சர்வஜன வாக்கெடுப்பு நடத்துவது அவசியம்; கூட்டு எதிர்க்கட்சி வலியுறுத்து

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதற்கான யோசனையை நிறைவேற்றுவதற்குப் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படுவது அத்தியாவசியமானது என முன்னாள் அமைச்சரான பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
கூட்டு எதிர்க்கட்சியினால் கொழும்பில் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
அந்தக் காலத்தில் ஐக்கிய இராச்சியத்தை பிரதிநிதித்துவப்படுத்திய ஆளுநர் கூட, உயர் நீதிமன்றத்தின் நடவடிக்கைகளில் எந்த வகையிலும் தலையிட முயற்சி செய்யவில்லை. உயர் நீதிமன்றத்தின் கௌரவத்திற்கும் சுயாதீனத்திற்கும் முழுமையான மரியாதையை அளித்தார். ஆனால் இன்று துரதிஷ்டவசமாக, தற்போதைய அரசாங்கம் உயர் நீதிமன்றத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சி செய்கிறது. அரசியல் கரங்களின் மூலம் நீதிமன்றத்தின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் முயற்சியை மேற்கொள்வதை இன்று நாம் கண்முன்னே காண்கிறோம். நிறைவேற்றுத்துறை நீதிமன்றத்தை ஆக்கிரமிக்க முயல்கிறது என்று நாங்கள் கூறினால், அதுதான் உண்மை. அனைத்துச் சட்ட அமைப்புகளின் வரலாற்றிலும் தொடக்கம் முதலே மதிக்கப்பட்டு வரும் ஒரு கோட்பாடு உள்ளது. அதாவது, ஒருவர் தனக்குரிய வழக்கைத்தானே விசாரிக்க முடியாது என்ற கோட்பாடாகும். அதாவது, ஒரு நீதிபதிக்கு ஏதேனும் ஒரு தொடர்பு அல்லது நலன் இருக்கும் பட்சத்தில், அத்தகைய சந்தர்ப்பத்தில் நேரடியாக அந்த வழக்கை விசாரிப்பதற்கு அந்த நீதிபதிக்கு சட்டப்பூர்வமான உரிமை கிடையாது. இது நாகரிகத்தின் தொடக்கத்திலிருந்து இன்று வரை, கிரேக்க காலம், ரோமானிய காலம், இந்தியாவின் சிறந்த சட்டத் தத்துவஞானிகள் அனைவரும் ஏகமனதாக ஏற்றுக்கொண்ட கோட்பாடுதான்.
அரசாங்கத்தின் முயற்சியின்படி உயர் நீதிமன்ற மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளுக்கு மேலும் இரண்டு ஆண்டுகள் சலுகையாக வழங்கப்படும். அது ஒரு பெரிய நன்மை, ஒரு பெரிய சலுகை. இப்போது இதன் சட்டப்பூர்வத்தன்மை குறித்து இறுதி முடிவிற்கு வரும் பொறுப்பை எந்த வகையிலும் அந்த நீதிபதிகளிடமே ஒப்படைக்க முடியாது. ஏனெனில் அவர்கள் அதிலிருந்து நேரடியாகப் பயனடையும் நபர்கள்.
அப்படியானால், இதனை உயர் நீதிமன்றத்தை விட உயர்ந்த ஒரு நீதிமன்றத்திடம் ஒப்படைக்க வேண்டும். அப்படிப்பட்ட ஒரு உயர்ந்த நீதிமன்றம் இன்று நமது நாட்டில் உள்ளது. அந்த நீதிமன்றம்தான் மக்கள் நீதிமன்றம். இந்த விவகாரத்தில் நமது நிலைப்பாடு மிகவும் தெளிவாக உள்ளது. இது குறித்த இறுதி முடிவை எடுக்கும் பொறுப்பை நேரடியாக மக்களிடமே ஒப்படைக்க வேண்டும்.
பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை மட்டும் இதற்குப் போதுமானதாக இருக்காது. கண்டிப்பாகப் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். நாங்கள் இதை மிகவும் தைரியமாகவும் தெளிவாகவும் கூறுகின்றோம். இதன்மூலம் நீதித்துறையின் சுயாதீனத்துவத்தை பாதுகாக்கலாம் என்றார்.
![]()