சவூதி சிறையிலுள்ள அனோஜன் விடயம் குறித்து ஆராய்வு

சவுதி அரேபியாவில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள அனோஜன் என்ற இளைஞன் விடயத்தில் வெளிவிவாகர அமைச்சினால் இராஜதந்திர ரீதியில் தலையிட்டு சவுதி அரச அதிகாரிகளுடன் கலந்துரையாடி மன்னிப்பு அல்லது வேறு ஏதாவது நிவாரணத்தை பெற முடியுமா? என்று ஆராயப்படுகின்றது என்று அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
வெளிவிவகார அமைச்சின் ஊடாக இராஜதந்திர ரீதியில் தலையிடுவது தொடர்பில் ஆராயப்படுகின்றது என்று அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
சவுதி அரேபியாவுக்கு தொழிலுக்காக சென்றிருந்த போது, சமூக ஊடகத்தில் முஹம்மது நபி தொடர்பில் தவறாக பதிவிட்ட அனோஜன் என்ற இலங்கை இளைஞனுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள விடயத்தில் அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் இதனைக் கூறினார்.
இதன்போது அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,
சிவராசா அனோஜன் சவுதி அரேபியாவில் நிறுவனமொன்றில் பணியாற்றும் போது, அந்நாட்டு சட்டத்திற்கு எதிராக வெளியிட்ட கருத்து தொடர்பில் அவர் தவறை ஒப்புக்கொண்டுள்ளார். அவருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. வெளிவிவகார அமைச்சு குடும்பத்தினருடன் கலந்துரையாடி கொன்சியூலர் பிரிவு செயற்படுகின்றது. இந்த வழக்கு தீர்ப்பு தொடர்பில் மேன்முறையீடு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. அந்நாட்டு சட்டத்தின்படி மேன்முறையீட்டுக்கு செல்வதற்கு குறைந்தளவான காலமே உள்ளது.
அத்துடன் இராஜதந்திர ரீதியில் தலையிட்டு சவுதி அரச அதிகாரிகளுடன் கலந்துரையாடி மன்னிப்பு அல்லது வேறு ஏதாவது நிவாரணத்தை பெறக்கூடிய தன்மை தொடர்பில் ஆராய்ந்து வருகின்றோம். இந்த நடவடிக்கை முடிவடையும் வரையில் ரியாத் தூதரகம் ஊடாக இராஜதந்திர ரீதியில் நடவடிக்கை எடுக்கப்படுகின்றது என்றார்.
![]()