கோட்டாபயவின் தொலைபேசி உரையாடலை வெளியிட்டு மிரட்டும் விதத்தில் செயற்பாடு; குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை தொலைபேசியில் தொடர்புகொண்டு உரையாடிய சான் கணேகொட எனும் சிவில் சமூக செயற்பாட்டாளர்,அந்தக் குரல் பதிவை வெளியிட்டு அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டதாகக் கூறி அவருக்கு எதிராக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் நேற்று வியாழக்கிழமை முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் மற்றும் மின்சாரத்தை பயன்படுத்துவோர் சங்கத்தின் தலைவர் எம்.டி.ஆர். அதுல ஆகியோர் இந்த முறைப்பாட்டைச் செய்துள்ளனர்.
இது தொடர்பிலும் இதற்குப் பின்னால் உள்ள வெளிநாட்டுச் சக்திகள் குறித்தும் விரிவான விசாரணை நடத்துமாறு அவர்கள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் முறைப்பாடு செய்துள்ளனர்.
இந்த முறைப்பாட்டை கையளித்த பின்னர் அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் ஊடகங்களுக்கு இது பற்றி தெரிவிக்கையில்,
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை தொலைபேசியில் அழைத்து, அவரை அசௌகரியத்துக்கு உள்ளாக்கும் வகையிலும் அச்சுறுத்தும் தொனியிலும் குரல் பதிவொன்றை வெளியிட்டுள்ள சிவில் சமூக செயற்பாட்டாளர் என கூறிக்கொள்ளும் சான் கணேகொட என்பவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியே நாம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு வருகை தந்தோம்.
இவ்வாறான குரல் பதிவுகளை வெளியிட்டு அச்சுறுத்தும் நபருக்குப் பின்னால் வெளிநாட்டுச் சக்திகள் அல்லது தொண்டு நிறுவனங்கள் செயற்படுகின்றனவா என்பது குறித்து சந்தேகம் காணப்படுகின்றது. நாட்டை அல்லது அரசாங்கத்தை நிலைகுலையச் செய்யும் சதித்திட்டம் காணப்படுகிறதா என்பது தொடர்பிலும் ஆராயப்பட வேண்டும். இவர் தற்போதைய ஜனாதிபதி அநுரவுடன் தொடர்பில் இருந்து, எதிர்காலத்தில் அவர் ஓய்வுபெற்ற பின்னரும் இவ்வாறான குரல் பதிவுகளை வெளியிடக்கூடும் என்றார்.
![]()