செம்மணிக் குற்றவாளிகள் யாரென இதுவரை தெரியாது?; சோமரத்ன ராஜபக்ஷவின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும்

செம்மணி மனித புதைக்குழி தொடர்பான சாட்சியாளராக கருதப்படும் சோமரத்ன ராஜபக்ஷவின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.
செம்மணி மனித புதைக்குழி தொடர்பிலும் அது தொடர்பான சாட்சியாளரான சிறையில் இருக்கும் சோமரத்ன ராஜபக்ஷவின் பாதுகாப்பு தொடர்பிலும் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
சோமரத்ன ராஜபக்ஷ 1998 மற்றும் 99 காலத்தில் அதனை கூறிய பின்னர் எந்தவொரு அரசாங்கமும் அதனை தொடர்ந்தும் தேடவில்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்த பின்னரே அது தொடர்பில் தெரியவந்ததும் நீதி அமைச்சின் காணாமல் போனோர் பிரிவின் ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட்டு, தற்போது அகழ்வுப் பணிகளுக்காக நிதி ஒதுக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
அத்துடன் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐநா மனித உரிமைகள் பிரதானி ஆகியோர் எமது நடவடிக்கைகளை பாராட்டியுள்ளனர். இந்த நடவடிக்கையில் பல்வேறு கட்டங்கள் உள்ளன. இதில் முதலாவதாக இதனை அடையாளம் காண வேண்டும். குறிப்பாக எவராவது தமது உறவினர்கள் இங்கு இருக்கின்றார்கள் என்று சந்தேகித்தால் அவர்களிடம் டீஎன்ஏ மாதிரியை பெற்றுக்கொள்ள வேண்டும். இதுவரையில் அது நடக்கவில்லை. அது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும். அந்தப் பரிசோதனைக்கு வரவேண்டும். இதனால் நாங்கள் இந்த விடயத்தில் முன்னெடுக்க வேண்டிய சகல நடவடிக்கைகளையும் முன்னெடுக்கின்றோம்.
இதேவேளை சோமரத்ன ராஜபக்ஷ என்பவர் தன்னிடம் தகவல் இருப்பதாக கூறியுள்ள நிலையில், அது தொடர்பான நடவடிக்கைக்கு காணாமல் போனோர் தொடர்பான அதிகாரிகள் சென்றாலும் அவர் கூறும் சில விடயங்களை பார்க்கும் போது ஜனாதிபதி மன்னிப்பை எதிர்பார்ப்பது போலவே இருக்கின்றது. இதனால் அவர் உண்மையில் கூறுகின்றரா இல்லையா என்று தெரியவில்லை. அவர் குற்றவாளியான பின்னர், குற்றவாளிக் கூண்டில் இருந்தே அவர் அதனைக் கூறுகிறார். உண்மையில் கூறுவாராக இருந்தால் அதனை முன்னரே கூறியிருக்கலாம். இதுபோன்ற பிரச்சினைகள் உள்ளன. அவர் சாட்சியாளராக இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவரின் பாதுகாப்பை நூறுவீதம் நாங்கள் உறுதிப்படுத்துவோம்.
அத்துடன் செம்மணியில் குற்றம் செய்தவர்களை கண்டுபிடிக்க வேண்டும். அதற்கான எந்த தகவலும் இதுவரையில் கிடைக்கவில்லை. இன்னும் அந்த மட்டத்திற்கு விசாரணைகள் போகவில்லை. நாங்கள் இன்னும் எலும்புக் கூடுகளை மீட்பதையே செய்கின்றோம். அந்த மரணங்கள் எப்படி நடந்தது என்பது தொடர்பில் பெரிய பிரச்சினைகள் உள்ளன. குறிப்பாக அந்தப் பிரதேசத்தில் குறுகிய காலப்பகுதிக்குள் விடுதலைப் புலிகளும் இருந்துள்ளனர். இந்திய இராணுவத்தினரும் இருந்துள்ளதுடன் துணைப்படைகளும் இருந்துள்ளன. இராணுவம் அதற்கு பின்னரே வந்துள்ளது. இதனால் இறந்தவர்களை அடையாளம் கண்டால் விசாரணை நடவடிக்கைகளை முன்னெடுக்கலாம். அது தொடர்பான நடவடிக்கைகளை சரியாக செய்வோம்.
அத்துடன் குருக்கள் மடம் பகுதியிலும் அகழ்வுகள் நடக்கின்றன. நான் அங்கு ஆராய்ந்துள்ளேன். இது விடுதலைப் புலிகளால் செய்யப்பட்டவை என்று அங்குள்ளவர்கள் கூறுகின்றனர். ஆனால் நாங்கள் அந்த முடிவுக்கு வர மாட்டோம். இப்போது அங்கும் அகழ்வுகள் நடக்கின்றன என்றார்.
![]()