இலங்கை

எலும்புக் கூடுகள் தொடர்பாக எவ்வித சோதனை நடத்துவது?;  ஒக்டோபர் 14 இல் கலந்துரையாடல்

செம்மணி மனிதப் புதைகுழியில் மீட்கப்படும் மனித எலும்புக் கூடுகளின் கால நிர்ணயம் தொடர்பாக வேறு ஏதாவது பரிசோதனைகளுக்கு போக வேண்டுமா இல்லையா என்பது தொடர்பாக, அறிக்கைகளின் அடிப்படையில் ஒக்டோபர் மாதம் 14ம் திகதி அளவில் மேலதிகமான கலந்துரையாடல் நடைபெறும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

செம்மணி மனிதப் புதைகுழியில் யாழ்ப்பாணம் நீதிவான் செ.லெனின்குமார் முன்னிலையில் நேற்று இடம்பெற்ற திறந்த நீதிமன்றில் குறித்த விடயம் தீர்மானிக்கப்பட்டது என சட்டத்தரணி ரனித்தா ஞானராஜா தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இதேவேளை, நேற்று மாலை 3 மணியளவில் நிர்வாக ரீதியான கலந்துரையாடல் இந்த அகழ்வுப் பணிகளும் அதனோடு தொடர்புடைய வேலைகளும் எவ்வாறு நடைபெற வேண்டும் என்பது தொடர்பாக, நீதிவான் லெனின்குமார் முன்னிலையில் மனித அகழ்வுப் பணி நடைபெற்ற இடத்தில் திறந்த நீதிமன்ற அமர்வாக இடம்பெற்றது.

இந்த அமர்வில் குற்றப் புலனாய்வு விசாரணைப் பிரிவின் அதிகாரிகளும், நிபுணர்களான பேராசிரியர் ராஜ் சோமதேவாவும், அதே நேரத்திலே சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவனும், யாழ்ப்பாண சட்டத்தரணிகள் சங்கத்தினுடைய பிரதிநிதிகளும், பாதிக்கப்பட்டவர்கள் சார்பான சட்டத்தரணிகளும், முறைப்பாட்டாளரது சட்டத்தரணியும் பங்குபற்றினார்கள்.

இதன்போது தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவா இந்த அகழ்வுப் பணியையும் முன்னோக்கி நகர வேண்டிய விடயங்கள் தொடர்பாகவும், தன் சார்பாகவும், சட்ட வைத்திய அதிகாரி சார்பாகவும் ஒரு முன்வைப்பை வைத்தார். அந்த விடயம் தொடர்பாக முழுமையாக கலந்துரையாடல் இடம்பெற்றதுடன், அதில் சில விடயங்கள் தீர்மானிக்கப்பட்டன.

இந்த அடிப்படையில் ஏற்கனவே செய்யப்பட்ட ஜிபிஆர் ரேடார் ஸ்கானர் பயன்படுத்தப்பட்ட ஆய்வு தொடர்பான விடயம் தொடர்பான முழுமையான அறிக்கை ஒன்றினை விஞ்ஞான பொருள்கோடலோடு நீதிமன்றத்துக்கு சமர்ப்பிப்பது எனவும் இரண்டாவதாக இது தொடர்பாக புதைகுழியிலிருந்து ஏற்கனவே அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ள சான்றுப்பொருட்கள், பிற சான்றப்பொருட்கள் தொடர்பான விடயங்கள் தொடர்பாக முழுமையான ஒரு அறிக்கையினை நீதிமன்றத்துக்கு தெரிவிப்பது எனவும் இந்தக் கலந்துரையாடலில் உடன்பாடு காணப்பட்டது.

இது தொடர்பாக மேலதிகமான கலந்துரையாடல், கால நிர்ணயம் தொடர்பாக வேறு ஏதாவது பரிசோதனைகளுக்கு போக வேண்டுமா,இல்லையா என்பது தொடர்பாக, இந்த இரண்டு அறிக்கைகளினை பயன்படுத்திய அடிப்படையில் நீதிமன்றத்துக்கு சமர்ப்பித்ததன் பின்னர் மேலதிகமான கலந்துரையாடல் இதே தரப்பினர்களுடன் நடைபெறும் என்று ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அந்த கலந்துரையாடல் ஒக்டோபர் மாதம் 14ம் திகதி மாலை 3 மணியளவில் மன்றில் நடைபெறும்.

இதேவேளையி, மேலதிகமாக பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் சில சமர்ப்பணங்கள் செய்யப்பட்டது. விசாரணை அறிக்கை தொடர்பாகவும், அதே வேளை ஏற்கனவே மனித எலும்புத் தொகுதிகள் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அதாவது தடயவியல் குழு, தொல்லியல் ஆய்வுக்குழு, மற்றது சட்ட வைத்திய அதிகாரியினால் ஆவணப்படுத்தப்பட்ட புகைப்படங்கள் அனைத்தையும் நீதிமன்றத்தின் கோப்புக்கு கொண்டு வரும்படியும்,இதேவேளையில் கட்டுக்காவல் தொடர்பான விடயங்களை முழுமையாக மீண்டும் உறுதிப்படுத்தப்படும்படியும், அதன் தொடர்பாக நீதிமன்றம் கவனத்தை கொள்ள வேண்டும் என்றும் ஏனைய நிலுவையிலுள்ள அறிக்கைகள் அனைத்தையும் மன்றினுடைய வழக்கேட்டின் பகுதியாக்கும்படியும் விண்ணப்பங்கள் செய்யப்பட்டது.

அது தொடர்பான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன் கட்டளையும் ஆக்கப்பட்டிருக்கிறது, இந்த குறிக்கப்பட்ட அறிக்கைகள் தொடர்பான விடயங்களை பின்தொடர்ந்து, மேலதிக அறிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டிய பகுதியினரிடமும், நிபுணர்களிடமும் நிறுவனங்களிடமிருந்தும் பெற்றுக்கொள்ளும்படி தீர்மானிக்கப்பட்டது.

மனித எலும்பு ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும் என்பது குறித்த கலந்துரையாடலில் வலியுறுத்தப்பட்டது. அது தொடர்பான மேலதிகமான தீர்மானங்கள் பிற சான்றப்பொருட்கள் தொடர்பான ஆய்வு அறிக்கை வந்ததுக்கு பிறகு, அது தொடர்பான விடயம் தீர்மானிக்கப்பட்டு செய்யப்படலாம் என்று உடன்பாடு எட்டப்பட்டது.

இந்த அகழ்வுப் பணிகளை தொடர்ச்சியாக செய்வது தொடர்பான தீர்மானம் 19ம் திகதி அளவில், அகழ்வுப் பணி நடக்கும் கடைசி வாரத்தில் தீர்மானிக்கப்படும் – என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button