“நீதிபதிகள் ஓய்வுபெறும் வயதெல்லை நீடிப்பு” – என்.பி.பியின் மூத்த உறுப்பினர் எதிர்ப்பு

“நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிப்பது தொடர்பான யோசனை தேசிய மக்கள் சக்தியின் தலைமைத்துவ சபையில் முன்வைக்கப்படவில்லை” என்று சிரேஷ்ட சட்டத்தரணி லால் விஜேநாயக்க தெரிவித்தார்.
தேசிய மக்கள் சக்தியின் தலைமைத்துவ சபை, வழிநடத்தல் குழு மற்றும் செயற்குழு ஆகியவற்றில் இவர் உறுப்பினராக அங்கம் வகிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் விசேட கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்:
“நாங்கள் கட்சிக்கும் அரசாங்கத்திற்கும் எதிராகப் போராடவில்லை; மாறாக, நீதித்துறையின் சுயாதீனத்திற்காகவே போராடுகின்றோம். சுயாதீனமான நீதிமன்றம் இருந்தால் மட்டுமே சமூகத்தில் ஒழுக்கத்தைக் கட்டியெழுப்ப முடியும்.
நீதித்துறைக்கு சுயாதீனம் இல்லையெனில், எங்களால் எங்களது சட்டத்தரணி தொழிலைக் கூட சுதந்திரமாக முன்னெடுக்க முடியாத நிலை ஏற்படும். நாம் ஏதேச்சாதிகாரத்தை நோக்கிப் பயணிக்க வேண்டிய அவசியமில்லை; நம்மிடம் சிறந்த ஜனநாயகக் கட்டமைப்பு உள்ளது.
கடந்த காலங்களில் நீதிமன்றத்தின் செயற்பாடுகளில் தலையிட முற்பட்ட சந்தர்ப்பங்களில் எல்லாம், சட்டத்தரணிகள் சங்கமாக இணைந்து அவற்றை நாம் தோற்கடித்திருக்கின்றோம். தற்போதும் நாம் அனைவரும் ஒன்றாகவே திரண்டுள்ளோம்.
தேசிய மக்கள் சக்தியின் தலைமைத்துவ சபை, வழிநடத்தல் குழு, செயற்குழு உள்ளிட்ட எந்தவொரு அமைப்பிலும் இந்த யோசனைக்கு அனுமதி பெறப்படவில்லை. எனவே, கூட்டத்தில் பங்கேற்றதற்காக எனக்கு எதிராகக் கட்சியால் நடவடிக்கை எடுக்க முடியாது. இது அமைச்சரவையால் மட்டுமே எடுக்கப்பட்ட முடிவு என்றே தற்போது கூறுகின்றனர்” என்றார்.
![]()