கவிதைகள்

வையத்து வாழ்வு மன மகிழ்வாகும்!…. கவிதை… ஜெயராமசர்மா

பார்க்கக் கூடாததைப் பார்க்கக் கூடாது
கேட்கக் கூடாததைக் கேட்கக் கூடாது
ஒவ்வா எதையுமே உண்ணக் கூடாது
ஒழுக்கம் தவறி நடக்கக் கூடாது

ஒழுக்கம் தவறினால் உலகம் இகழும்
உலகம் இகழ்ந்தால் உடையும் அனைத்தும்
அனைத்தும் உடைந்தால் ஆனந்தம் அகலும்
ஆனந்தம் அகன்றால் அவனியே வெறுக்கும்

அவனியில் வாழவே அனைவரும் பிறந்தோம்
பிறந்தோம் இறந்தோம் என்பதா வாழ்க்கை
வாழ்க்கை என்பது ஒருமுறை வருவதே
வருவதை காப்பது அவசியம் அல்லவா

எப்படி வாழலாம் என்பதை அறியா
தப்பிதப் பாதையில் தொடர்கிறார் யாவரும்
குப்புற விழுந்ததும் விக்கித்து நிற்கிறார்
தப்பிதப் பாதையைத் தவிர்ப்பதே முக்கியம்

மூர்க்கத் தனத்தை விட்டிடல் அவசியம்
தொடர்ந்தால் வாழ்க்கை சிதைந்தே போகும்
நல்லவர் துணையை நாடிடல் அவசியம்
நாடுவார் வாழ்க்கை நன்றாய் அமையும்

நல்லதை நாளும் எண்ணிடல் வேண்டும்
நல்லவர் உரையைக் கேட்டிடல் வேண்டும்
நல்லவர் அருகில் வாழ்ந்திட வேண்டும்
நல்லன அனைத்தும் நம்மகம் அமரும்

நல்லன அனைத்தும் நம்மகம் அமர்ந்தால்
நாளும் நமக்கு வசந்தமாய் தெரியும்
வாழலாம் என்னும் நம்பிக்கை மலரும்
வையத்து வாழ்வு மன மகிழ்வாகும் !

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ் மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண், அவுஸ்திரேலியா

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button