சவுதியில் கைதான இலங்கையரான அனோஜனுக்கு 5 வருடம் சிறையும் 27 கோடி ரூபா அபராதமும் விதிப்பு

சமூக வலைத்தளங்களில் நபிகள் நாயகம் குறித்து தவறான கருத்து பதிவேற்றியமை தொடர்பில் சவூதியில் கைதான இலங்கையரான கல்முனையை சேர்ந்த அனோஜன் சிவராஜாவிற்கு 5 வருட சிறைத் தண்டனையும் 30 லட்சம் சவுதி ரியாலும் (இலங்கை ரூபாவில் சுமார் 27கோடி ரூபா) அபராதமும் என தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
சமூக வலைத்தளங்களில் நபிகள் நாயகம் குறித்து தவறான கருத்து பதிவேற்றியமை தொடர்பில் கடந்த ஜூன் 30ஆம் திகதி அவர் பணிபுரிந்த நிறுவனத்தில் தடுத்து வைக்கப்பட்ட நிலையில் ஜூலை 7ஆம் திகதி சவூதி அரசாங்கத்திடம் அனோஜன் ஒப்படைக்கப்பட்டார்.
இதனையடுத்து ஜூலை 27ஆம் திகதி சவூதி நீதிமன்றத்தில் சவூதி நேரப்படி காலை 9 மணிக்கு குறித்த தீர்ப்பு வழங்கப்பட்டதாக அனோஜனின் பெற்றோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது .
மேலும் அனோஜனால் ஆங்கிலத்தில் பேச முடியும் என நீதிமன்றத்தில் குறிப்பிட்ட போதிலும் அரபு மொழிபெயர்ப்பாளர் நியமிக்கப்பட்டு அனோஜனினால் சொல்லப்பட்ட விடயங்கள் வேறு விதமாக சொல்லப்பட்டதாக அனோஜனின் பெற்றோர் கவலை தெரிவித்துள்ளனர்.
முகப் புத்தகத்தில் தன்னிச்சையான பதிவு அல்லாமல் இன்னும் ஒரு முகப் புத்தக நபரால் இந்து மதம்தொடர்பில் இழிவான கருத்து பரிமாற்றத்தினால் அதே கருத்தை மாற்றி அதன் கீழ் அனோஜன் கருத்து பகுதியில் பதிவிட்டதனால் இந்தக் குழப்பம் ஏற்பட்டதாக ஆதாரங்களுடன் குற்றத்திற்கான தூண்டுதலுக்கு குறிப்பிட்ட அந்த முகநூல் உரிமையாளரே காரணம் என அனோஜனின் பெற்றோர் குறிப்பிட்டனர்.
இந்த நிலையில் சவூதி அரேபியா சட்டத்தின் அடிப்படையில் தீர்ப்பு கொடுக்கப்பட்டு 30 நாட்களுக்குள் தீர்ப்பை மீள் பரிசீலனை செய்ய முடியும் என்ற அடிப்படையில் குறித்த தீர்ப்பை மீள் பரிசீலனை செய்யுமாறு கோரிக்கை முன்வைக்கும் முயற்சியை அனோஜனின் பெற்றோர் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
![]()