இலங்கை

ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தனியாரின் காணிகளை மீள வழங்க அரசாங்கம் தயாரில்லை;  கஜேந்திரகுமார் எம்.பி. தெரிவிப்பு

ஜனாதிபதித் தேர்தல், பாராளுமன்றத் தேர்தல், உள்ளுராட்சி சபைத் தேர்தல்களின் போது இராணுவம் தனிநபர்களின் உறுதிக் காணிகளை தன் வசம் வைத்திருப்பதை நிறுத்திக் காணிகள் அனைத்தும் மக்களுக்கே மீள வழங்கப்படுமெனத் தற்போதைய ஜனாதிபதி மற்றும் அரசாங்கத் தரப்பினர் பல தடவைகள் வாக்குறுதி வழங்கினர். இதுதொடர்பாகச் சர்வதேச மட்டத்திலும் பல கருத்துருவாக்கங்களைச் செய்து வந்தனர். ஆனால், தற்போதைய நிலையில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தனிநபர்களின் எந்தவொரு உறுதிக் காணிகளையும் அரசாங்கம் மீள வழங்கத் தயாரில்லை என்பதே யதார்த்தமாகவுள்ளது. குறித்த தனியார் காணிகளை இராணுவ மயமாக்குவதற்கும், சிங்கள மயமாக்குவதற்கும், பெளத்த மயமாக்குவதற்கும் தீர்மானித்து தீவிரமாகச் செயற்பட்டு வருகிறார்கள் எனத் தமிழ்த்தேசியப் பேரவையின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரையை அகற்றுமாறு கோரியும், திஸ்ஸ விகாரை அமைந்துள்ள காணி மற்றும் அதனைச் சூழவுள்ள காணிகளைக் காணி உரிமையாளர்களிடம் மீளவும் கையளிக்குமாறு வலியுறுத்தியும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி பாதிக்கப்பட்ட பொதுமக்களுடன் இணைந்து மாதாமாதம் முன்னெடுக்கும் தொடர் போராட்டம் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை மாலை யாழ் தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு அருகில் முன்னெடுக்கப்பட்டது.

போராட்டத்தில் கலந்து கொண்டு ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் காணிகள் சம்பந்தமாகக் காணப்படும் தெளிவில்லாத் தன்மைகள் தீர்க்கப்பட்டிருந்தப்பதாகவும், வடக்கு- கிழக்கில் போர் காரணமாக காணி தொடர்பான பிரச்சினைகள் தீர்க்கப்பட முடியவில்லை எனவும் ஜூலை-26 ஆம் திகதி காணி அமைச்சு அறிவித்துள்ளது.

வடக்கு- கிழக்கின் கடற்கரைப் பகுதியிலுள்ள ஆறாயிரம் ஏக்கர் காணிகளைச் சுவீகரிக்க எடுத்த நடவடிக்கை போன்று அரசாங்கம் எதிர்காலத்தில் செயற்படவுள்ளதால் மக்கள் தங்கள் காணிகளை அடையாளம் காட்ட முன்வர வேண்டும். இல்லாவிடில், அவற்றை அரச காணிகளாகப் பிரகடனப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த- 70 வருடங்களுக்கு மேலாக ஆட்சி செய்தவர்களை இனவாதிகள் எனவும், அவர்களின் இனவாதப் போக்கினால் தமிழ்மக்கள் பாதிக்கப்பட்டதாகவும், தாங்கள் அவ்வாறு செயற்படமாட்டோம் எனவும் கூறித் தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த போதும் ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்களில் தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் மிக மோசமாகவுள்ளன.

வடக்கு- கிழக்கில் தமிழ்மக்களைக் குறிவைத்துக் கடந்த அரசாங்கங்களை விடத் தற்போதைய அரசாங்கம் மிக மோசமாகச் செயற்படுகின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button