வேர்களை மறந்த விழுதுகள்… கவிதை…. முத்தழகு கவியரசன், திருநெல்வேலி

திருமணம் என்பது வெறும் சடங்கு இல்லை,
அது இரண்டு உயிர்களுக்கு இடையில் போடப்படும்
உறுதிமொழி.
இரண்டு குடும்பங்கள்
கைகோர்த்து எழுப்பும் கோட்டை.
ஆண்டுகளைப் பசியாற்றி வரும் பண்பாடு
அரிசியில் கலந்து அட்சதையாக விழும் தருணம்.
இன்று “லிவ்விங் டுகெதர்” என்கிறார்கள்.
பொறுப்பு இல்லாத உறவு.
உரிமை கேட்காத வாழ்க்கை.
நாளை பிரிந்தால் கண்ணீர் சிந்த
அனுமதி இல்லாத ஒப்பந்தம்.
காதலுக்கு எதிரி இல்லை.
ஆனால் காதல் என்பது
காற்றில் பறக்கும் பஞ்சு இல்லை,
வேர்விட்டு நிற்கும் ஆலமரம்.
அந்த வேருக்கு பெயர்தான் குடும்பம். திருமணம்.
வாழ்வில் அம்மா இருந்தாள், அப்பா இருந்தார்,
பாட்டி கதை சொன்னாள், தாத்தா வழி நடத்தினார்.
அத்தை இருந்தாள், மாமன் சீர் செய்தார்.
ஒரு குழந்தை பிறந்தால்
ஊரே கொண்டாடியது.
ஒரு துக்கம் வந்தால்
சொந்தமே சுமந்தது.
இது வெறும் பந்தம் இல்லை, பாதுகாப்பு.
இது வெறும் சொந்தம் இல்லை.
சமூகத்தின் முதுகெலும்பு.
“லிவ்விங் டுகெதர்” என்பது எளிது.
விருப்பம் இருக்கும் வரை சேர்ந்து வாழ்வது,
வெறுப்பு வந்ததும் பிரிந்து போவது.
இதில் தாலி இல்லை, சத்தியம் இல்லை,
சாட்சி இல்லை, சமூகம் இல்லை.
நாளை குழந்தை பிறந்தால்
அதன் முகவரி என்ன?
யார் அப்பா, யார் அம்மா
என்று சட்டம் கேட்கும்.
உறவு முறிந்தால்
யார் பொறுப்பு என்று நீதி கேட்கும்.
அப்போது “அன்பு மட்டும் போதும்”
என்ற வார்த்தை அனாதையாகி நிற்கும்.
யாரும் பழமைவாதி இல்லை.
ஆனால் மாற்றம் என்பது வேரை வெட்டுவது இல்லை,
கிளையை பரப்புவது.
திருமணம் என்னும் நிறுவனத்தில்
குறைகள் இருக்கலாம்.
வரதட்சணை இருக்கலாம், ஆதிக்கம் இருக்கலாம்.
அதைத் திருத்துங்கள். உடைக்காதீர்கள்.
குப்பை இருக்கிறது என்பதற்காக
வீட்டை கொளுத்துவதில்லை,
பெறுக்கி சுத்தம் செய்கிறோம்.
உறவுக்கு உறுதி வேண்டும்.
அன்புக்கு அர்த்தம் வேண்டும்.
வாழ்க்கைக்கு ஒரு சட்டகம் வேண்டும்.
அந்த சட்டகத்தின் பெயர்தான் குடும்பம்.
நாகரிகம் என்பது மேலைநாட்டு சரக்கை
இறக்குமதி செய்வது இல்லை.
நம் மண்ணின் மனத்தை காப்பது.
காதலியுங்கள், தவறில்லை.
ஆனால் அந்த காதலை கல்யாண மேடை ஏற்றி
காலத்திற்கும் காத்திடுங்கள்.
வேர்கள் இல்லாத விழுதுகள்
வானத்தை தொடாது,
காற்றில் அலைந்து காணாமல் போகும்.
குடும்பம் என்னும் வேரை
மறக்காதீர்கள்.
அதுதான் நம்மைத் தமிழராக
வாழ வைக்கிறது.

![]()