இலங்கை

மாகாண சபைத் தேர்தலுக்கு இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும்;  மிஸ்ரியிடம் வலியுறுத்தினோம்

மாகாண சபைத் தேர்தலை நடத்தும் நோக்கமே இல்லை என்பதை இந்திய வெளியுறவு அமைச்சின் செயலாளர் விக்ரம் மிஸ்ரியிடம் வலியுறுத்திய தமிழ் தரப்புக்கள் இந்தியா அதற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தின என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

நாட்டிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு வருகைதந்த இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரியை தமிழ் தேசிய கட்சிகளின் பிரதிநிதிகள் நேற்றையதினம் சந்தித்து கலந்துரையாடினார்.

கொழும்பில் உள்ள இந்திய இல்லத்தில் நேற்று நண்பகல் நடைபெற்ற சந்திப்பில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் எம்.ஏ.சுமந்திரன், இரா.சாணக்கியன், ப.சத்தியலிங்கம், க.கோடீஸ்வரன் ஆகியோரும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி சார்பில் த.சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இந்திய வெளியுறவு அமைச்சின் செயலாளருடனான 45 நிமிடங்கள் வரையான சந்திப்பு தொடர்பில் தினக்குரலுக்கு கருத்து தெரிவித்த போது இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்திய வெளியுறவு அமைச்சின் செயலாளருடனான சந்திப்பில் மாகாண சபை தேர்தலைப் பற்றியும், புதிய அரசியலமைப்பைப் பற்றியும், காணி விடயங்களைப் பற்றியும் தான் பேசினோம்.தமிழ் பேசும் மக்களின் அரசியல் பேரவையைப் பற்றிச் சொன்னோம். அவர் கேள்விப்பட்டதாகவும் அது ஒரு நல்ல விடயம் என்றும் கூறினார்.

புதிய அரசியலமைப்பு தொடர்பாக அரசாங்கத்திற்கு என்ன எண்ணம் இருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா என்று கேட்டார். எங்களுக்கு எந்தவிதமான தகவலும் தெரியாது. ஏனென்றால், அவர்கள் சொன்னதைத் தவிர வேறு எதுவும் செய்யவில்லை. அது அப்படியே இருக்கிறது எனத் தெரிவித்தோம்.

மற்றபடி, மாகாண சபைத் தேர்தலை வைக்காமல் இழுத்தடிக்கிறார்கள் என்று கூறினோம்.

அரசாங்கம் சொல்வதிலிருந்தே, மாகாண சபைத் தேர்தலை வைக்கும் நோக்கமே இல்லை என்பதை கூறினோம். இந்தியா இதற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று சொன்னோம்.

“நாங்கள் எப்போதுமே தெளிவாக அதைச் சொல்கிறோம். அதை நாங்கள் திரும்பத் திரும்ப வலியுறுத்துவோம்” என்று சொன்னார்.

காணி விடுவிக்கும் விடயத்தைப் பற்றி விவரமாகத் தரவுகள் கேட்டு அறிந்தார். ஒன்றுமே விடுவிக்கப்படவில்லை என்பதை தெரிவித்தோம்.

கடந்த உள்ளூராட்சித் தேர்தல் காலப் பகுதியிலே வடமாகாணத்திலே கரையோரப் பிரதேசத்திலே 6,000 ஏக்கர் காணிகளை சுவீகரிப்பதற்கு எடுத்த நடவடிக்கைகள் கடும் எதிர்ப்பு மற்றும் எனது வழக்கு காரணமாக கைவிடப்பட்டிருந்தது என்பதை கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார் – என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button