நீதித்துறை சுயாதீனத்தில் தலையிட்டு தனது வீழ்ச்சியை அநுர தானே தேடிக்கொள்வார்; கடும் எதிர்ப்பையும் மீறி நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை நீடிக்க அரசு முடிவு செய்துள்ளது

உயர் நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை நீடிப்பதற்கு அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கையானது எதிர்காலம் குறித்துச் சரியாகச் சிந்திக்காமல் எடுக்கப்பட்ட ஒரு முடிவாகவே அமையும் என்பதுடன், கடந்த காலங்களில் நீதித்துறையின் சுயாதீனத்தில் தலையிட முயன்றதால் தங்களது வீழ்ச்சியை தேடிக்கொண்ட ஜனாதிபதி பட்டியலில் அநுரகுமார திஸாநாயக்கவின் பெயரும் உள்ளடக்கும் நிலைமை ஏற்படும் என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.
உயர் நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை 2 வருடங்கள் நீடிப்பதற்காக அரசியலமைப்பில் திருத்தங்களை செய்வதற்கான யோசனையை அமைச்சரவையில் சமர்ப்பிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ள நிலையில் அது தொடர்பில் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவிலேயே சாலிய பீரிஸ் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,
உயர் நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை 2 வருடங்கள் நீடிப்பதற்காக அரசியலமைப்பில் திருத்தம் செய்வதற்கும், ஏனைய நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதையும் இரண்டு ஆண்டுகள் நீடிப்பதற்குமான யோசனையொன்றை நீதி அமைச்சு அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
வழக்குகள் தேங்குவததைத் தடுப்பதற்காக அனுபவமிக்க நீதிபதிகளை சேவையில் தக்கவைத்துக் கொள்வதற்கான ஒரு எளிய நடவடிக்கையாக இதற்கு ஆதரவளிப்பவர்கள் இதனை அறிமுகப்படுத்தியபோதிலும், இதனால் அந்தப் பிரச்சினை தீரப்போவதில்லை என்பதுடன், இது இலங்கையின் நீதித்துறைக்குக் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும், எதிர்காலம் குறித்துச் சரியாகச் சிந்திக்காமல் எடுக்கப்பட்ட ஒரு முடிவாகவே அமையும்.
சட்டத்தின் ஆட்சி மற்றும் நீதித்துறையின் சுயாதீனம் தொடர்பான பிரச்சினைகளில் அச்சமின்றியும் எதிர்கால தொலைநோக்குப் பார்வையுடனும் பலமுறை கொள்கைரீதியான நிலைப்பாடுகளை எடுத்த நீதித்துறை சேவைச் சங்கத்தின் உறுப்பினர்கள், ஏகமனதாக இந்நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்தமைக்கான காரணம்தெளிவாகிறது.
இந்நடவடிக்கையின் பாரிய பாதகமான தாக்கம் வரவிருக்கும் பல தசாப்தங்களில் காணப்படும் என்பதுடன், தற்போதைய ஜனாதிபதி, பாராளுமன்றம் மற்றும் ஓய்வுபெறும் வயது நீடிக்கப்படும் நீதிபதிகளின் பதவிக்காலத்திற்கும் அப்பால் நீதித்துறையைப் பாதகமாகப் பாதிக்கும்.
கடந்த காலத்தில் இலங்கையின் நீதித்துறையின் சுயாதீனத்தில் தலையிட முயன்று, இறுதியில் தங்களது அத்தகைய நடவடிக்கைகளினாலேயே தங்களது வீழ்ச்சியைத் தேடிக்கொண்ட ஏனைய ஜனாதிபதிகளின் பட்டியலில் அநுரகுமாரவும் சேர்க்கப்படக்கூடும்.
சிரேஷ்ட நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதற்கு அரசியலமைப்புத் திருத்தமொன்றை அறிமுகப்படுத்த வேண்டியுள்ளது, ஏனெனில் அந்த வயது எல்லை நீதித்துறையின் சுயாதீனம் பற்றிக் குறிப்பிட்டுள்ள அரசியலமைப்பின் பகுதியில் சேர்க்கப்பட்டுள்ளது. நீதிபதிகளை நியமித்தல் மற்றும் நீக்கும் நடைமுறை, நீதிபதிகளின் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் போன்றவை பற்றிக் குறிப்பிடப்பட்டிருப்பதும் அதே அத்தியாயத்திலேயே ஆகும்.
அரசியலமைப்புத் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டியது, பொதுமக்கள் மற்றும் பங்குதாரர்கள் கலந்தாலோசிப்பதற்கான வாய்ப்பை இழக்கச் செய்யும் ஒரு இரகசிய நடைமுறை மூலமல்லாமல், அனைவரதும் கருத்துக்களைக் கேட்டறியும் நடைமுறை மூலமாகும். இந்தச் சம்பவத்தில், எந்தவொரு பங்குதாரரிடமிருந்தோ அல்லது பொதுமக்களிடமிருந்தோ எந்தவொரு கருத்துக்கேட்பும் நடத்தப்படவில்லை.
இலங்கைத் தலைவர்கள் பொதுமக்களின் நன்மைக்காக எனக் கூறிக்கொண்டு, உண்மையில் தங்களது அரசியல் இலக்குகளை நிறைவேற்றிக் கொள்வதற்காகப் பல சந்தர்ப்பங்களில் அவசர அரசியலமைப்புத் திருத்தங்களை அறிமுகப்படுத்தியுள்ளனர்.
பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இத்திருத்தங்கள் அவற்றினால் ஏற்படும் பாதகமான விளைவுகள் குறித்து யோசிக்காமலேயே நிறைவேற்றப்பட்டன. சிறிமாவோ பண்டாரநாயக்கவின் குடியுரிமையை இரத்து செய்வதை இலகுவாக்கிய 1ஆவது திருத்தம், 1977 பாராளுமன்றத்தின் ஆயுட்காலத்தை ஆறு ஆண்டுகள் நீடித்த 4ஆவது திருத்தம், மற்றும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் சர்வாதிகார அதிகாரங்களைப் பலப்படுத்திய 18ஆவது மற்றும் 20ஆவது திருத்தங்கள் அதற்குச் சில உதாரணங்கள் மட்டுமே.
சிரேஷ்ட நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதற்கும், அவர்களது பதவிக்காலத்தை நீடிப்பதற்கும், கருத்துக்கேட்பு நடைமுறையின்றி இரகசியமாகத் திட்டமிடப்பட்டுள்ள இத்தகைய திருத்தமானது நீதித்துறையின் சுயாதீனம் குறித்த கேள்விகளை எழுப்பும்.
உண்மையில் இத்தகைய திருத்தமானது, ஒருபோதும் இத்தகைய மாற்றத்தை விரும்பாத நீதித்துறை உறுப்பினர்களுக்குச் செய்யப்படும் ஒரு அவமதிப்பும் சவாலுமாகும் என்றார்.
![]()