தமிழக மீனவர்கள் அத்துமீறல்; யாழ்ப்பாணக் கடலில் எதிர்ப்பு போராட்டம்

தமிழக கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களை கண்டித்தும் , அதனை கட்டுப்படுத்த கோரியும் நயினாதீவு கடற்றொழிலாளர்கள் கூட்டுறவு சங்கங்களின் ஏற்பாட்டில் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
நயினாதீவுக்கும் குறிகாட்டுவனுக்கும் இடைப்பட்ட கடற்பகுதியில் எதிர்வரும் வியாழக்கிழமை காலை 9 மணிக்கு , கண்ணாடி இழைப் படகுகளில் சென்று இந்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக நயினாதீவு கடற்றொழிலாளர்கள் அறிவித்துள்ளனர்.
இது குறித்து அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,
இந்திய இழுவை மடிப் படகுகளில் தொடர்ச்சியாக , மனிதாபிமானமற்ற முறையில் எல்லை தாண்டி கடல் வளக் கொள்ளையில் ஈடுபடுவதுடன்,தீவக மற்றும் வடக்கு கடற்றொழிலாளர்களின் பல கோடி ரூபா பெறுமதியான வலைகள் மற்றும் கடற்தொழில் உபகரணங்கள் சேதமாக்கப்படுகின்றன.
அதனால் வடக்கு மீனவர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் இந்திய இழுவை படகுகளைக் கட்டுப்படுத்தக் கோரி கடலில் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளோம்.
வடக்கு மீனவ சங்க பிரதிநிதிகள், கடற்றொழில் சங்கங்களின் சாமாச பிரதிநிதிகள், கடற்றொழிலாளர்கள் இணையம் வடமாகாண பிரதிநிதிகள், ஏனைய கடற்றொழிலாளர் நலன் சார்ந்த அமைப்புக்களின் பிரதிநிதிகள், தனிப்பட்ட ரீதியில் மீனவர்களுக்கு குரல் கொடுப்பவர்கள் என அனைத்து தரப்பினரும் எமது போராட்டத்துக்கு வலுசேர்க்க வியாழக்கிழமை குறிகட்டுவான் பகுதியில் ஒன்று சேர வேண்டும் என கோருகிறோம் – என்றனர்.
![]()