட்டின் கடன் செலுத்துகை செயற்பாடுகள் தொடர்பில் நிச்சயமற்ற தன்மை உருவாகின்றது. பங்களாதேஷ், ஈக்குவடோர்டிய, வியட்நாம், இந்தியா, தாய்லாந்து போன்ற நாடுகளில் இவ்வாறான விடயங்கள் இடம்பெற்றுள்ளதால், அந்நாடுகளிலிருந்து பாடத்தைக் கற்றுக் கொள்ளுங்கள்.

நாட்டிற்குக் காணப்படும் மிகப்பெரிய பொறி ஐ.எம்.எப்.கூறும் இலக்குகளை விட அதிகமான வரித் தொகையைச் சுமத்துவதாகும். 2.3% இலிருந்து 5.4% வரை முதன்மை மீதியை உயர்த்தி ஐ.எம்.எப். இன் அடிமைகளாக அரசாங்கம் மாறியுள்ளது. எதிர்க்கட்சியில் இருக்கும் போது பாட்டாளி வர்க்கம் பற்றிப் பேசிய போதிலும், தற்சமயம் இந்த அரசாங்கம் ஐ.எம்.எப். இன் பொம்மைகளாக மாறியுள்ளது. இதனால் நாட்டின் வாழ்க்கைச் சுமை மற்றும் பணவீக்கம் குறையவில்லை.

நாட்டின் பணவீக்கம் அதிகரித்துள்ள வேளையில், மாதமொன்றுக்கு 17,000 ரூபாவுடன் வாழ முடியுமென தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் கூறுகின்றது. இந்தப் பொய்த் தரவுகளின் அடிப்படையில் செயற்படும் அரசாங்கத்திற்கு இன்று வறுமையை ஒழிப்பதற்கான வேலைத்திட்டமொன்று இல்லை. நுண், மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகளை நாசமாக்குவது மாத்திரமன்றி எரிபொருள் மாபியாவைப் பாதுகாப்பதற்காக சூரிய சக்தியை பலவீனப்படுத்தி வருகின்றது

இந்த வரிச்சுமை சுமத்தப்படும் போது தொழில்முயற்சியாண்மைகள் உடைந்து போகின்றன. இது சுற்றுலா மற்றும் விவசாயத்துறைக்குப் பாதிப்பை ஏற்படுத்துவதாக அமைந்து காணப்படுகின்றன. சமூகத்தில் பிறக்காத குழந்தை, கர்ப்பிணித் தாய் முதல் ஒவ்வொரு பிரஜை வரையிலும் இந்த வரிச்சுமை எல்லையற்ற அழுத்தத்தை இவர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளன. இப்போதாவது அரசாங்கம் வாக்குறுதியளித்த வளமான நாடும் அழகான வாழ்க்கையும் என்ற நோக்கையும் மறந்து, ஐ.எம்.எப். வரி இலக்கைத் தாண்டிச் சென்று மேலதிக வரிச்சுமையைச் சுமத்தி வருகின்றது என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button