பலதும் பத்தும்

யாழுக்கான சொகுசு ரயில் பழுதடைந்த போதும் யாழிலிருந்து கொழும்புக்கு வழமையான சேவை

கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து காங்கேசன்துறை நோக்கி நேற்று புதன்கிழமை அதிகாலை பயணித்த சொகுசு புகையிரதம், வெயாங்கொடை புகையிரத நிலையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பழுதடைந்து நின்றதால் பயணிகள் கடும் அசௌகரியத்திற்கு உள்ளாகினர்.

இந்தப் புகையிரதம் காலை 5.45 மணிக்கு கொழும்பு கோட்டையிலிருந்து புறப்பட்டு, காலை 8 மணியளவில் வெயாங்கொடை புகையிரத நிலையத்தை அடைந்தபோது திடீர் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு பழுதடைந்து நின்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நேற்றையதினம் பௌர்ணமி தினமாக இருந்ததால், புகையிரதத்தின் அனைத்து ஆசனங்களும் முன்பதிவு செய்யப்பட்டிருந்ததாகவும், அதனால் பெருமளவான பயணிகள் பயணம் செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

பழுதடைந்த புகையிரதத்தில் இருந்த பயணிகள் பின்னர் வந்த ‘யாழ் தேவி’ கடுகதி புகையிரதத்தில் மாற்றி ஏற்றப்பட்டனர். இதனால் இரு புகையிரதங்களின் பயணிகளும் ஒரே புகையிரதத்தில் பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டதுடன், கடுமையான கூட்ட நெரிசல் மற்றும் பயண அசௌகரியம் ஏற்பட்டது.

பழுதடைந்த சொகுசு புகையிரதம் வெயாங்கொடை நிலையத்திலேயே நிறுத்தப்பட்டு திருத்த வேலைகள் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து,பயணிகளின் வசதிக்காக காலை 10.30 மணிக்கு வெயாங்கொடையிலிருந்து காங்கேசன்துறை நோக்கி விசேட மாற்று புகையிரத சேவையை புகையிரதத் திணைக்களம் இயக்கியது.

அதேநேரம்,மேற்படி சொகுசு புகையிரதத்துக்கு பதிலாக காங்கேசன்துறையிலிருந்து விசேட மாற்று புகையிரதம் ஒன்று வழமைபோல் கொழும்பு நோக்கி நேற்று நண்பகல் சேவையில் ஈடுபட்டது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button