உலகம்

அமெரிக்கா – சீனா இடையே மீண்டும் முற்றிய தொழில்நுட்பப் போர்

செயற்கை நுண்ணறிவு (AI) துறையின் அபரிமிதமான வளர்ச்சிக்கு அடிப்படையாக விளங்கும் கட்டமைப்பு வசதிகளைப் பாதுகாக்கும் நோக்கில், சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் புதிய மாடல் தரவு மைய உதிரிபாகங்களுக்கு (Data Center Components) தடை விதிக்க டிரம்ப் நிர்வாகம் வரைவுத் திட்டம் தயாரித்து வருவதாக இத்துறை சார்ந்த நான்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க தொலைத்தொடர்புத் துறையைக் கண்காணிக்கும் கூட்டாட்சி தொலைத்தொடர்பு ஆணைக்குழு (FCC), புதிய சீன ஒளியியல் டிரான்சீவர்களை (Optical Transceivers) இறக்குமதி செய்ய தடை விதிப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.

இந்த சாதனங்கள் தரவு மையங்களுக்குள் பைபர்-ஆப்டிக் கேபிள்கள் வழியாக ஒளியின் வேகத்தில் தரவுகளைக் கொண்டு செல்லப் பயன்படுகின்றன.

இந்தத் தடையை நடப்பாண்டிலேயே வெளியிட்டு அமல்படுத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

இதுவரை வெளிவராத இந்த நடவடிக்கை, அமெரிக்க தரவு மையங்களில் இருந்து சீன நிறுவனங்கள் தரவுகளைத் திருடுவதையும், தீம்பொருள்களை (Malware) நிறுவுவதையும் அல்லது சேவைகளுக்கு இடையூறு விளைவிப்பதையும் தடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்தத் தரவு மையங்களில்தான் AI மாதிரிகளைப் பயிற்றுவிப்பதற்கும் இயக்குவதற்குமான சிப் (Chip) சாதனங்கள் வைக்கப்பட்டுள்ளன.

இந்தக் கட்டுப்பாட்டை FCC மாற்றியமைக்கவோ அல்லது கைவிடவோ வாய்ப்புள்ளது என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இருப்பினும், அதிநவீன அமெரிக்கத் தொழில்துறைகளின் விநியோகச் சங்கிலியில் (Supply Chain) சீனா கால் பதிப்பதற்கு முன்பே அதைத் தடுக்க டிரம்ப் நிர்வாகம் முயல்வதற்கு இது மற்றொரு உதாரணமாகும்.

இதுகுறித்து வாஷிங்டனைச் சேர்ந்த ‘பீக்கன் குளோபல் ஸ்ட்ரேட்டஜிஸ்’ நிறுவனத்தின் AI கொள்கை நிபுணர் திவ்யான்ஷ் கெளஷிக் கூறுகையில், “டிரான்சீவர்கள் நிச்சயம் ஆபத்தை ஏற்படுத்துகின்றன. தரவு மையங்களின் விரிவாக்கம் அதிகரித்து வரும் நிலையில், அதன் விநியோகச் சங்கிலி ஆரம்பத்திலிருந்தே பாதுகாப்பாக இருப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும்” என்றார்.

சீனா எச்சரிக்கை

இதுகுறித்து வெள்ளை மாளிகையும் FCC-யும் எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. ஆனால் வாஷிங்டனில் உள்ள சீனத் தூதரகம், வணிகச் சமூகங்களின் நியாயமான குரல்களுக்கு அமெரிக்கா செவிசாய்க்க வேண்டும் என்றும், சீன நிறுவனங்கள் மீது அவதூறு பரப்புவதையும் தடைகள் விதிப்பதாக அச்சுறுத்துவதையும் நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button